வேங்கை மகன்
பகுதி 11 : நல்மொழி தந்த நம்பிக்கை
சோழ தூதுவனை மீட்கும் எண்ணத்தில் வெகுண்டெழுந்தவர்களைப் பரமன் மழபாடியாரின் வார்த்தைகள் திகைப்படையச் செய்ய, குழப்பத்தில் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து செய்வதறியாது இருந்தனர்.
" அப்படி என்ன சங்கடம்??. பரமன் மழபாடியார் கூறுவது குழப்பாய் இருக்கிறதே??. "
உள்ளத்தில் எழுந்த குழப்பத்தின் முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியில் கேள்வி எழுப்பினார் அப்ரமேயர்.
" பொறுங்கள். அப்ரமேயரே... அதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசுவதற்குத்தானே உங்களை அழைத்திருக்கிறேன். அனைவரும் கலந்தாலோசித்து சரியான முடிவினை எடுக்கலாம். "
ஆழ்கடலின் அமைதியை ஒத்த அநிருத்தரின் பதிலில், ஆர்ப்பரிக்கும் அலைகடலின் மனவோட்டத்தில் இருந்த இளவரசருக்கு திருப்தி அடையாததை அவரது முக உணர்ச்சிகள் வெளிகாட்டியது.
" பொறுமையாய் இருந்தால், தூதுவனை மீட்க வேண்டாமா??. நாம் அனுப்பிய தூதுவனை சிறைப்பிடித்து நம் மன்னரை அவமதித்திருக்கிறார்கள். அதைத் துடைத்தெறிய வேண்டாமா?"
இளந்துடிப்பில் வெகுண்டெழுந்த இளவரசரின் வாயிலிருந்து அர்ச்சுனன் சரம்போல வார்த்தைகள் வேகமாக வெளிவந்தது. அவரது ஆக்ரோசத்தைக் கண்ட மாமன்னர் ராஜராஜர் தன் மௌனத்தைக் கலைத்து பேசத் தொடங்கினார்.
" இராஜேந்திரா!!!!. எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க பழகிக் கொள். பதற்றத்திலும், அவசரத்திலும் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது. எதிலும் வேகத்தை மட்டுமே கொண்டு வெற்றி அடைய முடியாது. மனதில் நிதானம் இருந்தால் மட்டுமே எதிரியின் பலத்தை அளவிட முடியும். அவர்களின் பலம் பலவீனம் எது?, நமது பலம் பலவீனம் எது என்பதை முதலில் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் முழுப்பலத்துடன் எதிரியை எதிர்கொள்ள முடியும். முதலில் அநிருத்தர் சொல்வதை முழுமையாகக் கேள். பிறகு உன் அபிப்ராயங்களைச் சொல்லலாம்"..
அநிருத்தரின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணங்கள் உண்டு என்பதை உணர்ந்த மன்னர், இளவரசரின் கோபத்திற்கு கடிவாளமிட்டு அமைதிப்படுத்தினார்.
மன்னரின் வார்த்தைகளைக் கேட்ட இளவரசரின் பார்வை, வந்தியத்தேவரை நோக்கியது.
" அமைதியாக இரு... அது பற்றி பிறகு பேசலாம்" என்று வந்தியத்தேவரும் கண்களால் கனிவுடன் அதையே வெளிப்படுத்தினார். மதங்கொண்ட யானையாய் வெகுண்டெழுந்த இளவரசர், அவரது கண்களின் வசியத்திலும், அன்பின் வீச்சிலும் இளங்கன்றாய் அமைதியுடன் அமர்ந்தார். அவரது மனது, குழப்பங்களை விடுத்து தெளிவுடன் மற்றவரின் வார்த்தைகளைக் கேட்க காத்திருந்தது.
" அநிருத்தரே, நீங்கள் தொடருங்கள்" என்று மன்னர் உத்தரவிட, அமைச்சர் தனது எண்ணங்களை விளக்கினார்.
" நம் மன்னரின் செய்தியை உதாசீனப்படுத்தி, தூதுவனை சிறை வைத்திருக்கிறார்கள். சேர தேசத்தோடு கூட்டு வைத்துக் கொண்டு, நம்மை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இச்செயல் நடந்துள்ளதாகத் தெரிகிறது. "
" ஆம். அநிருத்தரே... எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக உணர்கிறேன் "
" சரியாகச் சொன்னீர்கள். வந்தியத்தேவரே... எல்லாம் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு காய் நகர்த்தப்பட்டிருக்கிறது. "
" ஓ.... அப்படியெனில் நமக்காக விரிக்கப்பட்ட வலை இது.. சரிதானே சேனாதிபதியாரே..."
" ஆமாம். அபர்மேயரே..நம்மை சிக்க வைக்கும் எண்ணத்தில் விரிக்கப்பட்டுள்ள சதி வலை இது.."
" மேலே கூறுங்கள். சேனாதிபதியாரே!!"
வந்தியத்தேவர் இவ்வாறு கூற, அங்கிருந்தவர்கள் அநிருத்தரின் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர். அநிருத்தரிடம் இருந்த திறமை வாய்ந்த ஒற்றர் படையின் மூலம், அவர் அனைத்து தகவல்களையும் திரட்டி வைத்திருந்ததை உணர்ந்ததாலும், அவரது மதிநுட்பதில் மீதிருந்த நம்பிக்கையாலும் மன்னர் உட்பட அனைவரும் அவரது அறிவுரைகளை அப்படியே பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இக்கட்டான இந்த சூழ்நிலையினை வெல்ல அவரால் மட்டுமே முடியும் என்பதை அறிந்திருந்த அந்த அவை அவரது அடுத்த வார்த்தைக்காக ஒருமுகமாக அவரை நோக்கியது.
" நம் தூதுவனை மீட்க, நம் இங்கிருந்து கலியூர் நோக்கி செல்ல வேண்டும். இந்த சூழலில் அவ்விடம் நோக்கி செல்வது அத்தனை எளிதான காரியம் இல்லை "
" அதில் ஏதும் சங்கடம் இருக்கிறதா, அநிருத்தரே "
" ஆமாம் அப்ரமேயரே... இங்கிருந்து அவ்விடத்தை அடைய கடுமையான ஆபத்து நிறைந்த 18 வனங்களை கடந்து செல்ல வேண்டும்."
" என்ன சொல்கிறீர்கள்.. சேனாதிபதியாரே...18 வனங்களா??? "
" ஆம். இளவரசே.. என் ஒற்றர்களின் செய்திப்படி, மலை சூழ்ந்த அந்த 18 வனங்களைக் கடப்பது, நம் மரணத்தை நாமே தேடிப் போவதுற்கு இணையானது."
இதைக் கேட்ட அவையினரின் உள்ளத்தில் உண்டான அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் பிடித்ததால், அங்கு பெரும் அமைதி நிலவியது. அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தாலும், அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
" சற்று விளக்கமாக கூறுங்கள். சேனாபதியாரே "
அவ்வமைதியை உடைக்கும் கேள்வியை எழுப்பினார் வந்தியத்தேவர்.
" சொல்கிறேன்... சொல்கிறேன் " என்றபடி மன்னரை நோக்கினார் அநிருத்தர்.அவரும் தலையசைத்து ஆமோதிக்க, அச்சூழலின் கடுமையை விவரிக்கத் தொடங்கினார்.
" ஒற்றர்கள் அளித்த தகவல்களின்படி, இடையில் 18 வனங்கள் இருக்கிறது. அவை மலைக்காடுகளாகவும் இருப்பதால் அவ்வளவு எளிதில் கடக்க முடியாது. அதிலும் இந்த பருவகாலத்தில், அங்கு குளிரின் தாக்கம் கடுமையாக இருக்கும். அந்தக் கடுங்குளிரில் காடுகளுக்குள் சிக்கிக் கொண்டால், நம் நிலைமை பரிதாபமாகிவிடும். அப்படியே அக்காடுகளைத் தாண்டி சென்றாலும்"
" சென்றாலும்.. ஏதேனும் சங்கடம் இருக்கிறதா"
அப்ரமேயரின் கேள்வி, அங்கிருந்தவர்களின் உள்ளத்தின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
" பெரும் சங்கடமே அதுதான்.. இந்தக் கடுங்குளிரில் அவ்வனங்களைத் தாண்டிச் செல்வதே பெரும்பாடு. அப்படியே தாண்டிச் சென்றாலும், குளிரும் சோர்வும் நம் வெற்றிக்கு குறுக்கே தடையாக இருக்கும்.."
" சரியாகச் சொன்னீர்கள் அநிருத்தரே.. இவ்வளவு தூரம் சென்று நம் வீரர்களின் உயிரை, நாமே படுகுழியில் தள்ளிவிட முடியாது. "
மன்னர் ராஜராஜரும், முதன் மந்திரி மதியூகி அநிருத்த கிருஷ்ணன் ராமன் என அறிவில் சிறந்த இருவருமே இவ்வாறு தயங்கிட, மற்றவர்களின் மனதோ குழப்பத்தில் மூழ்கித் தவித்தது.
" அப்படியெனில், நமது செய்தியைச் சுமந்து சென்ற தூதுவன் நிலை என்ன??.. நம் சோழ தேசத்தின் மீது பூசப்பட்ட இந்த கலங்கத்தைத் துடைக்க வழியே இல்லையா??"
இம்முறை கண்மூடித்தனமான ஆக்ரோஷம் மறைந்து, இளவரசரின் பேச்சில் ஆதங்கமே நிறைந்திருந்தது. அவரைத் தேற்றும் விதமாக பேசத் தொடங்கினார் வந்தியததேவர்.
" இராஜேந்திரா.. உன் ஆதங்கம் புரிகிறது. கண்டிப்பாக தூதுவன் மீட்கப்படுவான். நம் சோழ தேசத்தின் மீது வீசப்பட்டிருக்கும் இந்த சதி வலையை வேரறுத்து, தக்க பதிலடி கொடுக்கப்படும் "
" அதுதான்.. எப்படி...மாமா."
சிறிது யோசனைக்குப் பின், இளவரசரின் கேள்விக்கு பதிலளித்தார்.
" எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வென்பது நிச்சயம் இருக்கும். ஆனால் அதை நாம் எவ்வளவு விரைவாகக் கண்டறிகிறோம் என்பதில்தான் நம் வெற்றி இருக்கிறது "
" அப்படியெனில் இதற்கும் தீர்வு இருக்கிறதா"
" நிச்சயமாக இருக்கிறது!!!"
வந்தியத்தேவர் உதிர்த்த உறுதியான அந்த வார்த்தைகள், அங்கிருந்தவர்கள் உள்ளத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கை விதைக்கு நீருற்றும் அவரின் அடுத்த பதிலுக்காக, அவை மொத்தமும் காத்திருந்தது.
-தொடரும்...