வேங்கை மகன்
பகுதி 10 : அமைதிக்குப் பின் அடித்த புயல்
விசாலமான அந்த அறை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தூண்களுடன், திரைச்சீலைகள் மற்றும் தோரணங்களைக் கொண்டு அழகுற அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அமைச்சர்கள், தளபதிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமரும்படி இருபுறமும் பல இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் நுழைவதற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள் உள்ளே செல்வதற்கு அரசர் அல்லது முதன் மந்திரி அனிருத்த பிரம்மராயரின் அனுமதி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். குழப்பமான சூழ்நிலையிலும், அவசர காலத்திலும் பல முக்கிய முடிவுகளை எடுக்குமிடமாக இருப்பதால், அநிருத்தர் தனது நம்பிக்கைக்குரிய வீரர்களைக் கொண்டு அவ்வறைக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைத்திருந்தார்.
உள்ளத்தில் இருந்த நெருடலுடன் ஆலோசனைக் கூடத்திற்குள் அடியெடுத்து வைத்த அப்ரமேயர், அங்கிருந்த சூழ்நிலையை நொடிப்பொழுதில் கிரகித்துக் கொண்டார். உள்நுழைந்த அப்ரமேயரின் கண்களுக்கு எதிர்ப்பட்ட மாமன்னரின் தோற்றமே, அவரது நெருடலை உறுதி செய்தது. மன்னரின் இயல்புக்கு மாறான முகத்தைக் கண்டதுமே, ஏதோ தவறு நடந்திருப்பதை மனதிற்குள் உணர்ந்து கொண்டார் அப்ரமேயர். எப்போதும் புன்னகை தவழும் மன்னரின் முகம், கோபத்தில் சிவந்திருந்தது. உள்ளத்தில் பற்றியெரிந்த கோபத்தின் ஜூவாலைகள் அவரது மூச்சுக்காற்றை இயல்புக்கு அதிகமாக கூட்ட, அதை பிரதிபலித்த அவரது கண்கள் பார்வையை அனலாக வீசியது. நிதானமின்றி துடித்துக்கொண்டிருந்த அவரது உதடுகள், மன்னர் ஆக்ரோஷமாய் இருப்பதைக் காட்டியது.
நிலைமை என்னவென்று அறியத் துடித்த அப்ரமேயரின் உள்ளம், அவ்வறையில் கூடியிருப்பவர்களின் முக உணர்வுகளை ஆராயத் தொடங்கியது. தளபதிகள் பலரும் முக்கியப் பணிகளுக்காக சென்றிருந்ததால், அங்கிருந்த பல இருக்கைகள் வெறிச்சோடி இருந்ததைக் கவனித்த அப்ரமேயரின் கண்கள் வந்தியத்தேவரைத் தேடியது. காந்தப் பார்வையை வீசிய வந்தியத்தேவரின் கண்கள், அப்ரமேயரை அறியாமலேயே அவரின் பக்கம் ஈர்த்தது. வடதிசைப் பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த வந்தியத்தேவர், ஏதோ அவசரநிலை காரணமாகவே அங்கு இருக்கிறார் என்பதை அப்ரமேயரால் யூகிக்க முடிந்தது.
அலைமோதும் கூட்டத்திலும் தனித்து தோற்றமளிக்கும் வல்லவரையர், தனக்கே உரித்தான அதே பொலிவுடனும், தெளிவான மனநிலையை வெளிக்காட்டும் விதத்திலும் அமர்ந்திருந்தார். வந்தியத்தேவரைக் கண்டதும் அவரது உள்ளம் நிம்மதி பெருமூச்சு விட்டது. வெண்மையாக மாறத் தொடங்கிய அவரது சுருள் முடிகள் அவர் முதுமையை நோக்கிப் பயணிப்பதாய் தோற்றத்திற்கு வெளிக்காட்டினாலும், இளமைத் துடிப்புடன் இருந்த அவரது கண்களும் மனதும் அதைப் பொய்யென்று சொல்வது போல் இருந்தது. மங்கையர் பலரும் வந்தியத்தேவரைக் கண்டதுமே காதலில் விழுவதன் சூட்சுமத்தை அறிந்த அப்ரமேயரின் உதடுகள் அவரையறியாமல் புன்னகையை உதிர்க்க முயன்றாலும், இந்த வயதிலும் வந்தியத்தேவரின் தோற்றப்பொலிவை எண்ணி உள்ளுக்குள் எழுந்த சிறு பொறாமை அதனைத் தடுத்து விழுங்கியது.
ஒருவழியாக வந்தியத்தேவரின் ஈர்ப்பிலிருந்து வெளியே வந்த அப்ரமேயரின் கவனம், மன்னருக்கு மறுபுறத்தில் அமர்ந்திருந்த அநிருத்தரின் பக்கம் திரும்பியது. மனதிற்குள் பல விஷயங்களை யோசித்து கொண்டிருந்தாலும், தேர்ந்த சாதுவைப் போல் முகத்தில் எதனையும் வெளிக்காட்டிமல் அமர்ந்திருந்த அநிருத்தரைக் கண்டதும் " இவரால் மட்டும் எப்படி இவ்வளவு தெளிவாக இருக்க முடிகிறது " என்று அப்ரமேயரின் மனது வினா எழுப்பியது. அதற்கான பதில் அநிருத்தர் ஒருவரால் மட்டுமே அளிக்க முடியும் என்றாலும், அவரிடமிருந்து சிறு புன்னகையை மட்டுமே பதிலாய்ப் பலமுறை பெற்றதால் அந்த யோசனையை அப்படியே விட்டுவிட்டார்.
அவருக்கு அருகில் அமர்ந்திருந்த சோழ தேசத்தின் தூணாக இருக்கும் தளபதி பரமன் மழபாடியார், சோழ தேசத்திற்காக பல போர்க்களம் சென்று, வென்று வந்திருந்த அவர், களத்தில் பெற்ற விழுப்புண்களை வீரப் பட்டயமாக உடலில் சுமந்து வீரச்செருக்குடன் இருந்தாலும், மன்னரின் பதிலுக்காகக் காத்திருப்பது அவரது கண்களில் தெரிந்தது. அவருக்கு அடுத்து ஓலைகளை படியெடுக்கும் பட்டோலைப் பெருமான் அவ்விரவு வேளையிலும் அங்கு இருந்தது அப்ரமேயருக்கு சிறு வியப்பை தந்தது.
வலது புறத்தில் இருந்தவர்களை கண்டு தெளிந்த அப்ரமேயர பார்வை அங்கிருந்து இடதுபுறத்திற்கு திரும்பியது. அங்கு திடமான மனநிலையுடன் பொறுமையின் சிகரமாய் அமர்ந்திருந்த வந்தியத்தேவருக்கு நேர் எதிராக, இளந்துடிப்புடன் இளவரசர் இராஜேந்திர் மன்னரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பதின் பருவத்தைத் தாண்டிய இளங்காளையான இளவரசருக்கு, அந்த வயதிற்கே உரித்தான வேகமும் கோபமும் அவரது நடவடிக்கைகளில் எப்பொழுதும் இருக்கும். வந்தியத்தேவரைப் போல பொறுமையும், தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்கும் தன்மையுடைய அப்ரமேயருக்கு, இளவரசரின் குணம் இருவருக்குமிடையில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி இருந்தது. ஒருவரைப் பற்றி மற்றவரின் எண்ணங்கள் வேறே வேறாக இருந்தாலும், இலக்கு சோழ தேசத்தின் உயர்வாக மட்டுமே இருந்தது.
அவைக்குள் நுழைந்து இருக்கைக்கு வருவதற்குள் அப்ரமேயரின் மனது, இவற்றை எல்லாம் ஆராய்ந்து, விவாதித்து முடித்திருந்தது.
" மன்னருக்கு என் வணக்கங்கள் "
அப்ரமேயரின் வார்த்தைகள் இராஜராஜரின் செவியில் விழுந்தாலும், அவரது மனம் அதை உணராமல் இருந்தது. விரல்களை பிசைந்தபடி கோபத்துடன் யோசித்துக் கொண்டிருந்த மன்னர் மறுமொழி கூறவில்லை. இதனைக் கண்ட அநிருத்தர்" அமருங்கள் அப்ரமேயரே" என்றார்.
இளவரசருக்கு அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்த அப்ரமேயரின் முகம் குழம்பியிருப்பதை உணர்ந்த வந்தியத்தேவர், பொறுமையுடன் காத்திருக்குமாறு தலையசைத்தார். அங்கிருந்த மற்றவரின் முகங்களில் சினத்தின் ரேகைகள் படர்ந்திருந்ததால், அவ்விடத்தில் பெரும் அமைதி நிலவியது. அதை முதன் மந்திரி உடைத்து பேச்சைத் தொடங்கினார்.
" இந்த இரவு நேரத்தில் அவசரமாக அழைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அது என்னவெனில், நமது ஓலையைத் தாங்கி கங்க தேசம் சென்ற தூதுவனைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அது பற்றி ஆலோசிக்கவே உங்களை அழைத்தோம் "
அநிருத்தரின் இந்த வார்த்தைகள் அப்ரமேயருக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது. அங்கிருந்தவர்களின் கோபத்திற்கான காரணம் இப்போது அவருக்குத் தெளிவாக விளங்கியது.
" என்ன சொல்கிறீர்கள்? அநிருத்தரே. நம் தூதுவனை கைது செய்யும் அளவிற்கு வந்து விட்டார்களா??, அவர்கள்.." என்ற அப்ரமேயரின் முகத்தில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்திருந்தது.
" ஆம்.. சேரனுடன் கூட்டுச் சேர்ந்து இக்கொடுஞ்செயலைச் செய்திருக்கிறார்கள்" என வந்தியத்தேவர் தெரிவிக்க, உள்ளத்தில் பற்றியெரிந்த கனலை வெளிக்காட்டாமால் பதிலளித்தார் அப்ரமேயர்.
" அப்படியெனில், அவர்கள் இதற்கான விளைவை எதிர்கொண்டே ஆகவேண்டும்"
"ஆம். ஆனால் அதில் ஒரு சில சங்கடங்கள் உள்ளது. அதனால் தீர ஆலோசித்தே முடிவெடுக்க வேண்டும்"
இதுவரை அமைதியாய் இருந்த பரமன் மழபாடியாரின் வார்த்தைகள் அப்ரமேயரையும், இளவரசரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
- தொடரும்