Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வேங்கை மகன் பகுதி 9 : பதில் எழுப்பிய கேள்வி

Copied!
Kavignar Vijayanethran

வேங்கை மகன் 

பகுதி 9 : பதில் எழுப்பிய கேள்வி 

உற்சாகம் தந்த அந்த சிறு உரையாடலுக்குப் பிறகு, தனக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்து படுத்த அப்ரமேயரின் மனதில் இளவரசர் இராஜேந்திரர் விஸ்வரூபம் எடுத்திருந்தார். இன்றைய நிகழ்வுகளில் பல இடங்களில் மன்னரின் சாயலை இளவரசரின் நடவடிக்கைகளில் கண்டு அப்ரமேயரின் மனம் வியப்பில் ஆழ்ந்திருந்தது.இளவரசரின் பேச்சும், படை வீரர்களுடன் நெருங்கிப் பழகும் அவரது குணமும் அப்ரமேயருக்கு இளவரசரைப் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றியிருந்தது. 

அந்தப் பின்னிரவு வேளையில், வானில் முழுமதியாய் மாறிடும் முயற்சியில் நெருங்கிக் கொண்டிருந்த வெண்ணிலவைப் போல, இளவரசரின் நற்குணங்களும்  வளர்ந்து கொண்டே இருப்பதாக அப்ரமேயருக்குத் தோன்றியது. அந்த நிலவில் தன்னுடைய மெல்லிய கேசங்கள் காற்றில் பறக்க, அவருக்கே உரித்தான மந்தகாசப் புன்னகையுடன், அவருக்கு இளவரசர் காட்சியளித்தார். வைகறையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இளமதி, அவரின் நினைவுகளை பின்னோக்கி அழைத்துச் சென்றது. சரியாக இருதினங்களுக்கு முன்னர், இரவுப் பொழுதில்  நடந்த நிகழ்வுகள் அப்ரமேயரின் மனதிற்குள் காட்சிகளாக விரிந்தது. 

ஆதவன் தன் செங்கதிர்களுக்கு ஓய்வளித்து உறங்கிட, வளர்பிறையின் ஒளியில் இருளும் வெளிச்சமும் ஒன்றோடொன்று யுத்தம் செய்து கொண்டிருந்தது. இருவருக்கும் வெற்றி கிடைக்காத காரணத்தால் அந்த யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது‌. ஆங்காங்கு நிறுவப்பட்டிருந்த தூண்களில் ஏற்றப்பட்ட தீப்பந்தங்களின் ஒளியில் அரண்மனைப்பகுதியை அவ்விடத்திலிருந்து தனித்து வெளிச்சமாய்க் காட்டியது. 

அங்கிருந்த ஒரு அறையில் அப்ரமேயர், சாளரத்தின் வழியே தெரிந்த அந்த நிலவைப் பார்த்தபடி யோசனையில் அமர்ந்திருந்தார்‌. சுவற்றில் சில வாட்களும் கேடயங்களும் அலங்கரிக்க, அவரைச் சுற்றி அந்த அறை முழுவதும்  ஈட்டிகளும் கேடயங்களும் மற்ற போர்க் கருவிகளும்  பல குவியல்களாகக் கிடந்தன.  ஆயுதங்களோடு வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவருக்கு அந்த அறை மிகவும் பிடித்தமான இடமாகும். அவரது மனதில் குழப்பங்கள் எழும்போதெல்லாம் அங்கு வந்தமர்ந்தால் ஒரு தெளிவு கிடைக்கும். இன்றும் அவருக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவருக்கு பிடித்தமான அந்த அறையில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கினார்.

அன்றைய பணிகளை முடித்து விட்டாலும், மனதிற்குள் ஏதோ நெருடல் அவரை வாட்டியெடுத்தது. அதற்கான காரணத்தை அறிய முயன்ற அவரது மனது தோற்றுப் போனது. பொறுமையாய் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் அவருக்கு, இந்த சூழ்நிலை வித்தியாசமான உணர்வைக் கொடுத்ததால், இருக்கையில் இருந்து எழுந்து விசாலமான அவ்வறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். ஆயினும் விடையொன்றும் கிடைக்கவில்லை. சில நாழிகைகள் யோசனைக்குப் பிறகு, அவ்வறையிலிருந்து வெளியே வந்தார். அங்கு  நின்ற காவலாளி, தன் வலது கரத்தினை நெஞ்சில் வைத்து முழங்காலிட்டு வணங்கினான். எப்பொழுதும் புன்னகையுடன்  அவனைக் கடந்து செல்லும் அப்ரமேயர்,  இன்று குழப்பமான மனநிலையில் இருந்ததால் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் அவ்விடத்தை விட்டு  கடந்து சென்றார். 

அப்படியே மனதிற்குக் கட்டுப்படாமல், தனது விருப்பப்படி நடந்து சென்ற அவரது கால்கள் அவரைப் படிகளின் வழியே மேல்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த இரவு வேளையில் அரண்மனையின் மேற்புரத்திற்குச் சென்ற அப்ரமேயர் அங்கிருந்து சோழ தேசத்தைப் பார்வையிட்டார். இரவில் வீசிய இளங்காற்று காவிரியின் குளுமையை அள்ளி ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. அப்ரமேயரின் முகத்தை வருடிய காற்று, அவரது மனதையும் சற்று இலகுவாக்கி இயல்பிற்கு கொண்டு வந்தது.

தீப்பந்தங்களும், சிறு விளக்குகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறுபுள்ளிகளாக வெளிச்சங்கள் தெரிந்தது. இரவுக்கே உரித்தான நிசப்த அமைதியுடன், மொத்த ஊரும் உறக்கத்தில் சிறிது சிறிதாய் மூழ்கிக் கொண்டிருந்தது. இன்னும் சிலர்  பயணித்துக் கொண்டிருந்தனர்.மக்களின் கூட்டத்தில் அலைமோதி பரபரப்பாய் இயங்கி முக்கியத் தெருக்கடைகள், அடுத்த நாளுக்குத் தங்களை ஆயத்தப்படுத்துவதற்கு ஓய்வில் இளைப்பாறிக் கொண்டிருந்தன.

இரவுப் பணியில் இருந்த ஒரு சிலவீரர்கள் தவிர மற்றவர்கள் யாரும் இல்லாததால், அரண்மனை அமைதியாய் இருந்தது. அங்கு எழும் சிறு சத்தங்களும் தெளிவாய் அவரது காதுகளை வந்தடைந்தது‌. சில காத தூரத்தில் மாட்டுவண்டி செல்லும் சத்தம் கூட, அவ்விரவு வேளையின் நிசப்தத்தில் அவரது காதுகளால் உணர முடிந்தது.
அரண்மனையைச் சுற்றியிருந்த காவல் வீரர்கள் சிலர் அவர்களுக்குள் பேசிக்கொண்டே கோட்டையைச் சுற்றி வலம் வந்தபடி இருந்தனர். அந்த வீரர்களைப் பார்த்த அப்ரமேயரின் மனதிற்குள், அவர் கடந்து வந்த வாழ்க்கை நிழலாய் நினைவுகளைக் காட்டியது. 

 " இப்படித்தானே நாமும் ஒரு சாதாரண வீரனாய் சோழ சாம்ராஜ்யத்தில் அடியெடுத்து வைத்தோம். இன்று சோழ தேசத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக உயர்ந்து இருக்கிறோம். வாழ்க்கையில் எவ்வளவு தூரங்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதை இப்போதுதான் உணர முடிகிறது. எத்தனை போர்களங்கள்!, எத்தனை காயங்கள்! எத்தனை வெற்றிகள்!... அப்பப்பா... நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது. போர்க்களங்கள், இரத்தம் தோய்ந்த ஆயுதங்கள் என்றே வாழ்க்கை ஓடி விட்டதே... இன்று வசதியான இந்த வாழ்க்கை இருந்தும் , இந்த வீரர்களைப் போல எந்தக் கவலையுமின்றி, மகிழ்ச்சியாய் இருந்த நாட்கள் எத்தனை இனிமையானது. கண்களை மூடியதுமே உறக்கம் வந்தது. ஆனால் இன்று... அப்படியொரு வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா??.  இவர்களில் சிலர் நாளை நாம் இருக்கும் நிலைக்கு உயரக்கூடும் அல்லவா.. இன்று நான் யோசிப்பதைப் போல் அவர்களும் யோசித்துப் பார்க்கும் காலமும் வருமல்லவா.. எத்தனை விசித்திரமானது இந்த வாழ்க்கை. கீழே இருப்பவன் மேலே வர ஆசைப்படுகிறான்.. மேலிருப்பவன் கீழே இருந்த வாழ்க்கையை எண்ணி ஏங்குகிறான். "

இயல்பாகவே பொறுமையும் விவேகமும் கொண்ட அப்ரமேயர், இன்று  ஒரு பெரிய ஞானியைப் போல் மனதிற்குள் சிந்தித்து அவருக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார். அப்படியும் இப்படியுமாக அரண்மனையின் மேல் தளத்தில் உலாத்தியபடி அவரது மனம் விவாதமேடையை அரங்கேற்றி பதில் கொடுத்து கேள்விகளை எழுப்பி யோசித்தது.  அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அப்பொழுது படிகளில் "தடதட"வென யாரோ நடந்து வரும் சத்தம் அவரது செவிகளுக்கு எட்டியது. சத்தம் வந்த திசையை நோக்கிய அப்ரமேயர், வீரனொருவன் அவரை நோக்கி விரைந்து வருவதைக் கவனித்தார். நெருடலில் இருந்த அவரது மனதிற்கு அந்த வீரனின் வருகை விடையளிக்கும் என்று தோன்றியதால், அவனை நோக்கி நடந்து சென்றார் அப்ரமேயர்.

 நெருங்கி வந்த அந்த வீரன் குனிந்து முழங்காலிட்டு" தளபதி அவர்களுக்கு வணக்கம்.  உங்களை விரைந்து  ஆலோசனைக் கூடத்திற்கு வரச்சொல்லி  முதல் மந்திரி அவர்கள் செய்தி அனுப்பியுள்ளார்" என்று அவருக்கு செய்தியைத் தெரிவித்தான். 

" சரி.. நீ. செல்.‌.. நான் சென்று பார்க்கிறேன்" என்று அவனை அனுப்பி வைத்த அப்ரமேயரின் உள்ளத்தில் கேள்விக் கணைகள் படையெடுக்க ஆரம்பித்திருந்தன.

" இந்த இரவு நேரத்தில் அவசரமாக வரச் சொல்வதன் காரணம் என்னவாக இருக்கும்" என்று மனதிற்குள் யோசித்தாலும், அக்காரணத்தை அறியும் ஆவலில் அவரது கால்கள் ஆலோசனைக் கூடத்தை நோக்கித் தானாகவே விரைந்தது. அங்கு அவரின் வருகையை எதிர்பார்த்து அதிர்ச்சியொன்று அவருக்காக காத்திருந்தது.

- தொடரும் 

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வேங்கை மகன் பகுதி 8 : இராஜராஜரா? இராஜேந்திரரா??

வேங்கை மகன் பகுதி 10 : அமைதிக்குப்பின் அடித்த புயல்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 13 : குழப்பத்தைத் தீர்த்த ஓலை

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 12 : யார் அந்த ஒருவன்???..

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 11 : நல்மொழி தந்த நம்பிக்கை

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 10 : அமைதிக்குப்பின் அடித்த புயல்

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 8 : இராஜராஜரா? இராஜேந்திரரா??