Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வேங்கை மகன் பகுதி 8 : இராஜராஜரா? இராஜேந்திரரா??

Copied!
Kavignar Vijayanethran

வேங்கை மகன்

பகுதி 8 :   இராஜராஜரா?? இராஜேந்திரரா??

அப்ரமேயருடன் விவாதித்துக் கொண்டிருந்த அதே வேளையில், சற்று தூரத்தில் படைவீரர்கள் பேசியது இளவரசரின் காதினில் விழுந்தது. படைவீரர்கள் அவ்வாறு பேசுவதைச் சற்றும் எதிர்பார்க்காத இளவரசரின் முகம் ஒருகணம் கோபத்தில் சுருங்கி விரிந்தது. 

சட்டென அவ்விடத்திலிருந்து எழுந்து படைவீரர்களை நோக்கி நடக்கத் தொடங்க, காரணம் அறியாத அப்ரமேயரும், மீனிசாவும் அவரைப் பின்தொடர்ந்தனர். 

அவ்வீரர்களை நெருங்கி சென்ற இளவரசர் " ஏதோ பெரிய விவாதம் நடக்கிறது போலும்... சொல்லுங்கள் நாங்களும் கேட்கிறோம் " என்று உள்ளுக்குள் இருந்த கோபத்தை மறைத்து சிரித்தபடி அவர்களிடம் வினவினார்.

 திடீரென தங்களுக்குப் பின்னால் இளவரசர் நின்றதை அறிந்ததுமே அவர்களின் இதயத்தில் அச்சம் குடியேறியது. அதனால்  இளவரசரின் கேள்விக்கு என்ன பதில் சொல் சொல்வதென்று தெரியாத அவர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். 

அச்சம் நிறைந்த அந்த முகங்களைப் பார்த்து புன்னகைத்த இளவரசர் பேசத் தொடங்கினார்.

" எதற்காக நிற்கிறீர்கள்.. அமருங்கள்‌. அமருங்கள்.." என்ற இராஜேந்திரர் அவர்களில் ஒருவரைப் போல நடுவில் அமர, மற்றவர்களும் அமர்ந்தனர். இளவரசரின் இந்த செயல் அவர்களின் பயத்தைக் குறைத்து இயல்பை உணரச் செய்ததால்,  பதற்றம் நீங்கி இளவரசரைச் சுற்றி அமர்ந்தனர். 

அங்கிருந்த வீரர்கள் சிலர் ஓடிச்சென்று இளவரசரும், அப்ரமேயரும் அமர இருக்கைகளை எடுத்து வந்து போட்டனர். 

" இல்லை.. இல்லை.‌ எனக்கு இருக்கை வேண்டாம். இதுதான் பிடித்திருக்கிறது. " 

நெகிழ்வுடன் கூறிய இளவரசரை அதிசயமாகப் பார்த்தனர் படைவீரர்கள். அப்ரமேயர் இருக்கையில் அமர,  இருக்கையை மறுத்த மீனிசா அவருக்கு அருகிலேயே கீழே அமர்ந்தார். வைணவதாசன் அங்கு பக்கத்தில் இருந்த மரமொன்றில் ஏறி அவ்விடத்தைச் சுற்றிக் கண்காணித்துக் கொண்டே,  அங்கு நடப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தான். 

" என்ன கண்டன்மாறா, நீயாவது என்னவென்று சொல்வாயா " 

அருகில் நின்ற ஒரு வீரனொருவனின் பெயரைச் சொல்லி உரிமையோடு கேட்டார்  இளவரசர். இளவரசர் தன் பெயரை நினைவில் வைத்து அழைத்ததால் அவ்வீரன் முகம், அன்றைய நிலவொளியை விடப் பிரகாசமாய் ஒளிர்ந்தது. அவனது மனது வானுக்கும் பூமிக்கும் சென்று வந்தது.  

" என்னடா... கண்டன்மாறா... இங்குதானே இருக்கிறாய் " 

அவனது நிலையை அப்ரமேயர் பரிகாசிக்க வீரர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர். இதனால் இயல்பு உலகத்திற்கு திரும்பி வந்து பதிலளித்தான் அவ்வீரன். 

" ஒன்றுமில்லை இளவரசே...  ஒன்றுமில்லை" என  அந்த வீரன் மழுப்ப " தளபதியாரே... பார்த்தீரா.. ஒன்றும் இல்லையாம் " என்று கண்ணசைத்து சிரித்தார்.

 " அட சொல்லடா.. அப்படி என்னதான் பேசினீர்கள்...  இளவரசர் கவனத்தை எட்டும் அளவிற்கு... அதை நாங்களும் தெரிந்து கொள்கிறோமே... " என அப்ரமேயரும் இணைந்து கொண்டார்.
 
" பயணம் வந்த களைப்பில் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். அவ்வளவுதான்..
வேறொன்றுமில்லை தளபதி அவர்களே..." 

" எங்களுக்கும் களைப்பாகத்தான் இருக்கிறது.... எங்களுக்கும் சொல்லலாம் அல்லவா " 

" அது... அது.. அது" 

பதில் சொல்ல முடியாமல் நா குழறிய வீரனை சற்று உற்றுநோக்கிய இளவரசர் விஷமத்துடன் புன்னகை செய்து, அவன் தோள்களை தட்டிவிட்டு " நான் சொல்லவா... உங்கள் மனதில் என்ன ஓடுகிறதென்று... " என்றார்.

வீரர்கள் அனைவரும் பதில் சொல்லாமல், அவர் முகத்தையே பார்த்தனர். அவர்களின் முகத்தில், கூட்டத்தில் பேசியது இளவரசரின் காதுகளுக்கு எட்டியிருக்குமோ என்ற ஐயமும் பயமும் ஒன்றாய்த் தெரிந்தது. 

அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த வீரர்களின் முகங்களை எல்லாம் பார்த்த இளவரசர், அமைதியாய் அமர்ந்திருந்தார். அந்த அமைதி பேசிய அந்த வீரர்களின் மனதில் புயலாய் வீசியது. ஒரு  மந்தகாசப் புன்னகையை  வீசிய இளவரசரின் முகம் நொடியில் கோபமாய் மாறியது.

" ஒரு தூதவனுக்காக,  இவ்வளவு தூரத்தில், இவ்வளவு பெரிய போர் அவசியமா என்றுதானே யோசிக்கிறீர்கள்...." ஓங்கி ஒலித்த இளவரசரின் குரல், அங்கிருந்த வீரர்களின் முகத்தில் அச்சத்தை உண்டாக்கியது.

 " இப்படி சந்தேகத்தோடு, அரைமனதாகப் போர் செய்தால் நம்மால் வெற்றி பெற முடியாது. அனைவரும்  சோழ தேசம் நோக்கி செல்வோம்."  
 
வீரர்களிடம் அவ்வாறு பேசிய ராஜேந்திரரின் சுந்தரமுகம் சற்று இறுக்கமாய் மாறியிருந்தது. அப்ரமேயர் மற்றும் மீனிசா இளவரசர் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியாமல் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

இளவரசரின் இறுகிய முகத்தைப் பார்த்த வீரர்கள் உரத்த குரலில் பதிலளித்தனர். 

" பாதியில் திரும்புவது மன்னரை இழிவுபடுத்துவதைப் போன்றது "

" அதை எங்கள் உயிருள்ள வரை செய்ய மாட்டோம்." 

" மன்னரின் புகழுக்கு ஒரு களங்கம் நேர விடமாட்டோம் " 

" எங்களின் இறுதி மூச்சு வரை வெற்றிக்காகப் போராடுவோம்" 

"சோழ தேசத்தை ஒரு போதும் தோற்க விட மாட்டோம்..  அதற்காக எங்கள் உயிரையும் கொடுப்போம்.." 

அங்கிருந்த வீரர்கள்  ஒருவர் மாறி ஒருவர்  ஆவேசமாய் சூளுரைத்து  " சோழம். சோழம்" என்று ஒன்றாக கோஷமிட்டனர். இதையெல்லாம் கவனித்த அவரது  இறுகிய முகம் கொஞ்சம் இளகியது. அவரது கண்கள் சற்று கலங்கியது.

" இதற்காகத்தான்...
இதற்காகத்தானாட... 
இந்த போர்.. இதற்காகத்தான்...
இந்த விஸ்வாசத்திற்காகவே,  இவ்வளவு தூரத்தைக் கடந்து வந்திருக்கிறோம்...." 

" ஒன்றும் புரியவில்லை இளவரசே.." புரியாது கேட்டான் வீரனொருவன்.

" தெளிவாகச் சொல்கிறேன்.. உங்கள் சந்தேகத்தைப் போக்குவது எனது கடமை அல்லவா... " என்றவர்  ஒரு வீரனைக் கைகாட்டி " ஏய்... நீ.. இங்கே வா.." என்றழைத்தார். அவர் அழைத்த மறு நொடியில் அவன் இளவரசருக்கு அருகில் வந்து நின்றான்.

"சொல்லுங்கள் இளவரசே.." 

" உனது சார்பாக, உனது மனைவியோ, மகனோ, இல்லை குடும்பத்தில் யாரோ ஒருவர், உறவினர் ஒருவரின் வீட்டுக்கு செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்..." 

இராஜேந்திரர் இப்படி ஆரம்பித்ததும் வீரர்கள் அனைவரும் ஆர்வமாய்க் கேட்டனர். அவர்களைப் போலவே  அப்ரமேயரும் மீனிசாவும் ஆர்வத்தோடு இளவரசரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று தூரத்தில் இருந்த மற்ற வீரர்களும் நெருங்கி அருகில் வந்து அமர்ந்து கொண்டனர். 

" அந்த வீட்டில் யாரேனும் வேண்டுமென்றே, அவர்களை அவமானப்படுத்தினால் நீ என்ன செய்வாய்.... நீ சொல்"  என்றவர் கைகாட்டிய திசையிலிருந்த வீரன் எழுந்து பதில் சொன்னான்..

" அவர்களுடன் சண்டையிடுவேன்"  

அந்த வீரனின் பதிவைக் கேட்டுத் தலையாட்டிய இளவரசர், அதே கேள்வியை அங்கு அமர்ந்திருந்த மற்ற வீரர்களிடமும் கேட்டார்.

" ம்ம்ம். நீ சொல் .. நீ என்ன செய்வாய்"  

"அவர்களை ஒரு வழி செய்வேன்.." 

" ஓ.. அப்படியா.. நீ சொல் " 

"அவர்களைக் கொன்று விடுவேன்.." 

" பெரிய.. கோபக்காரன் தான் நீ... அவன். அந்த ஈட்டியைப் பிடித்தபடி இருக்கிறானே.. சொல் பார்க்கலாம்" 

" அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவேன்"

இளவரசர் கைகாட்டிய ஒவ்வொருவரும்  ஆவேசமாய்ப் பதிலளித்தார்கள். அவர்களின் பதில்களை எல்லாம் பொறுமையாய்க் கேட்ட இளவரசர் அமைதியாய் அவர்களின் முகங்களை நோக்கினார்.

" இளவரசர் ஏன்.. இப்படி கேட்கிறார்.. என்னவாயிற்று.." என்று கூட்டத்திற்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இதை எல்லாம் கவனித்த இளவரசர் அவர்களை நோக்கி அடுத்த கேள்வியை வீசினார்...

" இவன் எதற்காக இப்படி கேட்கிறான். நாம் பேசியதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது.. என்று தானே ஒவ்வொருவரும்  யோசிக்கிறீர்கள்??? " 

இளவரசரின் கேள்விக்கு பதில் கூறமுடியாமல் வீரர்கள் அமைதியாய் தலைகுனிய, இளவரசர் அப்ரமேயரைப் பார்த்தார். அப்ரமேயரும், மீனிசாவும் இளவரசரின் பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். 

" சரி.. நானே பதில் சொல்கிறேன்... சற்று முன் நான் கேட்ட கேள்விக்கு ஆவேசமாய்ப் பதில் சொன்னீர்களே.... ஏன்???.. எதற்கு இந்த கோபம்??..  ஏன் இந்த ஆவேசம்.??..

" அவர்கள் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்களே.. அதுக்கு பழி தீர்க்க வேண்டாமா??.."  

பதில் சொன்ன வீரனை "இங்கு.. வா.. இப்படி" என்று   அருகில் அழைத்து அருகில் அமரச் சொன்னார்.  அருகில் வந்த அந்த வீரன் முட்டியைத் தரையில் ஊன்றி அவர் முன் நின்றான். 

" அது எப்படி உனக்கு அவமானமாகும்?. அது எப்படி.. ?"

" அவர்கள் என் குடும்பத்தாரை அவமானப்படுத்தி உள்ளனர்... இளவரசே"

" ஆமாம்.. அவர்கள் உன் குடும்பத்தில் உள்ளவர் ஒருவரைத்தானே அவமானப்படுத்தினார்கள்.. உன்னை அல்லவே.. நீ அமைதியாக இருக்க வேண்டியதுதானே..." 

 இளவரசர் குனிந்து நின்ற அந்த வீரனைப் பார்த்துக் கேட்டார்.
 
"அவர்கள் என் வீட்டாரை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அது என்னை அவமானப்படுத்தியது போலத்தானே.. " 
 
அந்த வீரனின் பேச்சில் கோபம் தெரித்தது. அதனை கண்டும் காணாதது போல இருந்த இளவரசர், கேள்வியைத் தொடர்ந்தார்.

"  அது எப்படி??... உன் வீட்டாரைச் சொன்னால் உனக்கு எப்படி அவமானமாகும்???" 

" என் குடும்பத்தில் உள்ளவர்களை அவமானப்படுத்தினால் என்ன?? என்னை அவமானப்படுத்தினால் என்ன?.. இரண்டும் ஒன்றுதானே..." 

அவ்வீரன்  சொல்லி முடித்ததும், எழுந்து இளவரசர் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். காரணம் புரியாவிட்டாலும், இளவரசரின் அந்த செயல் அவனுக்கு யானை பலத்தை மனதிற்கு தந்தது.

" அருமையாகச் சொன்னாய்...  மிக அருமை .... இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.. " 

இவ்வாறு பேசிய இளவரசரை அனைவரும் குழப்பத்துடன் பார்க்க, உற்சாகமாய் அவர்களுடன் பேசத் தொடங்கினார்.

" என்ன..  இன்னும் புரியவில்லையா... உங்களுக்கு.. " 

என்றபடி அவர்களின் முகங்களை உற்று நோக்கினார். அவர்கள் குழப்பத்தில் இருப்பது தெளிவாய்த் தெரிந்தது. அவரது மந்தகாசப் புன்னகையை வீசிய இளவரசர் பேச்சைத் தொடர்ந்தார்.

" இந்த சோழ தேசமே  ஒரே குடும்பம்தான். மாமன்னரின் குடும்பம். அதிலிருக்கும் ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே‌...சரிதானே " 

இளவரசர்  இராசேந்திரரின் கேள்விக்கு " ஆம்!!!!"  என்று உறுதியாய் ஒருசேர ஒலித்தது வீரர்களின் பதில். 

" இதில் யாருக்கும் சந்தேகம் இல்லையே??" 

" நிச்சயமாக இல்லை... " என்று மீண்டும் ஒருசேர பதில் வந்தது. 

" வாளெடுக்கும் மறவன் முதல், அதை செய்யும் கருமான் வரை இங்கு வாழும் அனைவரும் மாமன்னரின் குடும்பமே. ஏர் பிடித்து உழுபவன் முதல் போர் செய்பவன் வரை அவருக்கு அனைவரும் ஒன்றுதான்..
தவறு செய்பவர்களை ஒரு தந்தையாக கண்டிப்பார். அதே நேரம்,  அவர்களில் யாரை அவமானப்படுத்தினாலும் , அதை அரசர் தனக்கு நேர்ந்ததாகவே கருதுவார். அப்படியிருக்கையில், அவர் சார்பாக சென்ற தூதுவரை அவமானப்படுத்தினால், அது தவறுதானே.."  கோபத்துடன் வீரர்களைப் பார்த்துக் கேட்டார். 

" ஆம். மிகப்பெரிய தவறு. கண்டிப்பாக அதற்குப் பழி தீர்க்க வேண்டும் " வீரர்களில் ஒருவன் சொல்ல அனைவரும் "சோழம்!!!! சோழம்!!!" என்று ஆர்ப்பரித்தனர்.

" அந்த அவமானத்தை துடைத்தெறிய வேண்டியது நம் கடமையல்லவா"  கண்கள் விரிய ஆவேசமாய் இராசேந்திரர்  அவ்வீரர்களைப் பார்த்துக் கேட்டார்

 "ஆமாம். ஆமாம். அவர்களை வேரறுப்போம்." 
 
" அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் " என்றனர் சோழ வீரர்கள். 

அந்தக் குரல்களின் உறுதியில் உற்சாகமடைந்த இளவரசர் "  இப்பொழுது சொல்லுங்கள்.  இந்த போர்  முக்கியமா?.. அவசியமா??" " என்று அவர்களைப் பார்த்தார். 

 " ஆம். மிக அவசியம்.‌ இதற்கு பழி தீர்த்தே ஆகவேண்டும் " முன்னால் இருந்த வீரன் சொல்ல " சோழம்.. சோழம்"  என்று உற்சாக குரல் எழுப்பினார்கள்..
" இப்போது நன்றாக ஓய்வெடுங்கள். அதிகாலையில் எதிரிகளை பந்தாடுங்கள்" என்று பேசிய இளவரசரை ஆச்சரியமாகப் பார்த்தார் அப்ரமேயர். அவரது கண்களுக்கு அங்கு நிற்பவர் மாமன்னர் இராஜராஜரா? இல்லை, இளவரசர் இராஜேந்திரரா என்று சந்தேகம் தோன்றியது.

" இச்சிறு வயதில் என்ன ஒரு விசாலமான பார்வை... உங்களைப் பெற்றதில் மாமன்னர் நிச்சயம் பெருமை கொள்வார். உங்களால் அவர் புகழ் நிச்சயம் உலகெங்கும் பரவும்...  

" ஆம்... அப்ரமேயரே!! வீரத்தில் மட்டுமல்ல விவேகத்திலும்  மாமன்னரின் குணம்  தெரிகிறது... கலக்கத்துடன் இருந்த வீரர்கள் உற்சாகமாகிவிட்டனர். இனி துணிவுடன் யுத்தக் களத்தில் எதிரிகளை துவம்சம் செய்வார்கள்" என்ற மீனிசாவின் வார்த்தைகளுக்குத் தனது புன்னகையை மட்டுமே பதிலாக அளித்துவிட்டு அங்கிருந்து  நகர்ந்தார் இராஜேந்திரர். 

இளவரசரின் பேச்சைக் கேட்டுப் பிரமித்த வீரர்கள் அதைப் பற்றியே பேசிக்கொண்டே
அவரவர் இடங்களுக்கு சென்றனர். களைப்பில் இருந்த வீரர்களின் மனதில் இப்பொழுது தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் குடிகொண்டிருந்தது.
 
குழப்பமான அன்றைய இரவு மறைந்து, அங்கு புதிய விடியலொன்று உதயமாகிக் கொண்டிருந்தது. ஆனால் அப்ரமேயரின் மனதோ, இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வை மனதிற்குள் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. 

-தொடரும்

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வேங்கை மகன் பகுதி 7 : ஒற்றனின் ஒற்றன்

வேங்கை மகன் பகுதி 9 : பதில் எழுப்பிய கேள்வி

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 13 : குழப்பத்தைத் தீர்த்த ஓலை

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 12 : யார் அந்த ஒருவன்???..

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 11 : நல்மொழி தந்த நம்பிக்கை

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 10 : அமைதிக்குப்பின் அடித்த புயல்

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 9 : பதில் எழுப்பிய கேள்வி