வேங்கை மகன்
பகுதி 7 : ஒற்றனின் ஒற்றன்
மீனிசாவின் வார்த்தைகளை உணரும் முன்பே "ஆம்... மிகச்சரியான யூகம் " என்ற குரல் அவர்கள் நிற்கும் திசைக்கு எதிர்திசையிலிருந்து சத்தமாக ஒலித்தது. தீடீரெனக் கேட்ட அக்குரலின் ஒலி வீரர்கள் பலருக்கும் சிறு அதிர்ச்சியை உண்டாக்கியதால், குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் ஒன்றாகத் திரும்ப, அங்கு குதிரையின் கடிவாளக்கயிற்றைக் கையில் பிடித்தபடி அவர்களை நோக்கி உருவமொன்று நடந்து வந்து கொண்டிருந்தது.
இருளில் இருந்து நெருங்கி அருகில் வர வர, வீரர்கள் கரங்களில் பிடித்திருந்த தீப்பந்த ஒளியில் அதன் முகம் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.
" நீயா?.. இந்த நேரத்தில்..."
அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து வெளிவந்த அப்ரமேயரின் குரல் அங்கிருந்த வீரர்களின் உணர்வை வெளிக்காட்டியது. நெருங்கி வந்த அவ்வீரன், கையிலிருந்த குதிரையின் கடிவாளக் கயிற்றை விட்டு விட்டு, குனிந்து அவர்களை வணங்கினான். அதைக் கண்ட அப்ரமேயரின் முகம் ஒரு சிறு புன்முறுவலை வந்தவனை நோக்கி வீசியது.
" தளபதிக்கும், இளவரசருக்கும் அடியேன் வைணவதாசனின் வணக்கங்கள்..."
"நல்லது...அநிருத்தரின் சீடனுக்கு அர்த்த ராத்திரியில் இங்கென்ன வேலை.. மன்னரிடம் இருந்து ஏதேனும் செய்தியா??"
"இல்லை தளபதியாரே. சேனாதிபதியார் அளித்த பணியினை நிறைவேற்றும் பொருட்டு இவ்விடம் வந்தேன்"
" அநிருத்தர் இட்ட பணியா??"
" ஆம்."
" எங்களை கண்காணிக்க அனுப்பினாரோ??... "
அப்ரமேயரின் குரல் நெருடலுடன் ஒலிக்க, இளவரசர் இராஜேந்திரர் மௌனமாய் அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
" இல்லை தளபதி அவர்களே!!!"
" பிறகு"
" எதிரிப் படையைக் கண்காணித்துத் தகவலை உங்களுக்கு அளிக்க சொல்லி சேனாதிபதியாரின் உத்தரவு"
" ஓ.... இதைத்தான் சரியான நேரத்தில் தகவல் உங்களை வந்தடையும். அதற்கேற்ப வியூகங்களில் மாற்றம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னாரோ... நல்லது. நல்லது... "
அப்ரமேயரின் குரலில் இருந்த நெருடல் இப்பொழுது உற்சாகமாய் மாறியது. அது இளவரசர் உள்ளிட்ட மற்றவர்களின் முகங்களிலும் பிரதிபலித்தது.
" ஒற்றனே! நீ அறிந்த செய்திகளைச் சொல்.. "
வைணவதாசனிடம் இருந்து தகவலை அறிய இளவரசர் ஆர்வமாக இருந்தார். அதைக் கவனித்த இளவரசரையும், அணிபதிகளையும் சற்று நகர்ந்து வருமாறு அப்ரமேயர் தலையசைத்தார். அவர்களுடன் மீனிசாவும் படையை விட்டு சற்று தூரம் நடந்து சென்று ஓரிடத்தில் நின்றனர்.
" இப்பொழுது சொல்"
" சொல்கிறேன் தளபதியாரே"
"ம்ம்ம்"
" அநிருத்தரின் மனதில் நமது வரவு கங்கப்படையின் ஒற்றர்களால் கண்காணிக்கப்படும் என்று தோன்றியது. அதனால் என்னை கங்கப்படையினர் கூடாரத்தைக் கண்காணிக்குமாறு அனுப்பி வைத்தார் "
" நல்ல திட்டம்... "
" ஆம்... அவர் நினைத்தபடி நமது மொத்த அசைவையும் கண்காணித்த ஒற்றன், அந்தத் தகவலை கங்க மன்னனுக்கு தெரிவித்து விட்டான். "
" ஓ.. அனைத்தையுமா...."
" ஆம்... இளவரசே... அவர்கள் மன்னர் வருவார். எப்படியும் வீழ்த்தலாமென பெரும் படையுடன் காத்திருக்கிறார்கள்..."
"காத்திருக்கட்டும்.. காத்திருக்கட்டும். அவனுடைய தடயங்கள் தானா இவை... மீனிசாவின் அனுமானமும் மிகச்சரிதான்."
அப்ரமேயரின் பாராட்டுகளைப் புன்னகையால் ஏற்றுக்கொண்டார் மீனிசா.
" ஆமாம்.. ஆமாம்... மிகத் துல்லியமான அனுமானம்..."
" நீ மேலே சொல்"
" மன்னர் களத்திற்கு வராதது அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும், அவர்கள் வேறொரு திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள்..."
" அப்படியா.. அது என்ன திட்டம். நீ அறிவாயா"
" ம்ம்ம்.. அறிவேன்.. தளபதி அவர்களே!!. அது...."
" அது.. என்ன.. ஏன் இழுக்கிறாய் "
" அது... இளவரசரைக் கைது செய்து, அதன் மூலம் மன்னரைப் பணிய வைப்பது"
" என்ன சொன்னாய்"
இளவரசரைக் கைது செய்யும் கங்கப்படையின் திட்டத்தைக் கேட்ட அப்ரமேயர் குரல் உக்கிரமாய் மாறியது. அதற்கு மறுமொழி கூறாமல் மௌனமாய் நின்றான் வைணவதாசன்.
" என்ன சொன்னாய்??... இளவரசரை சிறை பிடிக்கும் திட்டமா???."
" ஆமாம்.. அப்படித்தான் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்"
"ஹாஹாஹா.... ஏட்டுச் சுரைக்காய் பசியைத் தீர்க்குமா என்ன??... இளவரசரை நெருங்கிப் பார்க்கட்டும்... முதலில்.. பிறகு கைது செய்வது பற்றி யோசிக்கலாம்... ஹாஹா.."
அப்ரமேயர் தனது கம்பீர மீசையைத் திருகியபடி சிரித்த நகைப்பொலியைக் கேட்டு, படைவீரர்களும் சிரிக்கத் தொடங்கினர். ஆனால் இளவரசர் இராஜேந்திரர் மனம் வேறெதையோ யோசித்துக் கொண்டிருந்தது. அதை மீனிசாவின் கண்கள் சரியாக நோட்டமிட்டது.
" இளவரசரின் சிந்தனையில் வேறேதோ சிந்தனை ஓடுவது போல் தெரிகிறதே."
" ஆம்.. மீனிசா.. சேனாதிபதி அநிருத்தர் கூறியது போல், நமது திட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.. "
" ஆம்.. நிச்சயமாக இளவரசே... அவர்களின் திட்டங்களுக்கு சரியான வியூகங்கள் வகுக்க வேண்டியது அவசியம்."
" அப்ரமேயரே.. அதற்கு முன் நம் படைகளுக்கு சிறது ஓய்வு அவசியம் தேவை"
" எனக்கும் அதுதான் தோன்றுகிறது. ஆனால் எந்த இடம் சரியாக இருக்கும் "
மனதில் தோன்றிய ஐயத்துடன் மீனிசாவைப் பார்த்தார் அப்ரமேயர்.
" நடுஇரவில் ஆற்றைக் கடந்து செல்வது உசிதமில்லை தானே, மீனிசா "
" ஆம்.. இளவரசே. நமது படையும் சோர்வாக உள்ளது. இந்த இடம் பாதுகாப்பாக இருக்கும். சற்று இளைப்பாறி, நமது அடுத்த திட்டம் பற்றி ஆலோசித்து விடியலில் ஆற்றைக் கடந்து செல்லலாம்.. "
இளவரசருக்கு மீனிசாவின் யோசனை சரியென்று தோன்றியது. அப்ரமேயரும் அதை ஆமோதித்து தலையசைத்தார்.
" ஆம்.. நல்ல யோசனைதான். ஆற்றைக் கடந்து வடகரைக்குச் சென்ற பிறகு திடீர் தாக்குதல் ஏதேனும் நிகழ்ந்தால், ஆற்றிற்கும் எதிரிக்கும் நடுவில் மாட்டிக் கொள்வோம். அது நல்லது அல்ல. இந்த இடத்தை அடைவதற்கு, எதிரிகள் ஆற்றைக் கடந்தே வர வேண்டும்."
இருவரின் பேச்சையும் கேட்ட சிறிது யோசனைக்குப் பிறகு, "ஆம். எனக்கும் இது நல்ல முடிவாகவே தோன்றுகிறது. எதிரிக்கு அருகில் சென்று இளைப்பாற முடியாது.18 காடுகளை ஒரே மூச்சில் கடந்து வந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்தார்.
" உங்கள் மன ஓட்டமே எனக்கும் தோன்றுகிறது இளவரசே!!. நீண்ட தூரம் பயணித்து இருப்பதால் வீரர்களுக்கும் சிறிய ஓய்வு அவசியமெனத் தோன்றுகிறது " என்ற இளவரசரின் பதிலை ஆமோதித்தார் அப்ரமேயர்.
" இவ்விடம் தங்கி இளைப்பாறச் சரியானதா? மீனிசா".
" என் பார்வையில், இவ்விடம் சரியாக இருக்கும். காட்டு விலங்குகளின் தொல்லையும் இருக்காது. எதிரிகள் இருக்கும் கலியூரிலிருந்து, சரியான தொலைவில் இருக்கிறோம். இங்கிருந்து சுற்றிலும் கண்காணிக்கலாம்... வைகறையில் இங்கிருந்து பயணத்தை தொடங்கினால், சூரிய உதயத்தில் எதிரிகளை அடைந்து விடலாம்."
" நல்ல யோசனை மீனிசா.. " என்ற இராசேந்திரர் தனது வீரர்களைப் பார்த்துப் "வீரர்களே..... இவ்விடத்தில் அனைவரும் சற்று இளைப்பாறுங்கள்... சிறிது ஓய்வுக்குப் பிறகு பயணத்தை தொடர்வோம்.. அங்கு உங்கள் வேலுக்கும் ஈட்டிக்கும் சரியான உணவு காத்துக் கொண்டிருக்கிறது." என்றார்.
இளவரசரின் பேச்சால் மகிழ்ந்த வீரர்கள், அதை ஏற்று இளைப்பாறத் அவ்விடத்தை தயார் செய்தனர். நீண்ட தூரம் வந்த களைப்பில், மொத்தப்படையும் அப்படியே அயர்ந்து அமர்ந்தது. தளபதி மற்றும் இளவரசர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் பெய்யும் பணியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த இடத்தைச் சுற்றிலும் பார்த்தவாறே நடந்து சென்ற இளவரசர் அங்கிருந்த பாறை ஒன்றில் அமர்ந்தார்.
" என்ன இளவரசே!. ஏதோ தீவிர யோசனையில் இருப்பது போலல்லவா இருக்கிறது " என்று பேசியவாறே அருகில் சென்று அமர்ந்தார் அப்ரமேயர். அவருடன் சென்ற மீனிசா அவர்கள் பேசுவதைக் கவனித்தபடி நின்றுக்கொண்டிருந்தார்.
" அதெல்லாம் ஒன்றும் இல்லை. தளபதியாரே. இந்தக் காடுகளைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீங்களும் அமருங்கள் மீனிசா" என்று இளவரசர் சொல்ல மீனிசாவும் அங்கிருந்த சிறுபாறையொன்றில் அமர உரையாடல் தொடர்ந்தது. அவர்களுக்கு சிறிது தூரத்தில் வைணவதாசன் நின்று அவ்விடத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
"மீனிசா, காடுகளைப் பற்றிய உங்கள் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.. மன்னர் சரியான நபரையே உதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளார். அப்படிதானே தளபதியாரே"
"ஆம்.. இளவரசே.. மதியூகியான நமது மாமன்னர் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பார்.. அதனால்தான் நாம் வருமுன்னரே, குடமலை மன்னருக்கு ஓலை அனுப்பி விட்டார்.. அவரை விட இந்த வனத்தைப் பற்றி வேறு யாருக்கு தெரியப்போகிறது.
இந்த காடுகளைப் பற்றி நன்கு தெரிந்த குடநாட்டு மன்னரின் உதவி கிட்டியது நம் அதிஷ்டம்."
"ஆமாம்.. ஆமாம்.. சரியாகச் சொன்னீர்கள்... தளபதியாரே.. இவர் இல்லையெனில் இவ்வளவு விரைவாக இந்த பெரிய காடுகளைக் கடந்திருக்க முடியாது."
இப்படியாக இளவரசரும் தளபதியும் மீனிசாவின் ஆற்றலைப் புகழ்ந்து அவரைப் பாராட்டினர். அவர்களது புகழ்ச்சியில் உள்ளம் மகிழ்ந்த மீனிசா இருவரையும் நன்றியுடன் பார்த்தார்.
" நன்றி இளவரசே... நன்றி தளபதியாரே.. இது நாங்கள் பிறந்து வளர்ந்த இடமல்லவா.. இந்த காடுகளில் தானே, எங்கள் வாழ்க்கை அடங்கி உள்ளது. அதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் , இங்கு வாழ முடியாதல்லவா.."
"ஆமாம். ஆமாம்... இந்த சூழ்நிலையை உணராமல் இங்கு வாழ முடியாது "
"அதோடு... மிகப்பெரிய சோழ தேசத்திற்கு உதவிடும் வாய்ப்பு அமைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம் இளவரசே... மாமன்னருக்கும், சோழ தேசத்திற்கும் என்றும் நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம் "
"உங்கள் அன்பைக் கண்டு புலாங்கிதம் அடைகிறது என் உள்ளம். இதை அறிந்தால் மன்னரும் நிச்சயம் மனம் மகிழ்வார்.."
ஒருபுறம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாலும், இராசேந்திரரின் கண்களும் காதும் சுற்றிலும் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து சிறு இடைவெளி தூரத்தில் படை வீரர்கள் காரசாரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அது இரைச்சலாய் இருந்தாலும், அவர்கள் பேசுவதில் சில வார்த்தைகள் காதில் விழ, அதை உற்றுக் கவனித்தார். அவரது முகத்தில் புன்னகை மறைந்து ஆக்ரோஷம் குடியேறியது.
அவர்களுக்குள் நடந்த விவாதத்தை உணர்ந்து, பாறையிலிருந்து எழுந்து மெதுவாக அவ்விடத்திற்கு சென்றார்.
அவரைத் தொடர்ந்து அப்ரமேயரும், மீனிசாவும் அங்கு வந்தனர்
பேச்சின் மும்முரத்தில் இளவரசர் அருகில் வருவதை வீரர்கள் எவரும் கவனிக்கவில்லை. அருகில் சென்று சிறிது நேரம் அவர்கள் பேசுவதைக் கேட்ட இராசேந்திரர் அவர்களுடன் பேசத்தொடங்கினார்.
"ஏதோ பெரிய விவாதம் நடக்கிறது போலும்.. சொல்லுங்கள் நாங்களும் கேட்கிறோம்."
இளவரசரின் குரலைக் கேட்டதும், கூட்டம் மொத்தமும் அமைதியாய் எழுந்து நின்றது. அவர்களின் முகத்தில் அச்சத்தின் ரேகை படர்ந்து, அக்கடுங்குளிரிலும் அவ்வீரர்களுக்கு வியர்க்க தொடங்கியது
தொடரும்