Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வேங்கை மகன் பகுதி 6 : தடயம் அவிழ்த்த விடயம்

Copied!
Kavignar Vijayanethran

வேங்கை மகன் 

பகுதி 6 : தடயம் அவிழ்த்த விடயம்

அப்ரமேயரின் கேள்வியைத் தொடர்ந்து, நிசப்சத்தில் இருந்த அந்தக்கடும் வனத்தை விட, வெளிப்பகுதியில் பெரும் அமைதி நிலவியது. ஆனால் அங்கிருந்த வீரர்களின் இதயத்துடிப்பு மீனிசாவின் பதிலுக்காக பன்மடங்கு துடித்து உள்ளுக்குள் கலவரம் செய்தது. அப்ரமேயர் அமர்ந்திருந்த  யானைக்கு கீழ் நின்ற மீனிசாவின் கண்கள் தான் கண்ட இடத்தை நோக்கி குறிப்பால் உணர்த்த முயன்றது. அந்த பின்னிரவில் அது முடியாமல் போகவே "அங்கு...." என்று தான் வந்த திசையை நோக்கி கைவிரல்களைக் காட்டினார் மீனிசா. 

"அங்கு.. என்ன இருக்கிறது" என்று கேட்டவாறேப் பாகனைப் பார்த்தார். அப்ரமேயர் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பாகன், யானையின் மேனியை வருடி, காதருகில் தட்ட, யானை மெதுவாய்த் தனது முன்னங்கால்களை மடக்கி முட்டியிட்டது. அதன் வழியே கீழிறங்கிய அப்ரமேயர், தனது இடையினைச் சரி செய்தபடி  மீனிசாவை நோக்கினார். 

 சிறப்புக் குதிரைப்படையுடன் வந்து கொண்டிருந்த இளவரசர் இராஜேந்திரர்  அப்ரமேயர் யானையிலிருந்து கீழிறங்குவதைக் கண்டார். அங்கிருந்த சூழ்நிலையை அனுமானித்த இளவரசர்  கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். 

" என்ன ஆயிற்று?? அங்கு என்ன இருக்கிறது " 

வந்த வேகத்தில் மீனிசாவை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுத்தார் இளவரசர். தனது தோள்களுக்குப் பின்னால்  நின்று கேட்ட இளவரசரை " வாருங்கள்... காட்டுகிறேன்" என்றார்.

தளபதி அப்ரமேயரையும், இளவரசரையும் அழைத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தார். அணிபதிகளும் சில முக்கிய வீரர்களுடன்  அவர்களுக்குப் பின்னால் வந்து நிற்க, மீனிசா அந்த குறிப்பிட்ட தடயத்தைச் சுட்டிக் காட்டினார்.

"இதைச் சற்றுப் பாருங்கள்.. தளபதியாரே.."

"இது குதிரையின் கால்தடம் அல்லவா"

"ஆம்.. தளபதியாரே.. குதிரையின் கால்தடமே தான்"

" இதில் தயங்கக் காரணம் என்ன, மலையரசரே..." 

" தயக்கம் ஏதும் இல்லை இளவரசே.... இவற்றைக் காணும்போது மனதில் சில அனுமானம் தோன்றுகிறது.. இளவரசே.‌.. இதைச் சற்று உற்றுப்பாருங்கள். " என்றபடி அந்த தடத்தினருகில் குனிந்தார் மீனிசா..

அங்கிருந்த குதிரையின் காலடித் தடங்களைக் காட்டி, அதில் விரல்களை ஊன்றி அளவெடுத்தார். பின் அந்த மண்ணைக் கையில் அள்ளி உள்ளங்கைகளுக்கள் வைத்ததன் பதத்தை ஆராய்ந்தார்.  அதைக் கொண்டு அவ்விடத்தின் சூழ்நிலையை மனதால் கணக்கிட்டார்.

" இதில் தயங்குவதற்கு என்ன இருக்கிறது"

" இவை ஒற்றைக் குதிரையின் கால்தடங்கள் இளவரசே..." 

 மீனிசாவின் இந்தப்பதிலைக் கேட்டு, சிலர் சிரிக்கத் தொடங்கினர். பலரும் தங்களுக்குள் கிசுகிசுப்பாய்ப் பேசிக்கொண்டதால், அது அவ்விடத்தின் அமைதியை மாற்றி பரபரப்பை உண்டாக்கியது. 
 
" ஒரே ஒரு குதிரையின் கால்தடம்தானே.. அதனால் என்ன" என்று பின்னால் இருந்து குரல் வர,  அவர்களை அமைதியாய் இருக்கும்படிக் கைகளை உயர்த்திவிட்டு மீனிசாவைப் பார்த்தார் இளவரசர்.

" ஒற்றை யானை என்றால் யோசிப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஒற்றைக் குதிரைக்கு ஏன் இவ்வளவு யோசனை " 

இளவரசர்  கேட்டதின் அர்த்தத்தை உணர்ந்து, அதை ஆமோதிப்பது போல் மீனிசாவைப் பார்த்தார் அப்ரமேயர்.

" யோசனை குதிரையைப் பற்றி இல்லை இளவரசே.. அதைச் செலுத்தியவர் யாராக இருக்கலாம் என்பதைப் பற்றித்தான்" 

" என்ன சொல்கிறாய் மீனிசா" 

" ஆம் தளபதியாரே...இந்த தடத்தை வைத்துப் பார்க்கும் போது....."

" பார்க்கும் போது... "

 அப்ரமேயருடன், இளவரசரும் மீனிசாவின் பதிலை எதிர்பார்த்து அவரது முகத்தை சற்று பதற்றத்துடன் பார்த்தனர்

" சற்று பதற்றம் அடையாமல் இதைக் கவனியுங்கள் "

" ம்.. சற்று விளக்கமாகச் சொல் மீனிசா..." என்ற அப்ரமேயர் மீனிசாவிற்கு அருகில் குனிந்து முழங்கால்களைத் தரையில் ஊன்றி நிற்க, இராஜேந்திரரும் அவரருகில் குனிந்து நின்றார்.

" இங்கு பாருங்கள்.. இந்த தடத்தை...
தடங்களின் அழுத்தத்தைப் பொறுத்து விலங்கின் மனநிலையை யூகித்து அறியலாம். இங்கு குதிரையின் சுவடுகள் அழுத்தமாகப் பதியவில்லை. ஒவ்வொரு தடத்திற்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது. அதனால் இது மிக விரைவாக சென்றிருக்கிறது. வெறும் குதிரையாக இருந்தால் பொறுமையாகச் சென்றிருக்கும். இவ்விடம் சற்று ஈரமாய் இருப்பதால் பாதங்கள் ஆழமாய்ப் பதிந்திருக்கும். இந்த தடத்தின் அழுத்தத்தை வைத்துப் பார்க்கும் போது, அதனால் அதன் மேல் நிச்சயம் ஒரு ஆள் பயணித்திருக்கிறான்."

" ம்.. அவனால் நமக்கேதும் பிரச்சனை வருமா" 

" அதை நிச்சயமாகக் கூற முடியாது தளபதி அவர்களே...  தொடர்ந்திருக்கும்  சீரான இக்காலடித் தடங்களைப் பார்க்கும் போது, குதிரையின் மீது சென்றவன் அதைச் செலுத்துவதில் தேர்ந்தவனாய் இருக்க வேண்டும். அதோடு துரிதகதியில் வேகமாக அதைச் செலுத்தியிருக்கிறான். அதனால்..." 

" அதனால்... என்ன" 

இளவரசர் சந்தேகத்துடன் வினவ, பதிலைத் தொடர்ந்தார் மீனிசா.

" என் அனுமானம் சரியாக இருந்தால், அவன் நிச்சயம் ஒற்றனாகத்தான் இருக்க வேண்டும். இத்தடத்தின் ஈரத்தை வைத்துப் பார்க்கும் போது, இக்குதிரை சென்று அதிக நாழிகை ஆகியிருக்காது என்றே தோன்றுகிறது" 

மீனிசாவின் பதிலைக் கேட்டு யோசித்தவாறே இளவரசரைப் பார்த்தார் அப்ரமேயர். அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட இளைஞனும் " உங்கள் யூகம் என்னவென்று கூறுங்கள்" என்று மீனிசாவிடம் கேட்டார்.

" என் மனதில் தோன்றுவது என்னவென்றால், யாரோ ஒற்றன் நாம் வருவதைப் பார்த்து, நமது படைபலத்தைக் கணக்கிட்டு, அச்செய்தியை விரைவாக கங்க மன்னனுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். " என்று மீனிசா சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு எதிர் திசையில் இருந்து அந்த குரல் கேட்டது‌.‌

மீனிசாவின் மீதிருந்த கவனம் மொத்தமாய், பதில் வந்த திசையை நோக்கித் திரும்பியது. 

_தொடரும்
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வேங்கை மகன் பகுதி 5 : இருளில் முளைத்த திகில்

வேங்கை மகன் பகுதி 7 : ஒற்றனின் ஒற்றன்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 13 : குழப்பத்தைத் தீர்த்த ஓலை

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 12 : யார் அந்த ஒருவன்???..

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 11 : நல்மொழி தந்த நம்பிக்கை

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 10 : அமைதிக்குப்பின் அடித்த புயல்

கவிஞர் விஜயநேத்ரன்

வேங்கை மகன் பகுதி 9 : பதில் எழுப்பிய கேள்வி