வேங்கை மகன்
பகுதி 5 இருளில் முளைத்த திகில்
கூடாரத்தின் பின்புறம் மறைந்திருந்து கங்கப் படையினரின் கர்ஜனையைக் கேட்டுக்கொண்டிருந்த நிழல், மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது. அப்படியே நகர்ந்த நிழல் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த பகுதிக்குள் அரவமின்றி நுழைந்தது. எவ்வித பதட்டமுமின்றி இயல்பாக அவர்களைக் கடந்து சென்று இருட்டான பகுதிக்குள் மறைந்த நிழல்,அங்கிருந்து மின்னல் வேகத்தில் யார் கண்களிலும் தென்படாமல் காற்றின் வேகத்தில் விரைந்து காணாமல் போனது.
இதே வேளையில், நீண்ட தூரம் பயணித்து வந்த சோழர்படை அப்பெரும் வனங்களைக் கடந்து காவிரியின் தென்பகுதியை அடைந்திருந்தது. அந்தக் கடும் வனப்பகுதிகளில் அந்த மலைப்பிரதேசத்தைப் பற்றி நன்கறிந்த குடநாட்டு அரசன் மீனிசாவும், அவனது மலைப்படையினரும், காடுகளின் ஒவ்வொரு அசைவையும் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து முன்சென்று வழிகாட்டினர். அவர்கள் காட்டிய வழியில் நொடிப்பொழுதில் காடுவெட்டிகள் பாதை அமைத்தபடி முன்னேற, அவர்களைத் தொடர்ந்து யானைகளை அத்தடத்தில் செலுத்தினர். துடிப்பான சில குதிரை வீரர்கள் யானைகளுக்கு இருபுறமும் அரணாய் இணையாக முன்னேறி வழியை சீர்படுத்த தற்காலிகப் பாதை சிறப்பாக உருவானது.
அந்தப்பாதையில் இடங்கை வீரர்களும், வலங்கை வீரர்களும் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து அணிவகுத்துச் சென்றனர். நீண்ட தூரம் பயணித்து வந்த களைப்பு இருந்தாலும், உற்சாகத்துடன் முன்னேறி சென்றனர். அந்த வீரர்களில் ஒரு சிலரின் உடலில் கடுங்குளிரின் நடுக்கமும், முகத்தில் இனம்புரியாத ஐயத்தின் வாட்டமும் இலைமறை காயாக வெளிப்பட்டது.
ஆயுதங்கள் நிரம்பியிருந்த வண்டிகளுடன் பிணைக்கப்பட்ட மாடுகளும் யானைகளும் பாகன்களின் உதவியுடன் அதனைக் கவனமுடன் இழுத்து செல்ல, அப்படையினைத் தொடர்ந்து கம்பீரத் தோரணையில் யானையின் மேல் அமர்ந்து அப்படை நடுவில் வந்து கொண்டிருந்தார் அப்ரமேயர். அவரைச் சூழ்ந்து மற்ற வீரர்களும், யானைப்படையும் நடந்து வந்தது. குதிரை வீரர்களின் பாதுகாப்பில், மருத்துவ அணியினர் அப்பெரும் படைக்கு பின்பகுதியில் மருந்துகளுடன் வந்து கொண்டிருந்தனர். உணவு மற்றும் உடையளிக்கும் நடப்பு வீரர்களும் அவர்களின் பொருட்களுடன் ஆயுதம் ஏந்திய வீரர்களின் பாதுகாப்புடன் அவர்களுடன் பயணித்தனர். அவர்களுடன் வில்வீரர்களும், வால்வீச்சு வீரர்களும், கைக்கோளப் படையினரும் ஆராவாரமின்றி அமைதியுடன் அந்த வனப்பகுதியைக் கடக்க, குதிரைச்சேவகர்கள் என்றழைக்கப்படும் சிறப்பு குதிரை வீரர்கள் சூழ இளவரசர் இராஜேந்திரர் முன்செல்லும் வீரர்களின் அசைவுகளைக் கண்காணித்தபடி அப்படையினைக் கம்பீரமாக வழிநடத்த
வனப்பகுதியைக் கடந்து வெளிப்பகுதியை அடைந்தனர்.
அவ்விடத்தைச் சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்திய இளவரசர், அவரது முகவெட்டிற்கு ஏற்றவாறு அழகுற கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்தார். காவிரியின் நீரைக் குடித்து தாகம் தீர்த்துக்கொண்ட காற்றின் கரங்கள் இராஜேந்திரரின் மெல்லிய கேசத்தை வருடி அவற்றை நர்த்தனமாடச் செய்தது. காற்றின் கீதத்திற்கு ஏற்ப ஆடிய அந்த மெல்லிய கேசங்கள் அவரது சுந்தர வதனத்திற்கு பொலிவை அதிகரித்துக் காட்ட, அங்கிருந்த படைவீரர்களில் பலர் அவரது தோற்றத்தைக் கண்டு
" இளவரசரின் முகம் இவ்விருளிலும் எவ்வளவு பொலிவாய் இருக்கிறது"
" கந்தர்வன் போலல்லவா இருக்கிறார்"
" என்ன அழகு "
"வேலெடுத்து வந்த வேலன் இவர்தானோ"
என்று தங்களுக்குள் மெல்லிய குரல்களில் புகழ்ந்து பேசிக்கொண்டே நடந்தனர். இப்படிப் புகழ்மொழிகள் பல காதுகளில் விழுந்தாலும், அவரது கவனம் முன்செல்லும் வீரர்களின் அசைவிலேயே முழுதாய் இருந்தது.
அப்பெரும் படைக்கு வழிகாட்டியாக முன்னால் சென்று கொண்டிருந்த குடநாட்டு மலைப்படை தீடீரென ஒரு இடத்தில் அசையாமல் நின்றது. அதில் முன்சென்று வீரனின் பார்வை மீனிசாவின் பக்கம் திரும்பி கண்ணசைவில் செய்தியை கடத்தியது. அதன் அர்தத்தைப் புரிந்து கொண்ட மீனிசா தனது குதிரையில் இருந்து நொடியில் கீழிறங்கி அவ்வீரன் நின்ற இடத்தை அடைந்தார். வீரன் காட்டிய அவ்விடத்தைப் பார்த்து கண்ணசைவால் உறுதி செய்த மலைநாட்டு வேந்தன், தன் கைகளை காற்றில் அசைத்து சைகை செய்தார். அந்த எச்சரிக்கையைக் கண்டுணர்ந்த மொத்த படையும் அசையாமல் அப்படியே அவரவர் இடத்தில் நின்றது. படையின் பின்னால் குதிரைப்படையுடன் வந்து கொண்டிருந்த இளவரசரின் கரங்கள் அனிச்சையாய் வாளைத் தொட, வில்லெய்யும் வில்லிகள் நொடிப்பொழுதில் வில் மழை பொழிய தயார் நிலைக்கு சென்று தளபதியின் கட்டளைக்காகக் காத்திருந்தனர். மாத்திரை உணர்ந்த மற்றவர்களும் தங்களின் ஆயுதங்களை ஏந்தி நின்றனர். நொடிப்பொழுதும் மொத்தப்படையும் தாக்குதலுக்கு தயாராய் இருந்தது.
அந்தக் சமவெளியினை உற்று நோக்கிய மீனாசாவின் கண்கள் ஏதோ ஒன்றை உறுதிசெய்ய, பின்னால் யானையில் இருந்த அப்ரமேயரை பார்த்துவிட்டு ஈரம் நிறைந்த தரைப்பகுதியில் தனது முழங்கால்கள் பட குனிந்து அதன் மீது தனது கைகளை வைத்தார். அதனைக் கண்ணுற்ற அவர், தன் கரங்களை யானையின் தோள்களில் மெதுவாகத் தட்டி ஒலியெழுப்பினார். அதைக்கேட்டவுடன் அவ்விடம் விட்டு விரைந்து அப்ரமேயரின் யானைக்கு கீழ் வந்து நின்றார்.
" என்ன.. மீனிசா " என்று யானையின் மேல் அமர்ந்தவாறே அம்மலைவேந்தனைப் பார்த்து வினவினார் அபரமேயர்.
மீனிசாவின் பதில் என்னவாய் இருக்கும் என்று அறிய மொத்தப் படையும், இதயத்துடிப்பு எகிர மொத்தமாய் அவரை நோக்கிப் பார்வையைத் திருப்பியது.
தொடரும்...