வேங்கை மகன்
பகுதி 4 : கூடாரம் அதிர்ந்தது
தளபதி மத்தச பரமன்னனின் பேச்சைக் கேட்டு கூடாரத்தில் இருந்தவர்கள் ஆராவாரக் கூச்சலிட்டனர். அவர்களின் நகைப்பொலி அடங்கும் வரை காத்திருந்த குதிரை வீரன் முதல் இடியை அக்கூடாரத்தில் இறக்கினான்.
" மன்னர் அவர்கள் என்னை மன்னித்தருள வேண்டும். அது நடப்பது சாத்தியமில்லை. மன்...." என்று அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே " ஆவேசமடைந்த தளபதி ஜக்காரிக்கா " என்னடா சொன்னாய்.. முட்டாளே.. எங்கள் வீரத்தையா இழிவுபடுத்துகிறாய்... உன் தலையைக் கொய்து விடுகிறேன் பார்" என்றவாறே உருவிய வாளுடன் தூதுவனை நோக்கி விரைந்தான்.
ஜக்காரிக்கா வாளுடன் குதிரை வீரனின் கழுத்தை நெருங்கும் வேளையில் " நில். ஜக்காரிக்கா... பொறுமை பொறுமை " என்று தடைபோட்ட கங்க மன்னன் "சற்று அமைதியாக இரு ஜக்காரிக்கா... அவன் என்ன சொல்கிறான் என்று முழுமையாகக் கேட்கலாம். அதுவரை அவசரப்படாமல் இரு..." என்று அவனை நிறுத்தினான்.
அதைக் கேட்டு இருக்கையில் வந்தமர்ந்தாலும் ஜக்காரிக்காவின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது. கோபத்தில் பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த அவனது உடல் நடுக்கம் குறையாமல் இருந்தது. இருக்கையில் சரியாக அமராமல், வாளினை கையில் வைத்துக்கொண்டு தூதுவனின் பதிலுக்காக காத்து நின்றான்.
சற்று முன்னர் நகைப்பொலியால் நிரம்பி வழிந்த அக்கூடாரத்தில் சூன்யமான நிசப்தம் நிலவியது. அங்கிருந்த மற்ற தளபதிகளின் முகங்களில் அதிர்ச்சி, சந்தேகம், கோபம் என நவரசங்கள் இழையோடி இருந்தது. குனிந்து நின்றிருந்த குதிரை வீரனின் மனதிற்குள் அச்சம் குடி கொண்டு இருந்தாலும், எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல் சிலையென நின்றிருந்தான்.
அங்கிருந்தவர்களில் மன்னனின் முகத்தில் மட்டுமே தெளிவு இருந்தது. குதிரை வீரன் ஏதோ முக்கிய செய்தியை தெரிவிக்க நினைக்கிறான் என்பதை உணர்ந்து " நீ கூற வந்ததை சொல்... வீரனே "என்று ஆணையிட்டான்.
" மன்னர் உள்ளிட்ட அவையோர் என்னை மன்னிக்க வேண்டும். நான் சொல்ல வந்த செய்தி என்னவென்றால்.... சோழ வேந்தன் ராஜராஜன் அப்படையுடன் வரவில்லை.. அதனால்தான் அதற்கு வாய்ப்பில்லை என்றேன்"
தன் மனதில் இருந்த அந்த பெரும் அஸ்திரத்தை எய்துவிட்டு, தலைகுனிந்தவாறே மன்னரின் பதிலுக்காக காத்து நின்றான்.
அவ்வீரனின் பதிலை மனதில் ஏற்றுப் புரிந்துகொள்ள அவர்களுக்கு சிறிது நேரம் எடுத்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து விடையில்லா வினாவாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
" ராஜராஜன் வரவில்லையா"
" அது எப்படி"
" அதற்காகத்தானே காத்துக்கொண்டிருந்தோம்"
" அவன் எப்படி வராமல் இருப்பான்"
" பயந்து விட்டானா"
"இது என்ன விந்தை"
" நமது திட்டம் பாழாகி விட்டதே"
இப்படியாக ஒருவரையொருவர் பார்த்து கேட்டுக்கொண்டதால் சலசலப்பு எழுந்தது. தெளிவாய் இருந்த கங்கமன்னனின் முகத்திலும் இப்பொழுது சிறு சலனம் குடி கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது. அடுத்து வந்த கேள்வி அந்த சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது
" ராஜராஜன் வரவில்லை....
என்றால்....
படையை யார் வழிநடத்தி வருகிறார்கள் "
தனது உரத்த குரலில் சிந்தித்தவாறு தளபதி மாதல எரகங்கா கேட்ட கேள்வியில் மற்றவர்களின் சிந்தனையும் கடிவாளமிட்ட குதிரையாய் அதை நோக்கி திரும்பியது.
" சொல் வீரனே... படையை வழிநடத்தி வருவது யார்"
இப்போது கங்க மன்னனின் குரல் அங்கு கர்ஜனையாக ஒலித்தது. அதற்கான பதிலுக்காக, அவை மொத்தமும் குதிரை வீரனின் முகத்தை நோக்கி ஒன்றாய்க் குவிந்தது.
" அப்பெரும் படையை, தளபதி அப்ரமேயர் படையை வழிநடத்தி வருகிறார் "
மற்றவர்களின் முகத்தைப் பார்க்காமல் தூதுவன் பதிலளிக்க, அதுவரை கையில் தயாராக இருந்த தனது வாளினை உரையிலிட்டான் ஜாக்காரிக்கா.
"அப்ரமேயரா"
"அப்ரமேயரா"
"அது எப்படி"
மீண்டும் சலசலப்பு அதிகமாக கங்க மன்னனின் எண்ணத்தை சரியாக வினாவாகத் தொடுத்தான் சந்திகா.
" பிறகெப்படி.. இவ்வளவு விரைவாக வனம் சூழ்ந்த இப்பெரும் மலைப்பகுதியைக் கடந்து வந்திருக்கிறார்கள்..."
" அவர்கள் விரைந்து வந்ததற்கு..."
" வந்ததற்கு...என்ன காரணம்.. சொல் வீரனே"
" இப்பகுதியைப் பற்றி நன்கு தெரிந்த குடநாட்டு மீனிசாவும்,அவனது படையும் அவர்களுக்கு முன்நின்று வழிகாட்டி அழைத்து வருகிறது "
குதிரை வீரனின் பதிலைக் கேட்டு " ஓ...."என்றும் "ஆஹ்" என்றும் குரல்கள் எதிரொலித்தன.
" ஓ...... இந்தப் புலிக்கூட்டத்திற்குத் துணையாக, அந்த மலைநரியும் வருகிறதா...வரட்டும்... வரட்டும்.. அதன் வாலை.......ம்ஹ்ஹ்ம்.. அந்த நரிக்கு சரியான தண்டனை நாளை களத்தில் கிடைக்கும். ஹாஹாஹா." என்ற சோலக சஞ்சிதாவின் இடிச்சிரிப்பில் மற்றவரும் இணைந்து கொண்டனர்.
ஆனால் இதில் ஈடுபாடு இல்லாது இருந்த கங்கமன்னனின் மனதில் வேறேதோ ஓடிக்கொண்டிருந்ததால், தளபதிகளை நோக்கி விரலசைத்துச் அமைதிப்படுத்தினான் .
"மேலே... சொல்.... வேறு யார் யார் வருகிறார்கள்"
" மன்னர் அவர்களே, முக்கியத் தளபதிகள் யாரும் தென்படவில்லை.
"அவர்களின் வயது இந்த சூழலுக்கு ஏற்றதல்ல என்று சிந்தித்து இருக்கலாம்."
"இளைய வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களை இளவரசர் முன்னின்று அழைத்து வருகிறார்"
தூதவனின் இந்தப் பதில் சொல்ல மொத்த அவைக்கும் வியப்பாய் இருந்தது.
" இளவரசனா??"
" இராஜேந்திரனா"
" அந்த பொடியனா"
" வேங்கை வருமென்று வலைவீசினால், குட்டி அல்லவா வருகிறது "
" அந்த ஒற்றைக் குட்டிப் புலிக்காகவா நாம் இத்தனை மாவீரர்கள் கூடியிருக்கிறோம்."
இப்படியாக குரல்கள் மாறி மாறி ஒலித்தது. ஆளாளுக்கு பரிகாசித்து பேசி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
" புலியாக இருந்தால் சிறிது தாக்கு பிடிக்கும்... புலிக்குட்டி எவ்வளவு நேரம்.ஹாஹாஹா.."
" ஹாஹாஹா. சரியாகச் சொன்னார் ஜக்காரிக்கா.. வரும் புலி நம்மைக் கண்டு அஞ்சி பூனையாய், திரும்பிஓடாமல் இருந்தால் பரவாயில்லை.. ஹாஹாஹா"
தளபதி மாதல எரகங்கா பரிகாசித்து சிரிக்க, சில தளபதிகளின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டது.
" வேங்கையை வேட்டையாடலாம் என்று காத்திருந்தால், சிறு புலிக்குட்டியை அல்லவா அனுப்பி உள்ளான் அந்த ராஜராஜன் .ச்சை... "
" ஆம்.. புத்தாரா... சிறைபிடித்த தூதுவனை மீட்க வேங்கையே களத்திற்கு வரும். வேட்டையாடலாம் என்று நினைத்து காத்திருந்தால், குட்டியல்லவா வருகிறது.. மிகுந்த ஏமாற்றம் "
புத்தாராவின் கூற்றை ஆமோதித்து நொந்து கொண்டான் மலேபர மல்ல ஒயிகன்.
" ஒயிகரே!!!. வேதனையடைய வேண்டாம்.... வரும் வேங்கைக் குட்டியை சிறைபிடித்து வைப்போம். அதை மீட்கவாவது, வேங்கை வெறிகொண்டு வருமல்லவா.. அப்போது வேங்கையை வேட்டையாடுவோம் "
வெடிச்சிரிப்புடன் ரண்டகண்டன் உதிர்த்த வார்த்தைகள், ஏமாற்றத்தில் இருந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டுவந்தது . இதைக் கேட்ட அனைவரும் "நல்ல யோசனை... நல்ல யோசனை" என்று பாராட்டி செருக்குடன் நகைத்தனர்.
" நல்ல யோசனை ரண்டகண்டரே... ம்ம்ம்.. அருமையான யோசனை.இப்போதே நமது வெற்றி உறுதியாகிவிட்டது. முதலில் வரும் அந்தப் புலிக்குட்டியை சிறை பிடிப்போம்... பின்னர் வேங்கையின் உயிர் பறிப்போம்.... ஹாஹாஹா " என்று வெற்றிக் களிப்பில் மிதந்தபடி, தன் மீசையைத் தடவி இருமாப்புடன் கங்க மன்னன் சிரிக்க, தளபதிகளும் அவனுடன் சேர்ந்து சிரித்தனர். அந்த கூடாரத்தையே அதிரச் செய்த அவர்களின் நகைப்பொலி, கூடாரத்தைக் கடந்தும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
வெற்றிக் கனவில் மிதந்து கொண்டிருந்த அவர்களின் பார்வையில் படாதவாறு கூடாரத்திற்கு பின்னால் நின்றிருந்த நிழலுருவம் ஒன்று, அங்கிருந்து யாருமறியாமல் நகரத் தொடங்கியது.
_தொடரும்....