வேங்கை மகன்
பகுதி 3 : இடிச்சிரிப்பின் நிசப்தம்
நீண்டு வளைந்து ஓடிய காவிரி ஆற்றின் கரையோரம் தனது குதிரையுடன் பயணித்து வந்த அவ்வீரனுக்கு இன்னும் காற்றில் ஆடிய கொடியிலிருந்த உருவம் தந்த அச்சம் மனதிற்குள் முழுதாய் அகலவில்லை. பின்னிரவில் ஒளிர்ந்த பிறைநிலவொளியில் ஓடிக்கொண்டிருந்த தெளிந்த ஆற்றுநீரில் அவனும் அவனது குதிரையும் அரைகுறையாய் எதிரொளித்தனர். அப்படியே கரையோரம் வந்தவன் மனதிற்குள் ஏதோ தோன்ற, ஓரிடத்தில் குதிரையை நிறுத்தி அதிலிருந்து இறங்கினான்.
குதிரையின் முகத்தை தடவிக் கொடுத்து விட்டு, ஆற்றின் ஓரத்தில் இறங்கினான். அவனைத் தொடர்ந்து நீரில் இறங்கிய குதிரை, குனிந்து தனது தாகத்தை தீர்த்துக் கொண்டது. அப்பொழுது குதிரை வீரன் தனது தலைப்பாகையை அவிழ்த்து குதிரையின் மேல் வைத்தான். பின்னர் தன் முகத்தை மறைந்திருந்த துணியை எடுத்து நீருக்குள் நனைத்து பிழிந்து தோள்களில் போட்டான். வட்ட வட்டமாய் விரிந்த ஆற்றுநீருக்குள் தெரிந்த அவனது முகத்தை கைகளால் கலக்கி, அந்த நீரினை எடுத்து முகத்தைக் கழுவினான். குளிர்ந்த நீர்த்துளிகளை அள்ளி மரத்திலிருந்து தவறும் போது ஏற்பட்ட சிராய்ப்புகளின் மீது நனைத்து ஆறுதலடைந்தான். ஆற்றிலிருந்து வெளியே வந்து துணியால் முகத்தையும் கரங்களையும் துடைத்து விட்டு, குதிரையை அழைத்து அதன்மேல் ஏறி அமர்ந்தான் .
பொன்னியவள் தந்த குளுமையால் இருவருக்கும் இருந்த களைப்பு நீங்க, உள்ளுக்குள் பிறந்த புத்துணர்ச்சி முகத்தில் தெளிவைக் கூட்டியது. களைப்பு நீங்கிப் பயணத்தை தொடர்ந்த அவ்வீரன், தான் வழக்கமாகக் கடக்கும் ஆழங்குறைந்த ஓரிடத்தில் ஆற்றின் குறுக்கே குதிரையை இறக்கினான். நிசப்தம் இருந்த அவ்விடத்தில் ஆற்று நீருக்குள் இறங்கிய குதிரையின் காலடித்தடங்கள், பேரொலியாய் எதிரொலித்துக் கேட்டது. ஆற்றின் நடுப்பகுதியை அடைந்த போது குதிரையின் வயிறளவிற்கு நீர் சென்றாலும், அதற்கு நன்கு பழக்கப்பட்டதால் நளினமாக அப்பகுதியைக் கடந்து மறுகரையை வந்தடைந்தது குதிரை. அங்கிருந்து சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றிக் கண்காணித்த அவ்வீரன், தன்னை யாரும் கண்காணிக்கவில்லை என்ற உறுதியில் தனது குதிரையை வேகமாகச் செலுத்த, அவனது அவசரத்தை உணர்ந்த அக்குதிரையும் தனது முழு ஆற்றலையும் கொடுத்து மின்னல் வேகத்தில் பறந்தது.
ஆற்றங்கரை மணல் வெளியைக் கடந்து, தொடர்ந்திருந்த வனப்பகுதிக்குள் நுழைந்தது குதிரை. அந்த யாமப்பொழுதிலும் அவ்வீரனின் நேர்த்தியாலும், குதிரையின் திறமையாலும் இருளைக் கிழித்துக் கொண்டு, அந்த சிறு வனத்தைக் கடந்தனர். அங்கிருந்து வெளியேறி வந்தவனின் கண்களுக்கு, சற்று தூரத்தில் தீப்பந்த வெளிச்சங்கள் தென்பட, உற்சாகமடைந்தான். அவன் உற்சாகம் தொற்றிக்கொண்ட அவனது புரவியும் சிட்டாய்ப் பறக்க, அத்தீப்பந்தங்களை நோக்கி விரைந்தான்.
எரிந்து கொண்டிருந்த அத்தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் பெரிய கூடாரங்கள் இருப்பது அவன் பார்வைக்குப் புலனானது. அமைதியான அந்த பின்னிரவு வேளையிலும், கூடாரத்திற்கு அருகில் செல்ல செல்ல எதிரொலித்த பேச்சொலிகள், மனிதர்கள் பலர் குழுமியிருப்பதை உணர்த்தியது. அக்கூடாரங்கள் இருக்கும் திசையைப் பார்த்து, குதிரையின் தோள்களில் தட்டிக் கடிவாளத்தைச் சுண்டி இழுத்தான். அவன் செய்கையைப் புரிந்து கொண்டு மின்னல் வேகத்தில் ஓடிய குதிரையால் விரைவிலேயே அவ்விடத்திற்கு அருகில் வந்தான்.
பரந்து விரிந்த அந்தச் சமவெளிகள் வீரர்களாலும், கூடாரங்களாலும் நிரம்பி வழிவதை அவனால் காண முடிந்தது. நெருக்கமாகத் தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த அந்த கூடாரங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பலர் நடமாடிக் கொண்டிருந்தனர். சிலர் கூட்டம் கூட்டமாக அமர்ந்து அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் உறக்கத்தில் திளைக்க, இன்னும் சிலரோ மது மயக்கத்தில் கிடந்தனர். இப்படி ஒரு சாரர் ஓய்வில் கழிக்க, மறுசாரர் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஈட்டி, வாள் என ஆயுதங்களுடன் கவச உடையணிந்து போருக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பெரும் கூட்டத்தில் ஒரு புறத்தில் தினவெடுத்து இருந்த குதிரைகள் இளைப்பாறிக் கொண்டிருந்தன. இன்னொரு புறம் சிறு குன்றுகளைப் போல் யானைகள் படுத்திருந்தன. அதில் சில தலையாட்டியவாறு நின்று கொண்டிருந்தன. இதையெல்லாம் கண்களில் கண்டவாறே, கூடாரத்தை நெருங்கினான் அந்த குதிரை வீரன்.
பல அணிகளாகப் பிரிந்து, தங்களது வேலைகளில் மும்முரமாய் இருந்த கவச உடையணிந்த வீரர்கள் பலரும் அவர்களை நோக்கி ஒரு குதிரை வேகமாக வருவதைப் பார்த்து பரபரப்பாயினர். அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு, அனைவரின் கவனமும் ஒரு சேர அக்குதிரையையும் அதிலிருந்த வீரனையும் நோக்கியது. சிலர் வாள் ஈட்டியுடன் தயாரானார்கள். ஆனால் நெருங்கி வந்தவனைக் கண்டதும், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.
அதற்குள் அவர்களுக்கு அருகில் வந்த அவ்வீரன் குதிரையை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கினான். அவனது வருகை ஏற்படுத்திய பெரும் சலசலப்பில் அவ்விடம் விழித்துக்கொண்டது.
" என்னவாக இருக்கும் ?"
" என்ன செய்தி?
" இந்த நேரத்தில் என்ன"
அங்கிருந்தவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டே, குதிரைவீரனைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பேச்சையெல்லாம் கண்டு கொள்ளாது, அவர்களுக்கு நடுவே வேகமாக நடந்து சென்ற அவன், ஒரு கூடாரத்தின் முன் வந்து நின்றான்.
அங்கிருந்த வாயிற்காவலன் அவனைத் தடுத்து நிறுத்தி "உள்ள முக்கிய ஆலோசனை நடக்கிறது. அதனால் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பது அரசரின் ஆணை" என்றான். அவன் காதுகளில் தான் வந்ததன் நோக்கத்தை எடுத்தியம்ப, வாயிற்காவலன் முக மகிழ்வுடன் மறுப்பேதும் கூறாமல் உள்ளே அனுப்பினான்.
கூடாரத்திற்குள் நுழைந்தவனின் கண்களுக்கு ஒரு பெரும் அரசவையே தென்பட்டது. பெரும் விசாலமாய் ஆடம்பரத்துடன் அமைக்கப்பட்டிருந்த அக்கூடாரத்தில், கம்பீரமாய் பலர் அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அங்கு 18 தளபதிகள் இருபுறமும் அமர்ந்திருக்க அனல் பறக்கும் விவாதித்து கொண்டிருந்தனர்.
உள்நுழைந்த குதிரை வீரன், அங்கு நடுநயமாய் வீற்றிருந்தவரைக் கண்டு சிரம் தாழ்த்தி "கங்க மன்னருக்கு என் வணக்கங்கள்!!!" என்றான்.
பணிந்து நின்ற அவனது வணக்கங்களை ஏற்றுக் கொண்ட கங்கமன்னன் " வாரும். வாரும்.. நல்ல நேரத்தில்தான் வந்திருக்கிறாய். உனக்காகத்தான் இவ்வளவு நேரமாகக் காத்து கொண்டிருக்கிறோம். என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்.."
சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கங்க மன்னன், நீண்டிருந்த தனது மீசையைத் தடவிக்கொண்டே ஆர்வமாய்க் கேட்க, அவனைப் போலவே அங்கு கூடியிருந்த 18 தளபதிகளின் முகங்களிலும் செய்தி அறியும் ஆவல் பிரதிபலித்தது.
" மன்னர் அவர்களே!!! நீங்கள் எதிர்பார்த்தது போலவே எதிரிப் படை வந்து கொண்டிருக்கிறது. இப்போது காவிரியின் தென்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியை அடைந்திருக்கின்றனர். நாளை இங்கு எதிர்பார்க்கலாம்" என்றவனின் பதிலைக்கேட்ட கங்க மன்னின் விழிகள் சுருங்கி விரிந்தது.
" ஹ்ஹா.ஹா.ஹா... அற்புதமான செய்தி!. நம்மை நெடுநாள் காத்திருக்க வைக்காமல், இவ்வளவு தூரம் விரைந்து வந்திருக்கிறார்கள்.. அவர்களின் மரணத்தைத் தேடி.. ஹா..ஹா..ஹா...." என்ற கங்கை மன்னனின் சிரிப்பொலியில் அக்கூடாரமே அதிர்ந்தது. அதற்காகவே காத்திருந்தது போல மற்றவர்களும் மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.
"பலே... பலே... வரட்டும். வரட்டும்.. அந்தப் பெரும் வேங்கையின் சிரத்தை அறுத்து, நமது நண்பர் சேரமன்னர் பாஸ்கர ரவிவர்மருக்குப் பரிசாய் வழங்கி விடலாம். ஹா. ஹா.ஹா" என்று நரநரவெனப் பற்களைக் கடித்து ஆவேசமாய்க் கர்ஜித்தான் அங்கிருந்த படைத்தளபதிகளில் ஒருவனான ஹொய்சலன் நாகவர்மா.
" பலே.... நாகவர்மா.. பலே... அதற்காகத்தானே, இங்கே ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். களத்தில் நாளை, அந்தப் பெருமையை அடையப் போவது நம்மில் யாரென்று பார்க்கலாம்.." என்றான் மற்றொரு தளபதி மத்தச பரமன்னன்.
அதை அமோதித்து "ஆமாம்.. ஆமாம்." என்று உற்சாகத்தில், அங்கு கூடியிருந்த மற்ற தளபதிகளும் ஆளாளுக்கு ஆவேசத்தில் கர்ஜித்தனர். அந்தக் கூடாரம் முழுவதும் இடிச்சிரிப்பால் நிரம்பி வழிந்தது.
அப்படி கர்ஜித்தவர்களின் மொத்த சத்தத்துக்கும், அந்தக் குதிரைவீரன் தன் ஒற்றைப்பதிலில் முற்றுப்புள்ளி வைத்தான். அவன் சொன்ன செய்தியில் மொத்த கூடாரமும் சப்தமின்றி ஒருநிமிடம் அடங்கிப் போனது. சற்று முன்னர் கேட்ட இடிச்சிரிப்புகள் நொடியில் எங்கோ தொலைந்து போக நிசப்தத்தில் மூழ்கியது.
தொடரும்...