வேங்கை மகன்
பகுதி 2 : இரவில் ஒளிர்ந்த சூரியன்
மரக்கிளையிலிருந்து நிலை தவறி விழுந்து, கீழ்நோக்கிப் பயணித்த அந்த உருவத்தின் கைகளில் தொங்கிய கொடியொன்று சிக்கியது. நொடிப்பொழுதில், அனிச்சையாக அதைக் கரங்களில் பிடிக்க, வந்த வேகத்தில் ஊஞ்சலென தொங்கி ஆடியது. ஒருவழியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, அக்கொடியைப் பிடித்து மேலேறி ஒரு கிளையில் அமர்ந்தது. ஆனாலும், அவ்வுருவத்தின் படபடப்பு அடங்குவதற்கு சிறிது நேரம் பிடித்தது. நன்றாக மூச்சை இழுத்துவிட்டு படபடப்பைக் குறைத்துக் கொண்ட அவ்வுருவம், தனது பழைய மரக்கிழைக்கு முன்னேறி, அங்கிருந்தபடி தன்னை அச்சுறுத்திய காரணத்தை அறிய விரும்பி மீண்டும் தனது வேலையைத் தொடங்கியது.
நெருங்கி அருகில் வந்த அத்தீப்பந்த வெளிச்சத்தில் அணிவகுத்து வந்த வீரர்கள், இப்பொழுது அதன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தனர். அங்கு காடுவெட்டிகள் முன்னின்று பாதையமைத்துக் கொடுக்க, அவர்களைத் தொடர்ந்து யானைகளும் குதிரைகளும் வீரர்களும் அப்பாதையில் சாரைசாரையாய் முன்னேறிக் கொண்டிருந்தனர். சிலர் கைகளில் துணியாலான கொடிகளை ஏந்தியிருந்தனர். அந்த வனத்தின் காற்றில், அவர்களின் கைகளில் இருந்த அந்தக் கொடி நன்றாகப் பறந்து ஆடியது. காற்றில் ஆடிய அதன் நடுவில் வரையப்பட்டிருந்த மிருகத்தின் நிழலுருவம், நடு இரவில் உண்மையான மிருகம் போன்று தோற்றமளித்தது. அதைக் கண்டு அவ்வுருவத்திற்கு உள்ளத்தில் தோன்றிய படபடப்பில் மீண்டும் வியர்வைத்துளிகள் காதோரமாய் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. அதைத் தனது கழுத்திலிருந்து துணியால் துடைத்துக் கொண்டு, முதல் வரிசையிலிருந்து கடைசி வரிசை வரை, அங்கு யார் யார் வருகிறார்கள் என்பதை அறிந்திட முனைந்தது.
இரவினைக் கிழித்துக் கொண்டு காட்டின் நடுவே வீருநடை போட்டு வந்த அந்த படைக்கு நடுவே, ஒருவர் கம்பீரமாய் யானை மீதமர்ந்து வந்து கொண்டிருந்தார். காற்றில் ஆடிய குழலில் ஆங்காங்கே நரைமுடிகள் துள்ளி எட்டிப்பார்த்தாலும், வாளினைப் போன்று கூராய் வளைந்திருந்த மீசை அவரை ஆஜானுபாகுவாகக் காட்டியது. மத்திம வயதினைத் தாண்டி தோற்றமளித்தாலும், உறுதியான உடலமைப்பும், அதிலிருந்த விழுப்புண்களும் அவரது வீரத்தை பறைசாற்றியது. அவரது தீர்க்கமான பார்வை, எதையும் பொறுமையுடன் திறம்பட கையாள்பவர் என்பதை சொல்லாமல் சொல்லியது. இதையெல்லாம் தூரத்தில் மரத்தில் அமர்ந்தபடி கண்களைச் சுருக்கி விரித்து அவரது தோற்றத்தைக் கண்டு உறுதி செய்த அந்தக் கரிய உருவம், அங்கிருந்தப் பெருங்கூட்டத்தில் வேறொருவரைத் தேடி ஏமாந்து போனது. சற்றும் சளைக்காமல் இன்னும் கூர்மையாக பார்வையை செலுத்திய அதன் தேடல்களுக்கான பதில் கடைசிவரை அங்கு கிடைக்கவில்லை என்பதால், அக்கூட்டத்தில் வரும் மற்றவர்களை அடையாளம் காணும் வேலையை ஆரம்பித்தது.
அப்பெரும் கூட்டத்தின் ஒவ்வொரு அணுவையும் ஆராய்ந்த அதன் கண்களுக்கு, கூட்டத்தின் நடுவில் பதின்ம வயதினைத் தாண்டிய இளைஞன் ஒருவன் தென்பட்டான். குதிரையில் அமர்ந்தபடி மெதுவாக படைகளுடன் வந்து கொண்டிருந்த அவனது வசீகரத் தோற்றம் அவ்வுருவத்தின் பார்வையை அவனிடத்திலேயே நிலைகொள்ளச் செய்தது. அவ்விளைஞனின் மிருதுவான நீண்ட தலைமுடி, தென்றலாயங்கு வீசிய இளங்காற்றில் பறந்தாடி, அவனது வசீகரத் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்தது. பெருங்கனவைச் சுமந்திருந்த அவனது கண்கள், மற்றவர்களில் இருந்து அவனை தனித்துக் காட்டியது. அகன்ற நெற்றிக்கு கீழே, அளவாய் நீண்டிருந்த நாசித்துளைகளும், அதற்குக் கீழே அரும்பியிருந்த மீசையும் அழகுக்கு அழகு சேர்த்து தனித்துக் காட்டியது. அவனது திரண்ட உடலமைப்பும், துடிப்பான பார்வையும் அவன் வீரத்திலும் சளைத்தவன் இல்லை என்பதை அவ்வுருவத்திற்கு உணர்த்தியது. மாநிறத்திற்குச் சற்றுக் குறைவான நிறத்திலிருந்தாலும், பேரழகனாய்ப் பிரகாசித்த அவனது தோற்றம் அவ்விரவுப் பொழுதிற்கு ஒளிசேர்க்கும் சூரியனாகத் தோன்றியது.
தன் பார்வையிலேயே அந்த மொத்தப் படையையும் கட்டுக்குள் வைத்திருந்த அவ்விளம் வேங்கையின் விரலசைவுக்கு ஏற்ப, அவனுக்கு முன்னும் பின்னும் நடந்து வீரர்கள் முன்னேறி நடந்து கொண்டிருந்தனர். அவனை எதிர்பார்க்காத அவ்வுருவத்தின் கண்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாலும், மற்றவர்களை அடையாளம் காண முற்பட்டது. ஒவ்வொருவராய் பார்த்து அடையாளப்படுத்தி நினைவில் நிறுத்திக் கொண்ட அவ்வுருவத்தின் பார்வையில் அப்படைக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சிறுபடையைக் கண்டதும் உதட்டோரம் ஒரு புன்னகை வெளிப்பட்டு " ஓ... இவர்களா!!!" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டது. வேடுவர்களாய்த் தெரிந்த அவர்கள் விரைவாகவும், சாதுர்யமாகவும் கண் கொத்திப்பாம்பாக,அப்படைக்கு சரியான வழியினைக் காட்டி முன்சென்று கொண்டிருந்தனர். அவர்களின் துணையுடன் பின்னால் வந்த படையினர் எளிதாக முன்னேறி வருவதை அவ்வுருவம் உறுதி செய்தபின், மரத்திலிருந்து சரசரவென கீழிறிங்கி மரத்தோடு ஒன்றி நின்று சுற்றிலும் நோட்டமிட்டு " தான் யார் கண்ணிலும் படவில்லை" என்பதை உறுதி செய்து கொண்டது.
நெருங்கி வந்து கொண்டிருந்த அப்படையினரால், அதற்குமேல் அவ்விடத்திலிருப்பது பாதுகாப்பானது இல்லை என்று நினைத்து, வனத்தில் சூழ்ந்திருந்த இருளோடு கலந்து விரைந்தது. சிறிது தூரம் இருளுக்குள் மறைந்து நடந்துசென்ற அந்த உருவம் ஓரிடத்தில் வந்து நின்றது. அவ்விடத்தை சுற்றிப் பார்வையை செலுத்திய பின்னர், தன் கைகளை குவித்து வாயில் வைத்து "குக்கூ" என்று கூவியது. அந்த சத்தத்திற்காகவே காத்திருந்தது போல், மரங்களையொட்டி, ஓங்கி வளர்ந்திருந்த பெரும் செடிகளுக்குள் மறைந்திருந்த அதன் கரியகுதிரை அவ்வுருவத்தைப் போலவே இருளில் மறைந்து ஒளிந்து மெதுவாக நடந்து வந்து அதன் பக்கத்தில் நின்றது. தயாராக நின்ற அந்தக் குதிரையின் காதருகில் தடவிக் கொடுத்து விட்டு அதன் மேல் ஏறியமர்ந்த அவ்வுருவம், குதிரையின் முதுகில் தட்ட, இருளோடு இருளாக அக்குதிரை விரைந்து பறந்தது.
அடர்ந்த காட்டிலிருந்து வெளியே வந்த அந்த குதிரையின் மேல் அமர்ந்திருந்த அந்த உருவத்தின் தோற்றம் நிலவொளியில் வெளிவந்தது. நன்கு திரண்ட புஜங்களுடன் நேர்த்தியாகக் குதிரையைச் செலுத்திய அவனது திறமை அவனைக் கைதேர்ந்தவனாகக் காட்டியது. அதையொட்டி ஓடிக்கொண்டிருந்த காவிரி, காட்டிலிருந்து வெளியே வந்த குதிரைவீரனை வரவேற்றது. இருகரையோடும் துள்ளி விளையாடி அவ்விடத்திற்கு இரவின் குளுமையை அதிகமாய் வழங்கி, தனது பயணத்தைத் தொடங்கியிருந்த அந்தக் காவிரியின் கரையோரமாய்க் குதிரையுடன் பயணித்தவன் மனதிற்குள் ஏதோ தோன்ற, திடீரெனத் தனது குதிரையை நிறுத்தினான்.
_தொடரும்