வேங்கை மகன் : இருளின் கண்கள் (பகுதி1)
பொன்னொளி வீசும் அந்திமாலையினைக் கடந்து யாமத்தை நெருங்கிக் கொண்டிருந்த அந்த இரவுப்பொழுதில், இளம்பிறையிலிருந்து முழுமதியாகும் முயற்சியில் இருந்த நிலவொளியின் வெளிச்சத்தை வடிகட்டி காரிருளை ஆடையாக அணிந்திருந்தது அந்தப் பெரும் வனம். நள்ளிரவுக்கே உரித்தான நிசப்தத்தின் அமைதியை உடைக்கும் இயற்கையின் சிறு சிறு சத்தங்கள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் காட்டில், நீண்டு வளர்ந்திருந்த மரங்களின் கிளையிடுக்குகளில் நுழைந்த நிலவொளி, சில இடங்களில் வெளிச்சத்தை தெளித்தது. அச்சிறு ஒளியிலும் கண்களுக்குப் புலப்படாதவாறு காரிருளோடு கலந்து, ஓசையெழுப்பாமல் அடிமேல் அடிவைத்து கருங்குதிரையொன்று நடந்து வந்தது.
அந்தக் குதிரையின் மேலமர்ந்திருந்த உருவம், அதன் கடிவாளங்களைத் தனது பலமான கரங்களால் இறுகப் பிடித்துத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இருளோடு ஒன்றும் நிறத்தில் ஆடையணிந்திருந்த அந்த உருவம் முகத்தினை துணியால் மூடியிருந்தது. தலைப்பாகைக்கும், துணிக்குமிடையில் பளிச்சென இருந்த அதன் கண்களின் பார்வையிலிருந்து அக்காட்டிலிருந்த எதுவும் தப்பவில்லை. அப்படிக் கண்காணித்துக்கொண்டே வந்த அந்த உருவம் திடீரென ஓரிடத்தில் குதிரையை நிறுத்தியது. சிறிது நேரம் அவ்விடத்தில் நின்று சுற்றிலும் நோட்டமிட்டு சூழலை உணர்ந்த அந்த உருவம், குதிரையை விட்டு கீழிறங்கியது. பின்னர் குதிரையின் காதோரத்தில் மெல்லமாய்த் தடவி அதன் முதுகில் தட்ட, அதனைப் புரிந்துகொண்டு அங்கிருந்து நகன்ற குதிரை இருளோடு கலந்து மறைந்து கொண்டது.
குதிரை மறைந்ததை உறுதி செய்து கொண்ட அவ்வுருவம், தன்னுடைய வேலையைத் தொடங்கியது. சுற்றும் முற்றும் விழிகளைச் சுழற்றி அவ்விடத்தைக் கிரகித்தபடி, அங்கிருந்த உயரமான மரமொன்றில் சரசரவென ஏறியது. அனுபவம் நிறைந்த கடுவனைப் போல் மேலேறிய அந்த உருவம், சரியான இடத்தில் மரத்தோடு மரமாய் கிளைகளுக்குள் தன்னைப் பதுக்கிக் கொண்டது. அந்த இடத்திலிருந்து மொத்த வனத்தையும் தனது கண்களின் பார்வை வட்டத்துக்குள் கொண்டு வந்த மகிழ்ச்சியில் அதன் கண்கள் பிரகாசித்தது. பூமியிலிருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் இரையைச் சரியாகக் கண்டறியும் கழுகின் கண்களைப் போன்ற அவ்வுருவத்தின் கண்கள், அங்கு மறைந்து எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தது.
அந்தக் கழுகுக்கண்கள் நாலாபுறமும் அலசி, அக்காட்டின் ஒவ்வொரு அசைவையும் அணுஅணுவாய்க் கேட்டு ஆராய்ந்து கொண்டிருந்தது. அக்காட்டைச் சுற்றியுள்ள மொத்த இடத்தையும் இரையாக விழுங்கிக் கொண்டிருந்த அந்த சுழல்விழிகள், திடீரென ஒரிடத்தில் நிலைகொண்டது. எதிர்பார்த்த இரையினைக் கண்டதுபோல அதன் விழிகள் சுருங்கி விரிந்தது. அந்தத் திசையை நோக்கி தனது பார்வையைக் கூர்செய்து தீவிரக் கண்காணிப்பில் இறங்கியது. அக்காட்டிலிருந்து தொலைதூரத்தில் ஏதோ சிறு வெளிச்சம் தென்பட்டது. ஆடாமல் அசையாமல் மரத்தோடு மரமாக பதுங்கியிருந்த அந்த உருவம், அந்த வெளிச்சத்தை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியது.
மின்மினிப் பூச்சியாய் தொலைதூரத்தில் தெரிந்த வெளிச்சம் தீப்பந்தமாய் கண்களுக்குப் புலப்பட்டது. ஒற்றை வெளிச்சமாய்த் தெரிந்த தீப்பந்தம் நெருங்கி வர வர, ஒன்று இரண்டாகி, இரண்டு நூறாகி, நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களாக மாறியது. அப்படி மாறியத் தீப்பந்தங்கள் தான் இருக்கும் திசையை நோக்கி வருவதை உறுதிசெய்த அக்கண்கள், அத்தீப்பந்த ஒளியில் தெரியும் காட்சிகளை ஒரோவியனைப் போல் அப்படியே மனதிற்குள் நிலைநிறுத்திப் பதித்துக்கொண்டது.
அந்த கண்களின் எதிர்பார்ப்பினை ஏமாற்றாதவாறு, அந்த தீப்பந்தங்களை ஏந்தி வந்தவர்களும் சாதாரணவர்களாக இல்லை. கையில் ஆயுதங்களைச் சுமந்து போர் உடை தரித்துக் கம்பீரமாக நடந்து வந்தனர். அணியணியாய் வந்து கொண்டிருந்த அப்படை வீரர்களுடன் யானைகளும், குதிரைகளும் பெருமளவில் வந்து கொண்டிருந்தது. கண்களின் வழியாக ஊடுருவிய அந்தக் காட்சிகளை மனதிற்குள் நிலைநிறுத்திக் கொண்ட அந்த உருவம், நொடிப்பொழுதில் அந்த எண்ணிக்கையை கணக்கிட்டு முடித்தது.
தீப்பந்தங்கள் நெருங்கி அருகாமையில் வர, உத்தேசமாய்த் தெரிந்த உருவங்கள் எல்லாம் ஓரளவு தெளிவாகத் தெரியத் தொடங்கியது. மர உச்சியில் கிளைகளின் அரவணைப்பில் அமர்ந்து அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உருவத்தின் கண்களில் அச்சத்தின் ரேகைகள் படரத்தொடங்கியது. உடலை உறைய வைக்கும் அக்கடுங்குளிரிலும், வியர்வைத் துளிகள் வெளிவந்து அதன் முகத்தில் வடிய ஆரம்பித்தது. தீடீரென எதையோ கண்டஞ்சிய அந்த உருவத்தின் பிடி தளர, அமர்ந்திருந்த கிளையின் அணைப்பிலிருந்து நிலைதடுமாறிச் சடசடவென கீழ்நோக்கி விரைந்து தனது பயடத்தைத் தொடங்கியது. மின்னல் வேகத்தில் கீழ்நோக்கி சென்றுகொண்டிருந்த அவ்வுருவம், ஏதாவது சிக்குமாவெனகைகளத் தனது கரங்களை நீட்டித் தேடியபொழுது அது நடந்தது.
தொடரும்....