வேங்கை மகன்
பகுதி 18 உள்ளத்தூரிகையில் உயிர்த்தெழுந்த ஓவியம்
ஆலோசனைக் கூட்டத்தில் போர் வியூகங்கள் பற்றிய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராய் வெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள். அநிருத்தரும், இராஜராஜரும் இளவரசரை அழைத்து பேசிக்கொண்டிருக்க, வந்தியத்தேவரின் பார்வை அரைமனதாய் அங்கிருந்து சென்று கொண்டிருந்த அப்ரமேயரின் பக்கம் திரும்பியது.
" அவசரமாக ஒரு சிறு வேலை இருக்கிறது. தாங்கள் அனுமதி அளித்தால்..." என்று வந்தியத்தேவர் கேட்டதும், அவரது உள்ளுணர்வை உணர்ந்து அநிருத்தர் தலையசைத்தார்.
சிறு புன்னகையுடன் அங்கிருந்து விடைபெற்று வெளியே வந்தார் வந்தியத்தேவர். சுற்றிலும் எதையோ தேடி பார்வையைச் சுழற்றிய அவரது கண்கள், முற்றத்தின் சுவர்களில் கை வைத்தவாறு சிந்தனையில் மூழ்கியிருந்த அப்ரமேயரின் முகத்தைக் கண்டு, அவரின் எண்ண ஓட்டத்தை உள்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது. மன்னரின் முடிவை ஏற்றாலும், அப்ரமேயர் மனதிற்குள் காட்டாறு போன்ற இளவரசரை களத்தில் எவ்வாறு கையாளப் போகிறோம் என்ற பெரும் சூறாவளி வீசத் தொடங்கியது.
" மன்னரோ, எனக்கு மேலுள்ள வேறு தளபதிகளோ வந்திருந்தால், அவர்களின் கட்டளைகளுக்கு தயக்கமின்றி, கீழ்ப்படிந்து செயலாற்றி இருப்பேன். எனக்கு கீழுள்ளவர்கள் என்றால், என் மனவோட்டத்திற்கு ஏற்ப செயல்படலாம். ஆனால், இப்போது என்ன செய்வது??.இது என்ன விந்தையான சூழ்நிலை? இதை எவ்வாறு கடக்கப் போகிறோம்."
"ஆற்று நீருக்கு அணை கட்டித் தடுத்து கட்டுப்படுத்தலாம். காட்டாற்று வெள்ளத்திற்கு கரை போட முடியுமா?. முதல் முறையாகக் போர்க்களத்திற்கு வரும் இளவரசர் கள நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள முடியுமா?. இளவரசர் என் கட்டளையை ஏற்பாரா?. எனது ஆலோசனைகளுக்குத்தான் செவி சாய்ப்பாரா?. சிறு தவறு நேர்ந்தாலும், மொத்த பழியும் என்மேல் அல்லவா வந்து விழும்?. இளவரசரைக் கட்டுப்படுத்தக் கூடிய மன்னரோ, வந்தியத்தேவரோ, அநிருத்தரோ உடன் வந்திருந்தால், நன்றாக இருந்திருக்குமே?."
இப்படியாக அலைகின்ற காற்றின் வேகத்திற்கு ஏற்ப மிதக்கின்ற முகிலாய், அப்ரமேயரின் மனம் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் இப்படியும் அப்படியுமாக சுழன்று கொண்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் வெளிக்காட்டாமல் இரவு வானில் நகர்ந்து கொண்டிருந்த அந்த பிறைநிலைவைப் பார்த்தவாறு முற்றத்தில் நின்றுகொண்டிருந்தார்.
ஆனால் வந்தியத்திதேவரின் விசாலமான பார்வை அப்ரமேயரின் ஆழ்மனதில் ஊடுருவி, அதையெல்லாம் கைதேர்ந்த ஓவியனின் கரத்திலிருக்கும் தூரிகையாய் கிரகித்து அவரது மனதிற்கு அச்சு அசலாய் வரைந்து காட்டியது. மன்னர் மற்றும் அநிருத்தரிடம் பேசிவிட்டு வெளியே வந்த இளவரசர் " மாமா.." என்று ஏதோ பேச முற்பட, அவரது தோள்களில் கைகளைப் போட்டவாறு அங்கிருந்து அப்ரமேயருக்கு எதிர்த்திசையில் நடக்கத் தொடங்கினார்.
வந்தியத்தேவரின் ஒரு கை இராஜேந்திரர் தோள்களில் இருக்க, மறு கை காற்றில் சித்திரம் போல எதையோ வரைந்தது. இதற்கெல்லாம் அர்த்தம் அறியாது அவரையே பார்த்துக்கொண்டு தொடர்ந்து அவருடன் நடந்த இளவரசர் மெதுவாக தனது சந்தேகத்தை ஆரம்பித்தார்.
" என்ன மாமா. என்ன ஆயிற்று"
" சொல்கிறேன் இராஜேந்திரா. உன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பதற்கு முன், உன் மேல் இருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம்."
வந்தியத்தேவர் இவ்வாறு சொல்ல, அது இளவரசரின் குழப்பத்தை அதிகரித்தது.
" என்மீது என்ன சந்தேகம்.. யாருக்கு சந்தேகம்.. என்ன சொல்கிறீர்கள் மாமா???"
இருவரும் பேசிக்கொண்டே இளவரசரின் அறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த ஆசனத்தில் இராஜேந்திரரை அமர்வை வைத்து விட்டு, அவருக்கு எதிரில் இருந்த ஆசனத்தில் அமர்ந்த வந்தியத்தேவர், மௌனமாய் இளவரசர் மீது கீழிருந்து மேலாக பார்வையைச் செலுத்தினார்.
" மாமா அவர்களே.. பதில் சொல்லுங்கள்"
என்று வினவ, மௌனத்தைக் கலைத்து பேச்சைத் தொடர்ந்தார் வந்தியத்தேவர்.
" சரி. சொல்கிறேன். அதற்கு முன்பாக எனது சில கேள்விகளுக்கு நீ விடையளிக்க வேண்டும். அப்போதுதான் நீ கேட்கும் கேள்விக்கு என்னால் சரியாகப் பதில் சொல்ல முடியும்".
வந்தியத்தேவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்ட இளவரசர், சிறிது யோசனைக்குப் பிறகு " சரி. கேளுங்கள். மாமா. பதில் சொல்கிறேன்". என்றார்.
" சிறு வயதில் இருந்தே, உனக்குப் போர்க்களங்களின் மீது தீராத மோகம் உண்டு என்பதை நானறிவேன். அதற்கான வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது "
" ஆம். மாமா. அதற்கு உங்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்காக பரிந்துரை செய்ததற்கு."
" நீ எனக்கு மருமகனாக இருந்தாலும், மகன் போன்றவன். நானும், உனது அத்தையாரும் அப்படித்தான் உன்னைப் பார்க்கிறோம்."
" அதை அறிவேன் மாமா. தந்தைக்கு இணையான, சில நேரங்களில் அவரையும் விஞ்சிய உங்கள் அன்பும் வழிகாட்டுதலுமே என்னை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது."
" உன் வார்த்தைகளால் உள்ளம் பெருமிதம் கொள்கிறது மருமகனே. அதே வேளை, நீ ஏதேனும் தவறிழைத்தாலும், அதன் பொறுப்பையும் நானே சுமக்க வேண்டும் என்பதையும் நீ உணர வேண்டும் "
" நிச்சயமாக. அப்படியொரு நிலையை உங்களுக்கு உண்டாக்க மாட்டேன் மாமா.. " என்ற இளவரசர் எழுந்து சென்று, வந்தியத்தேவருக்கு எதிரில் முழங்காலிட்டு அமர்ந்து, தனது கைகளை அவரின் கைகளில் வைத்து அழுந்தப் பிடித்தார். அப்படியே அவரது முகத்தைப் பார்த்தார்.
வந்தியத்தேவர் தனது கரங்களால் இளவரசரின் முகத்தைத் தடவிக் கொடுத்தார். அதில் வெளிப்பட்ட பேரன்பை உணர்ந்த இளவரசர், எழுந்து வந்து மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார்.
"சரி. முதல் போர்க்களத்தில் என்ன செய்வதாக உத்தேசம்"
" நிச்சயமாக வெற்றியோடு திரும்புவேன் மாமா."
" அந்த நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது. ஆனால்"
" ஆனால்..என்ன மாமா... நீங்கள் எதையோ என்னிடம் மறைப்பது போல் உள்ளது. என்ன அது?"
" வெற்றியை விட நீ செய்ய வேண்டியது இன்னொன்றுதான். அதை செய்தால் உனக்கு வெற்றி தானாக வரும்"
" கட்டளையிடுங்கள் மாமா.. அதைச் செய்து முடிக்க காத்திருக்கிறேன்."
" நீ வெறும் சாதரண வீரனாகவோ, தளபதியாக மட்டுமே இருந்தால் வெற்றா மட்டுமே உனக்குப் போதுமானதாக இருக்கும். அதை நோக்கி மட்டுமே நீ பயணித்தால் போதும். "
இராஜேந்திரரின் விழிகளை நோக்கிய வந்தியத்தேவரின் கண்கள், அவருக்கு சொல்ல முடியாத பல அர்த்தங்களை உணர்த்தியது. அதை மொத்தமாய் கிரகித்துக் கொள்ளும் ஆசையில் அவரது வார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
" சொல்லுங்கள் மாமா. அப்போது என்னுடைய இலக்கு என்ன?"
" ஒரு வீரனுக்கு வெற்றியே முக்கியம். வெற்றி மட்டுமே முக்கியம். ஆனால் நீ எதிர்காலத்தில் இந்த சோழ அரியணையை அலங்கரிக்கும் பேரரசன். உன் சிந்தனை மற்றும் செயல் எல்லாம் ஒரு அரசனைப் போலவே இருக்க வேண்டும்."
" போர்க்களத்தில் ஒரு அரசனுக்கும், வீரனுக்கும் என்ன வித்தியாசம்?.. சற்று விளக்கமாகக் கூறுங்கள் மாமா.. "
" ஹாஹாஹா.. சொல்கிறேன்.. இராஜேந்திரா. சொல்கிறேன். அதற்காகத்தானே உன்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.."
வந்தியத்தேவர் கவர்ந்திழுக்கும், தனது தனித்தன்மையான மந்தகாசப் புன்னகையுடன் இளவரசரை நோக்க, அந்த வார்த்தைகள் தனது வாழ்வில் இது எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கப் போகிறது என்பதை அறியாவிட்டாலும், அதைக் கேட்கும் ஆவல் அவரது கண்களில் ஒளியாய்ப் பிரகாசித்தது.
- தொடரும்.