வேங்கை மகன்
பகுதி 17 : இமயம் வெல்லும் இதயத்தின் கனவு
தஞ்சையில் இருந்து புறப்பட்டதில் இருந்து நடந்த மாற்றங்கள் அவரது எண்ணங்களையும், அது உருவாக்கி இருந்த பெரும் பிம்பங்களையும் மொத்தமாகத் தகர்த்தெரிந்து, முற்றிலும் புதியதாய் மாற்றி இருந்தது. ஆனாலும், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி மட்டும் அவருக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதற்கும் விடை கிடைத்ததால், அப்ரமேயரின் உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது.
" என்ன தளபதியாரே! பௌர்ணமி முழு நிலவாய் முகம் பிரகாசமாய் இருக்கிறதே"
" இருக்காதா?. உள்ளுக்குள் அரித்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதே"
" இன்னும் நீங்கள் அந்த இரண்டாம் நபர் யாரென்று சொல்லவில்லையே"
இளவரசர் பதில் தெரியாதது போல், முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட அவரது உள்ளன்பை உணர்ந்த அப்ரமேயர் பேச்சைத் தொடர்ந்தார்.
" நான் யாரை நினைத்தேனென்று உங்களுக்குத் தெரியாதா என்ன??"
" ஹாஹாஹா.. நான் என்ன அநிருத்தரா. அடுத்தவர் உள்ளத்தை சொல்லாமல் அறிந்து கொள்ள??.. யாரென்று சொல்லுங்கள். சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம்"
" வேறு யாராக இருக்க முடியும். சோழ தேசத்திற்காக, தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒப்படைத்த மாவீரர். உங்களின் விரல் பிடித்து வழி நடத்தும் மாதாண்ட நாயகர். அநிருத்தருக்கு அடுத்தபடியாக சோழ தேசத்தில் பெரும் நிதானி என்றால், அது வல்லவரையர் வந்தியத்தேவர்தான் என்று உலகமே அறியுமே"
" ஹாஹாஹா... மிகச் சரியாகச் சொன்னீர்கள் அப்ரமேயரே.. அவர்தான். என் தந்தையை விட, என் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் அறிந்தவர்."
வந்தியத்தேவரைப் பற்றிப் பேசும் போதே, அவரது உள்ளத்தில் ஒரு பெருமிதம் உருவாகி அது முகத்தில் வெளிப்பட்டது. அவரது ஆழ்மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த வந்தியத்தேவரின் முகம் அவரது கண்முன்னே எதிரொளித்தது.
" ஆம். இளவரசே. வந்தியத்தேவருக்கும் குந்தவை நாச்சியாருக்கும் உங்கள் மேல் உள்ள அன்பினை வார்த்தையால் விவரிக்க இயலாது. அதிலும் குந்தவை நாச்சியார், உங்களால் தான் சோழ தேசம் கடல்தாண்டி விரிவடையும் என்பதில் உறுதியாக இருக்கிறார். "
அப்ரமேயரின் வார்த்தைகளைக் கேட்டு பெருமிதத்திலும், அன்பிலும் இளவரசரின் கண்கள் சில துளி கண்ணீரை வடித்தது. அதை அப்ரமேயர் அறியாமல் துடைத்துவிட்டு புன்னகையுடன் திரும்பி பேச்சைத் தொடர்ந்தார்.
" ஏன்?. உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையா??."
பரிகாசித்து வினவிய இளவரசருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினார் அப்ரமேர்.
" என்ன?. தளபதியாரே.. கூறுங்கள். உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையா??.."
" உண்மையைச் சொல்லலாமா??.."
" தாராளமாக சொல்லுங்கள். என்னிடம் என்ன தயக்கம் உங்களுக்கு?.."
" சில நாட்களுக்கு முன்னால் இதே கேள்வியைக் கேட்டிருந்தால், என் மனம் பெரும் சந்தேகத்துடன் பதிலளித்து இருக்கும். என்னிடம் நம்பிக்கை இருந்திருக்காது. ஆனால், .."
அப்ரமேயர் அப்படியே அமைதியாக, இளவரசர் அவர் கண்களை நோக்கினார்.
" ஆனால்?... இப்பொழுது உங்கள் மனவோட்டம் என்ன??" .
" இப்பொழுது முழு நம்பிக்கை வந்துவிட்டது. உங்களால் இந்த சோழ தேசம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினமும் பெருமை கொள்ளும் என்று சந்தேகமின்றி சொல்வேன் ".
" அப்படியா... அது எப்படி.. திடீரென்று என்மேல் இவ்வளவு நம்பிக்கை.."
" ஆமாம் இளவரசே. திடீரென்று தான். ஆனால் அதை நீங்கள்தான் உருவாக்கி இருக்கிறீர்கள். உங்களைப் பற்றி நான் நினைத்த அனைத்தும் தவறென்று உணர்த்தி விட்டீர்கள். உங்களால் சோழ தேசம் பெருமை கொள்ளும் என்ற நம்பிக்கை என்னுள் உருவாகி இருக்கிறது. "
" என்னைப் பற்றிய உங்களின் உயர்வான எண்ணங்கள் எனக்கு பெருமகிழ்வை உண்டாக்கி இருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம் தோன்றுகிறது. உங்களிடம் கேட்கலாமா"
" தாராளமாகக் கேளுங்கள் இளவரசே"
" என்னிடம் பெரிதாய் அப்படி என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது ??. எதனால் அந்த நம்பிக்கை?."
இளவரசர் இவ்வாறு கேட்டதும், அப்ரமேயரின் உள்ளத்தில் இராஜேந்திர ரை முதல் முறைக் கண்டது முதல் இப்போது வரையிலான காட்சிகள் எல்லாம் விரிந்தது. அதை உட்கிரகித்துக் கொண்ட அப்ரமேயர் மெதுவாக பார்வையை இளவரசரின் மேல் திருப்பினார்.
" உங்களை சிறுவயதில் இருந்தே கண்டு வருகிறேன்.?"
" ஆம். அதனால்தான் கேட்கிறேன். இவ்வளவு நாள் இருந்த சந்தேகம் நீங்கி நம்பிக்கை வரக் காரணம் என்ன?"
"உங்களின் வீரத்தின் மேல் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது. பல நேரங்களில் ஆதித்த கரிகாலர்தான் தன் உள்ளக்கிடங்கை நிவர்த்தி செய்துகொள்ள மீண்டும் பிறப்பெடுத்து உள்ளாரோ என்று அனைவரையும் நினைக்க வைக்கும். "
" ஆம்.. தந்தையும், மாமாவும் பல முறை இதை என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் பெரிய தந்தை பற்றிய கதைகளைச் சொல்லும் போது, எனக்குள் பெரும் பிரமிப்பு உருவாகும். இளம் பிராயத்தில் சேவூர் போர்க்களத்தில் ஆடிய தாண்டவத்தைக் கேட்கும் போதே, மயிர்கூச்செரியும். அவரது கனவை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அதுவே என் பாக்கியம்"
இளவரசரின் உள்ளத்தில் இனம்புரியாத ஒரு உணர்வு தோன்றி, அவரது மனதிற்குள் பரவசத்தை உண்டாக்கியது. அது அவரை பேசவிடாமல் மௌனமாக்கியது. அங்கு நிலவிய அமைதியை உடைத்து பேச்சைத் தொடர்ந்தார் அப்ரமேயர்.
" நிச்சயமாக அதை நீங்கள் செய்வீர்கள். உங்களால் இமயம் தொட்டு, கடல்தாண்டியும் சோழ தேசத்தின் புலிக்கொடி பறக்கும். "
"அதைச் செய்ய வேண்டியது என் கடமை. மன்னர், அநிருத்தர், மாமா போன்றோரின் வழிகாட்டுதலில் நிச்சயமாக அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன். நீங்கள் தொடருங்கள்"
" இதுதான் இளவரசே. உங்களிடம் இதுவரை நான் காணாதது. இதனால்தான் நம்பிக்கை பிறந்துள்ளது"
" என்ன கூறுகிறீர்கள் தளபதியாரே?.."
" உங்களிடம் கரிகாலரிடம் இருந்த அதே ஆக்ரோசமும் கோபமும் இருந்தாலும், கரிகாலரிடம் இல்லாத ஒன்றை அனைவரும் உங்களிடம் எதிர்பார்த்தோம். அது சரியான நேரத்தில் வெளிப்பட்டதே நம்பிக்கக்கான காரணம்"
அப்ரமேயர் இவ்வாறு சொல்ல, இளவரசரின் மனம் பெரும் குழப்பத்தில் உழலத் தொடங்கியது. அவர் தனது சந்தேகத்தை அப்ரமேயரிடம் வினவினார்.
" அப்படியா??. என்ன அது??."
"வீரத்திலும், வேகத்திலும் கரிகாலருக்கு ஈடுகொடுப்பது கடினம்.அதே வேளையில், தன்னுடன் இருக்கும் வீரர்களிடமும் அதையே எதிர்பார்ப்பார். அவர்களுக்கு, தாமும் அவர்களின் ஒருவன் என்ற நம்பிக்கையைக் கொடுப்பார்.
களத்தில் முரட்டுத்தனமாக வெறி கொண்டு சண்டையிடும் வீரர்களை வெகுவாக பாராட்டுவார். ஆனால்...."
ஆதித்த கரிகாலனைப் பற்றி அப்ரமேயர் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த இளவரசரின் எதிர்பார்ப்பிற்கு அந்த ஆனால் பெரும் தடையிட்டது.
"ஆனால் என்ன??. "
பெரும் ஆர்வத்துடன் இளவரசர் பரபரப்பாய்க் கேட்க, அப்ரமேயர் கதையை மீண்டும் தொடர்ந்தார்.
" கோபம் வந்துவிட்டால் அவர் முற்றிலும் வேறொருவராக மாறி விடுவார். அந்த நிலையில் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார். அவரது கோபத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று. அதுவே அவருக்கு எதிராகவும் அமைந்தது. "
" ஓ... அதுதான் காரணமா. நானும் அவரைப் பிரதிபலிப்பதால், உங்களுக்கு அந்த சந்தேகம் இருந்தது. அதனால்தான் என்னுடன் இந்த யுத்தத்திற்கு வரும்போது இருக்கமாக இருந்தீர்கள்.. அப்படித்தானே??".
" முன்னர் இருந்தது. ஆனால் இப்போது மாறிவிட்டது இளவரசே. அனுபவங்கள் உங்களை இன்னும் சமநிலைப் படுத்தும்."
இவற்றைக் கேட்டு, கலகலவென சிரித்தான் இளவரசர். அதற்கான காரணம் தெரியாமல் விழித்த அப்ரமேயர் " இளவரசே!!" என்று அழைக்க, அவரைப் பார்த்து மீண்டும் சிரித்தார் இளவரசர்.
" உண்மையாகவே.. அவர் ஞானிதான்.. என்ன மனிதர் அவர்!!!!. எல்லாவற்றையும் தொலைநோக்குடன் பார்க்கிறார்."
" யாரைச் சொல்கிறீர்கள் இளவரசே."
சற்றே சந்தேகமாய் அப்ரமேயர் கேட்க, " வேறு யார்?.. பொறுமையின் சிகரமாய் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வந்தியத்தேவரேதான்..." என்றார் இளவரசர்.
" அவர் என்ன சொன்னார் இளவரசே??. " என்று அப்ரமேயரின் வார்த்தைக்கு புன்சிரிப்பை உதிர்த்த இளவரசர், அன்று நடந்த நிகழ்வுகளை சொல்லத் தொடங்கினார்.
- தொடரும்.