வேங்கை மகன்
பகுதி 16 பொறுமையின் சிகரம்
" சற்றும் நிதானமில்லாத இவன் எப்படி மாறினான் என்பதுதானே உங்கள் சந்தேகம்"
அப்ரமேயரின் விழிகளைப் பார்த்து தனக்கு உரித்தான புன்னகையுடன் வினவினார் இளவரசர். அதற்கு ஆம் என்பது போல் அப்ரமேயர் தலையசைக்க இராஜேந்திரர் பேச்சைத் தொடர்ந்தார்.
" நான் பொறுமையாக நடந்து கொள்கிறேனா?. என்னில் நிதானம் குடி கொண்டுள்ளதா என்பதை நான் அறியேன். அதே ஆக்ரோசமும் வேகமும் இன்னும் என்னுள் அப்படியேதான் உள்ளது. அதை சற்றுக் கட்டுக்குள் வைக்க முயற்சி செய்கிறேன். அதில் எவ்வளவு தூரம் வெற்றி கிடைத்துள்ளது என்பது, சோழ தேசத்தில் மிகப்பெரும் நிதானிகளில் ஒருவரான தாங்களே சொல்லும் போது, அதை உண்மையென்று அறிய முடிகிறது. இதன் பெருமை ஒருவரையே சாரும்"
இளவரசர் இவ்வாறு முடிக்க, அப்ரமேயரின் உள்ளத்தில் சிறு நெருப்பாய் புகைந்த ஆவல், இப்பொழுது பற்றி எரியத் தொடங்கியது.
" ஒருவரா??.. யார் அவர்? "
உள்ளக்கிடங்கை அடக்க முடியாமல் கேட்ட அப்ரமேயரைப் பார்த்த போது, இளவரசருக்கு சற்று பரிதாபமாகவே தோன்றியது.
" சொல்கிறேன். தளபதியாரே!!!. சோழ தேசத்தில் எவ்வளவு சிக்கலான விஷயத்தையும் பொறுமையுடன் சரியாகக் கையாளும் திறமை கொண்டவர்கள் யார்? யார்??"
இளவரசரின் கேள்விக்கு சற்று யோசித்த அப்ரமேயரின் உள்ளத்தில் சிலரின் முகங்கள் வந்து நின்றன. அவற்றை மனதிற்குள் அனுமானித்த அவர், இளவரசருக்கு பதிலளித்தார்.
" பலர் இருந்தாலும், எனக்கு அந்த இருவரே முதன்யானவர்கள் என்று தோன்றுகிறது. "
" யார் அந்த இருவர்?"
" ஒருவர் சேனாதிபதி அனிருத்தர். பொறுமையில் அவருக்கு நிகரான ஒருவரைப் பார்ப்பது கடினம். எவ்வளவு சிக்கலையும் ஆராய்ந்து தீர்வினைத் தருவதில் அவரை மிஞ்சிய ஆள் இல்லை என்றே சொல்லலாம்"
" சரியாகச் சொன்னீர்கள். அதனால்தானே அவர் சோழ தேசத்தின் முதன்மைத் தளபதியாக இருக்கிறார். சோழ தேசத்தில் மட்டுமல்ல, நம்மை சுற்றி உள்ள எல்லா நாட்டிலும் அனைத்தையும் தன் உள்ளங்கையில் தெரிந்து வைத்திருப்பவர். தூணிலும் துரும்பிலும் இருக்கின்ற கடவுளைப் போல, அவரது ஒற்றர் படை எல்லா இடத்திலும் இருக்கும். "
"ஆமாம். ஆபத்தான இடங்களுக்குக் கூட சென்று தகவல்களை அனுப்பி விடுவார்கள். எதிரியிடம் சிக்கினால், உயிரே போனாலும் ஒரு வார்த்தை கூட வெளியே வராது"
" அநிருத்தரின் பயிற்சிப் பட்டறையில் மெருகேற்றப்பட்டவர்கள் அல்லவா அவர்கள். வேறெப்படி இருப்பார்கள்."
" உங்கள் மாற்றத்துக்கும் முதன் மந்திரியாரே காரணமா??? .. " என்று சந்தேகத்துடன் இளவரசரிடம் கேட்டார் அப்ரமேயர்.
" இருக்கலாம். ஆனால் முழுவதும் காரணம் என்று சொல்லி விட முடியாது. "
கண்சிமிட்டியபடி வார்த்தைகளை உதிர்த்த இராஜேந்திரர், அப்ரமேயரின் அடுத்த வினாவிற்காகக் காத்திருந்தார். சற்று யோசித்த அப்ரமேயர், அவர் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அடுத்த வினாவைத் தொடுத்தார்.
" அப்படியென்றால் வேறு யார்??" என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட அப்ரமேயரைப் பார்த்து புன்னகைத்தார் இளவரசர், " ஹாஹாஹா.. இது என்ன சோதனை" என்று தலைமீது சோகமாக கைகளை வைத்துக்கொண்டார். அதைக்கண்ட மேலும் பதற்றமடைந்த அப்ரமேயர் " என்னாவாயிற்று இளவரசே!!" என்று பரிதவிப்புடன் அவருக்கு அருகில் வந்தார்.
" அதை எப்படி சொல்வது "
இளவரசர் வருத்தத்துடன் உதிர்த்த வார்த்தைகள் அப்ரமேயரின் உள்ளத்தில் பதற்றத்தை அதிகமாக்கியது. அத
" என்னவாயிற்று இளவரசே. உங்களின் வருத்தத்திற்கு காரணம் என்ன?"
"நான் ஆத்திரக்காரன். பொறுமை இல்லாதவன். நிதானம் இல்லாமல் ஏதாவது செய்து விடுவேனென்று, பெரும் நிதானியான உங்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால் இங்கு நீங்களே பொறுமை இல்லாமல் இருக்கிறீர்கள் "
இளவரசர் இவ்வாறு கூறிவிட்டு சிறு குழந்தை போல அப்ரமேயரை பார்த்து கண்களை சிமிட்டினார். இளவரசரின் பரிகாசத்தில் நெகிழ்ந்த அப்ரமேயர் சிறிதாய் புன்னகைத்தார்.
அதைக் கண்டு ரசித்த இளவரசர் " மீண்டும் சற்று சிந்தியுங்கள் தளபதியாரே " என்று திறவாதிருந்த அப்ரமேயரின் சிந்தனைக்கு மீண்டும் சாவி கொடுத்து இயக்க, மீண்டும் யோசனையில் மூழ்கினார்.
" ஒருவர் அநிருத்தர் என்றால், மற்றொருவர் யார்?? நீங்கள் நினைத்த அந்த இரண்டாவது பொறுமைசாலி யார் என்று கூறுங்கள்.? பார்க்கலாம்.!!"
அதுவரை குழப்பத்தில் இருந்த அப்ரமயேரின் விழிகள் பளிச்சென ஆனந்தத்தில் மின்னியது.
" அப்படியென்றால்... அப்படியென்றால்...
"
மகிழ்ச்சியுடன் உதிர்ந்த வார்த்தைகள் அப்ரமேயரின் முகத்திலும் வெளிப்பட " அப்படியென்றால்..." என்று இளவரசரும் அப்ரமேயரைப் பார்த்துக் கேட்டார்.
" உங்கள் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்குக் காரணம் "
" மாற்றத்திற்கு காரணம்??"
" அவர்தானா"
அப்ரமேயர் முடிக்க, "ஆமாம்" என்பது போல் தலையசைத்தார் இராஜேந்திரர். அதைக்கேட்ட அப்ரமேயரின் உள்ளம் பெரும் உவகையில் நிரம்பி வழிந்தது. அவரது முகத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி பொலிவுடன் பிரகாசிக்கத் தொடங்கியது.
- தொடரும்...