வேங்கை மகன்
பகுதி 15 : கண்ணில் பிரகாசித்த கரிகாலன் கனவு
" எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது" என்று உள்ளுக்குள் அலைகடலாய் ஆர்ப்பரித்த மனதின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் கூடாரத்தின் மேல்புறத்தை பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தார் அப்ரமேயர்.
அவரது யோசனைக்கு நடுவே கூடாரத்தின் திரைச்சீலைகள் விலகியதை கவனிக்கத் தவறியவரை கவனித்தபடி நின்றிருந்தார் இளவரசர் இராஜேந்திரர்.
" பலத்த யோசனையில் இருப்பது போல் தெரிகிறதே. நான் உள்ளே வரலாமா"
இளவரசர் புன்னகையுடன் கேட்டதும், தனது சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவரை வரவேற்றார்.
" வாருங்கள் இளவரசே. என்ன இந்த நேரத்தில்?. ஏதேனும் முக்கிய செய்தியா"
பெரும் நிதானி எனப் பெயரெடுத்த அபரமேயரின் வாயிலிருந்து படபடவென்று வார்த்தைகள் வெளிவந்தது. அதைக் கவனித்த இளவரசர் " பதற வேண்டாம்.. சாதாரணமாகவே வந்தேன்.. என்ன இது.. உங்களின் இயல்புக்கு மாறான பதற்றம்..."
என்று வினவ, பதற்றத்தை விடுத்து மெதுவாக நிதானத்திற்கு வந்தார்.
" இந்த நேரத்தில் தங்கள் வந்ததும், ஏதேனும் அவசர செய்தி உள்ளதோ என்று மனம் எண்ணிவிட்டது. அதனால்தான் சிறு பதற்றம் தொற்றிக் கொண்டது இளவரசே!. "
" உறக்கம் வரவில்லை. அதுதான் உங்களைப் பார்த்து பேசலாம் என்று வந்தேன் "
" அப்படியா.. எனக்கும் உறக்கம் வரவில்லை.."
அப்ரமேயர் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே " ஹாஹாஹா. பார்த்தேன் பார்த்தேன்.. ஆழ்ந்த சிந்தனையில் கூடாரத்தின் மேற்கூரையோடு தாங்கள் யுத்தம் செய்து கொண்டிருந்ததை.." என்று தனக்கே உரித்தான மந்தகாச புன்னகையுடன் இளவரசர் கேட்க " அப்படியெல்லாம் இல்லை இளவரசே.. " என்றார் அப்ரமேயர்.
" அப்படி என்ன யோசனை... போர்க்கள வியூகம் பற்றி இருந்தால் சொல்லுங்கள். நாளை உதவியாக இருக்குமல்லவா?? "
" என் சிந்தனை களவியூகம் பற்றி அல்ல இளவரசே... "
" உண்மையாகவா... அப்படியெனில் எதைப்பற்றி என்று நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.."
"இந்த சமீப காலங்களில் நடந்தவற்றை மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தான்."
" அப்படியா.. ஆனால் உங்கள் மனதில் பெருங்குழப்பம் குடிகொண்டிருப்பது போலல்லவா தெரிகிறது."
" ஆமாம். இளவரசே. நடந்த நிகழ்வுகளால் என் பிரமிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று எனக்குள் கேள்வி எழுந்து குடைந்து கொண்டிருக்கிறது "
" சோழ தேசத்தின் பெரும் நிதானியின் பொறுமையையே சோதித்து என்றால், அது உண்மையிலேயே பிரமிப்பு தான்... என்ன அது... சொல்லுங்கள்.. என்னால் இயன்றால் தீர்த்து வைக்கிறேன்"
" உங்கள் ஒருவரால் மட்டுமே இதனை தீர்க்க முடியும். இதற்கு வேறு யாராலும் விடையளிக்க முடியாது."
" இது என்ன விந்தை... என்னால் மட்டுமே முடியுமா.. நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. என்னால் முடியும் என்று உங்களுக்குத் தோன்றினால், அதைச் சொல்லுங்கள். நானும் முயன்று பார்க்கிறேன் "
"நிச்சயமாக சொல்கிறேன் இளவரசே.. பேச்சின் ஆர்வத்தில் மறந்து விட்டேன். முதலில் வாருங்கள். அமர்ந்து பேசலாம் " என்றபடி இராஜேந்திரை அழைத்து "அமருங்கள் இளவரசே" என்று அங்கிருந்த இருக்கையில் அமரவைத்த அப்ரமேயர் தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
அதிகாலையை நெருங்கிய அந்தப் பொழுதில் காவிரியைத் தழுவி வந்த இளங்காற்று கூடாரத்திற்குள் வந்து நலம் அறிந்து போனது. சில நாழிகை இருவரும் தென்றலின் குளுமையை உணர்ந்தபடி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
" உங்கள் தூக்கத்தை கெடுக்கும் அளவிற்கு அப்படி என்ன குழப்பம்?.. சொல்லுங்கள். அதைத் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது "
இளவரசர் இராஜேந்திரர் உள்ளத்தில் எழுந்த ஆவலில் அமைதியை உடைத்து உரையாடலை ஆரம்பித்தார்.
" சொல்கிறேன் இளவரசே..."
" சொல்லுங்கள்.. எதைப் பற்றி என்று தெரிந்து கொள்ளும் ஆவல், கல்லணையில் இருந்து புறப்படும் காவிரி வெள்ளமென எனக்குள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது "
"இந்த நாலைந்து தினங்களில் நடந்த நிகழ்வுகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?, இளவரசே."
" இதென்ன கேள்வி தளபதி அவர்களே!!!. என் வாழ்வில் முக்கியமான, நான் எதிர்பார்த்த ஒன்று நடந்தேறிய தருணங்களை எப்படி என்னால் மறக்க முடியும்?. சோழ தேசத்திற்காக போர்க்களம் சென்ற நம் சோழ தேச மாவீரர்களைப் போல, நானும் தேசத்திற்காக போர்க்களம் புக வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது கனவல்லவா!!!.
" அறிவேன் இளவரசே. உங்களுக்கு போர்க்களங்களின் மீது தீராத காதல் உண்டென்று. சோழ தேசத்தின் பல மாவீரர்களைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனாலும் இப்படியொரு காதலை நான் யாரிடமும் கண்டது இல்லை. உங்களுக்குள் அந்த காதல் எப்படி வந்தது.??"
அப்ரமேயர் இவ்வாறு சொன்னதும் சுருங்கி விழுந்த இராஜேந்திரரின் விழிகளில், உள்ளத்தில் சுடர்விட்டெரியும் அந்தக் காதல் சில நாழிகை பிரகாசித்தது. தனக்கே உரித்தான மந்தகாசப் புன்னகையை இதழ்களில் வெளிப்படுத்திய இளவரசர் பேசத்தொடங்கினார்.
" எல்லாம் உங்களை போன்ற மாவீரர்கள் பெற்ற வெற்றியின் கதைகளைக் கேட்டுத்தான் அப்ரமேயரே. இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டிய கரிகால் பெருவளத்தார் கதைகளும், அதைத் தொடர்ந்து சோழ சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமிட்ட விஜயாலய சோழர், ஆதித்தர் கதைகள் என எத்தனை பெருங்கதைகள். இளம் வயதிலேயே சேவூர் களத்தில் வெற்றி வாகை சூடிய பெரிய தந்தையார் ஆதித்த கரிகாலரின் வீரமெல்லாம் நினைக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. சிறுவயதில் இருந்தே இவையெல்லாம் கேட்டு வளர்ந்த பிறகு, போர்க்களங்களின் மீது எப்படி காதல் பிறக்காமல் இருக்க முடியும்???. சொல்லுங்கள் அப்ரமேயரே..சொல்லுங்கள்"
அந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் நினைத்து பெருமிதத்தோடு பேசிய இராஜேந்திரரின் வார்த்தைகள் அப்ரமேயருக்கு அவர் மீதான புரிதலை இன்னும் உயர்த்தி இருந்தது.
" நிச்சயமாக இளவரசே. அவர்களைப் போன்ற மகாபுருஷர்களின் வீரதீரச் செயல்களால்தான் சோழ தேசம் பரந்து விரிந்துள்ளது. ஆதித்த கரிகாலரின் ஆசைப்படி, இமயம் வரை புலிக்கொடி பறக்கும் நாளும் வெகுதூரமில்லை என்றே தோன்றுகிறது."
" ஆம். எனது ஆசையும் அதேதான். இமயம் வரை வென்று புலிக்கொடியை பறக்க விடவேண்டும். களமேறி கடல்தாண்டியும் சென்று வெற்றிக்கொடி நாட்டவேண்டும். அதை நோக்கியே எனது சிந்தனையும் இருக்கிறது"
" நல்ல சிந்தனை. அதற்கான ஆற்றல் உங்களிடம் நிறையவே இருக்கிறது. அதைப்பற்றி தான் நானும் சிந்தித்து கொண்டிருந்தேன்.. "
என்று பதிலளித்த அப்ரமேயரை வியப்புடன் பார்த்த இராஜேந்திரர் " இதைப் பற்றியா??. என்ன நினைத்தீர்கள்?. சற்று தெளிவாகக் கூறுங்கள் அப்ரமேயரே" என்று குழப்பத்துடன் கேட்டார்.
" சொல்கிறேன் இளவரசே." என்றபடி திரைச்சீலைகளுக்கிடையே தெரிந்த முழுநிலவைப் பார்த்து புன்னகைத்தபடி பேசத் தொடங்கினார்.
" உங்களை சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். உங்களின் வேகத்தைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். ஆதித்த கரிகாலருக்கு இணையான அந்த வேகத்தில், அவரை மிஞ்சிய கோபம் நிறைய இடங்களில் தலையெடுக்கும். ஆனால் உங்களுடைய அந்த கோபம்தான் உங்கள் வெற்றிகளுக்கு குறுக்கே நிற்குமோ என்ற எண்ணம் எனக்குள் அவ்வப்போது தோன்றும். "
" ஹாஹாஹா. ஆமாம்.. பெரிய தந்தையை நினைவு படுத்துவதாக தந்தையும் அடிக்கடி கூறுவார். அதிலென்ன குழப்பம் ??"
கண்களை சிமிட்டியபடி இரேஜேந்திரர் சிறுபிள்ளை போல அப்ரமேயரிடம் வினவ, புன்னகைத்தார் அப்ரமேயர்.
" உண்மையைச் சொல்வதென்றால், கட்டுக்குள் அடங்காத கோபத்தினால் உங்கள் மேலெனக்கு நம்பிக்கை குறைவாக இருந்தது. ஆனால் நெருங்கிப் பார்த்த இந்த சிலநாட்களில், அதையெல்லாம் உடைத்து எறிந்து விட்டீர்கள்"
" அப்படியா.. "
"ஆமாம். இளவரசே. சோழ தேசத்தில் இருந்து புறப்படும் போது, பிறைநிலவாய் இருந்த நீங்கள், இப்போது என் மனதில் முழுநிலவாக மாறி உள்ளீர்கள்."
" இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது"
" அதே கேள்விதான்.. எனக்கும். குழப்பங்களுக்கும் அதுவே காரணம். உங்களிடம் ஏற்பட்ட அந்த மாறுதல்களே எனது நம்பிக்கைக்குக் காரணம்."
" சற்று தெளிவாகக் கூறுங்கள் அப்ரமேயரே..."
" வேகமும் கோபமும் நிறைந்த வழக்கமான இளவரசரிடம், இவ்வளவு விவேகமும் நிதானமும் எப்படி வந்தது என்ற கேள்விதான்"
"ஹாஹாஹா... நிச்சயம் நீங்கள் தெரிந்துகொண்டு தான் ஆகவேண்டும். மிதமிஞ்சிய கோபங்கொண்டு என்னில், இவையெல்லாம் ஒரிரு நாளில் தானாக எப்படி வந்தது என்பதுதானே உங்கள் எண்ணம் "
இளவரசர் இப்படிக்கேட்டதும் "ஆமாம்" என்பது போல் தலையசைத்ததார் அப்ரமேயர். அதைக் கண்டு புன்சிரிப்பை உதிர்த்த இராஜேந்திரர் " இதற்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம்"என்றபடி தனது நிதானத்திற்கு பின்னால் இருக்கும் காரணத்தை அப்ரமேயருக்கு விளக்கத் தொடங்கினார்.
_தொடரும்