வேங்கை மகன் பகுதி 14:ஆர்ப்பரித்த மனக்கடல்
மன்னரையும் வந்தியத்தேவரையும் நோக்கி தனது விழிப் பார்வையைச் செலுத்திய அநிருத்தர் அவ்வோலையை வாசித்தார்.
"இப்பணிக்கு இளவலே பொருத்தம். ஈசன் அருள்புரிவான். "
அநிருத்தர் வாசித்து முடித்தாலும், அதனால் உண்டான பிரமிப்பில் இருந்து மீள வெகுநேரம் பிடித்தது. அந்த பிரமிப்பு சில நாழிகைகள் மொத்த அவையையும் வாய்மொழியின்றி கட்டிப்போட்டது
" ஐயனே!!!.. ஐயனே!!!... உம் கருணையே கருணை!!!.. இந்த அடியேனின் வேண்டுதலுக்கு பதில் அனுப்பி, என் குழப்பங்களை தீர்த்து வைத்து விட்டீரே.. உம்மைக் கண்டது என் பாக்கியம்.. ஐயனே!!. நீர் எங்கிருக்கிறீர் ஐயனே!!"
இரு விழிநீர் பெருக, இதயத்தில் தன் குருநாதர் கருவூர் சித்தரை நினைத்து வேண்டினார் இராஜராஜர். கண்களை மூடிய மன்னரின் மனக்கண்ணில் " எப்போதும் உன்னுடனே இருப்பேன்" என்றபடி கருவூர் சித்தர் ஆசி வழங்குவது போல் பிம்பம் தோன்றியது. குருவின் ஆசியினையும் தரிசனத்தையும் பெற்ற மன்னர் அமைதியாய் இருக்கையில் அமர்ந்தார்.
" ஆஹா.. அற்புதம்... அவர் மஹான் அல்லவா"
" அவருக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நடக்காது"
" கருவூர் சித்தரே சொன்ன பிறகு வேறு என்ன இருக்கிறது."
இப்படியாக சித்தரின் பெருமைகளைப் பலரும் பேசிக்கொண்டிருந்தால், அந்த அவையில் சிறு சலசலப்பு தோன்றியது. அதை உடைக்கும் விதமாக அநிருத்தர் பேசத் தொடங்கினார்.
" கருவூராரே சொன்ன பிறகு, இதில் தயங்குதற்கு வேறொன்றுமில்லை. அதனால் நாம் அடுத்து செய்ய வேண்டியது பற்றி சிந்திக்கலாமே"
"ஆமாம். அநிருத்தரே. நீங்கள் யோசிப்பது சரிதான். ஆனால் மன்னரின் எண்ணத்தையும் அறிய வேண்டி உள்ளதே!!"
என்றபடி வந்தியத்தேவர் மன்னரைப் பார்க்க, கருவூர் சித்தரின் தரிசனத்தை மனதில் யோசித்தபடி அமர்ந்திருந்த இராஜராஜர் இயல்பு நிலைக்கு வந்தார்.
" குருவே ஆணையிட்ட பிறகு, எனக்கு என்ன எதிர் பேச்சு இருக்கிறது. என்னில் இருந்த குழப்பங்கள் எல்லாவற்றையும் தீர்த்து விட்டார். இராஜேந்திரனே களம் செல்லட்டும். சோழ தேசத்தின் மீது படிந்திருக்கும் இந்த கறையை துடைத்தெறிந்து வெற்றித் திருமகளுடன் திரும்பி வரட்டும்"
மன்னர் பெருமிதத்துடன் இளவரசரைப் பார்க்க, எழுந்து நின்று வணங்கினார்.
"நிச்சயமாக தந்தையே. சோழ தேசத்தின் ஆசி என்னுடன் இருக்கிறது. "
இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பரமன் மழபாடியார் "மன்னர் அவர்களே! இளவரசரை தனித்து அனுப்புவது அவ்வளவு சரியென்று எனக்கு தோன்றவில்லை " என்று சொல்லி முடிப்பதற்குள் கோபத்தில் வெகுண்டெழுந்தார் இளவரசர்.
" என் மீதும், என் வீரத்தின் மீதும் தளபதியாருக்கு நம்பிக்கை இல்லையோ"
சினத்துடன் எழுந்த இளவரசரின் கரங்களைப் பற்றிய வந்தியத்தேவரின் கைகள் அவரை அமைதியாய் இருக்கும்படி உள்ளுணர்வுக்கு செய்தி அனுப்பியது. அதைப் புரிந்து கொண்ட இராஜேந்திரர் மௌனமாய் அமர்ந்தார்.
" சற்று பொறு இராஜேந்திரா. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது ஆன்றோர் வாக்கு. மழபாடியார் என்ன கூற வருகிறார் என்பதை முழுமையாகக் கேள். மழபாடியாரே! நீங்கள் சொல்லுங்கள் "
மன்னரின் வார்த்தைகளுக்குப் பிறகு மறுமொழி பேசினார் மழபாடியார்
"மன்னர் அவர்களே!! இளவரசரின் வீரத்தின் மீதும், திறமையின் மீதும் முழு நம்பிக்கை எனக்கும் உள்ளது. அதில் எவ்வித குறைபாடும் எனக்கு எப்போதும் தோன்றியதில்லை."
" பிறகு, "
" மன்னர் அவர்களே! இளவரசருக்கு இதுவே முதல் களம். நீங்கள் அறியாத போர்க்களம் இல்லை. போர்க்களத்தின் சூழலும், விளைவுகளும் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா. ஒருவேளை இக்கட்டான சூழ்நிலை தோன்றினால், இளவரசருக்கு உறுதுணையாக இருக்க சரியான ஒரு நபரை அனுப்ப வேண்டுமென்பதே எனது எண்ணம்."
" யாரை அனுப்பலாம்.. உங்களின் மனதில் ஏதேனும் எண்ணம் இருந்தால் சொல்லுங்கள்"
" யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. இளவரசர் மிக வேகமானவர். அவரது கோபமும் நாம் அறிந்த ஒன்றுதான். அதனால் அனுபவமும் விவேகமும் கொண்ட ஒருவரை அனுப்பினால், அவரைப் புரிந்து கொண்டு, அவரது வேகத்திற்கு ஈடுகொடுத்து, வழிநடத்தும் ஒருவரைத் துணையாக அனுப்புவது நல்ல முடிவாக இருக்கும்."
பரமன் மழபாடியாரின் பதில், ஆவேசத்திலிருந்த இளவரசரின் உள்ளத்தில் சிறு மகிழ்வை ஏற்படுத்தி இருந்தது. அந்த அன்பு பற்றியிருந்த கரங்கள் வழியாக வந்தியத்தேவரின் உள்ளத்தை சென்றடைந்தது. தனது புன்னகையால் அதனை ஏற்றுக்கொண்டார் வந்தியத்தேவர்.
மன்னரும் அநிருத்தரும் அதற்கு என்ன பதிலளிப்பார்கள் என்ற ஆவல் அவரது முகத்தில் தெரிந்தது.
" சேனாதிபதி சொல்வது நல்ல ஆலோசனையாக மனதிற்குத் தோன்றுகிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று அநிருத்தரைப் பார்த்து கேட்டார் இராஜராஜர்.
" ஆம் மன்னரே. இதை பற்றி சிந்தனை செய்துதான், அப்ரமேயரை அழைத்து செய்து அனுப்பினேன்" என்று அநிருத்தர் பதிலளிக்க, இராஜராஜர் வியந்து அவரது முகத்தைப் பார்த்தார்.
" அருமை..அநிருத்தரே. அருமை.. உங்கள் அனுபவத்தையும் அரசியல் ஞானத்தையும் மிஞ்சிட இந்த தேசத்தில் யாருமில்லை. நாங்கள் சங்கடத்தைப் பற்றி யோசித்தால், நீங்கள் அதற்கான தீர்வோடு அமர்ந்து இருக்கிறீர்கள்.. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.. " என்று இராஜராஜர் பெருமிதத்தோடு வியந்து பாராட்டினார்.
"அநிருத்தரின் சிந்தனையும் செயலும் எப்பொழுதும் சோழ தேசத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும். அதனால் இதில் வியப்படைய புதிதாய் ஒன்றுமில்லை" என்று மன்னரின் வியப்பைக் கண்டு வந்தியத்தேவர் தெரிவிக்க, " ஆமாம்.. ஆமாம்.." என்று மற்றவர்களும் ஆமோதித்தனர்.
" அப்ரமேயர் எந்த ஒரு செயலையும் நிதானமாக யோசிப்பவர். அதே நேரத்தில் இளவரசரின் வேகத்தையும் புரிந்து ஈடுகொடுக்கும் ஆற்றல் மிக்கவர். ஆதலால் இளவரசருடன் அப்ரமேயரை அனுப்புவது நல்ல முடிவாகத் தோன்றுகிறது " என்ற தனது ஆலோசனையைத் தெரிவித்தார்.
" அப்ரமேயரே., உங்கள் விருப்பம் என்னவென்று சொல்லுங்கள் " என்ற மழபாடியார் வினா எழுப்பினார்.
" சோழ தேசத்திற்காக பிறந்த உயிர் இது. மன்னரின் ஆணை எதுவென்றாலும், ஏற்று நடக்க காத்திருக்கிறேன். இளவரசருக்கு இணைந்து செல்வது எனக்கு கிடைத்த பாக்கியமாகும்."
" நல்லது. இராஜேந்திரா நீ தயாராக இருக்கிறாயா??"
" இந்த ஒரு வாய்ப்பிற்காகத்தான் காத்திருந்தேன் தந்தையே.. நீங்கள் ஆணையிடுங்கள். எதிரிகளின் சிரங்களை உங்கள் பாதங்களில் சேர்க்கிறேன்"
இளவரசர் மற்றும் அப்ரமேயர் இருவரின் கண்களிலும் இருந்த உறுதி மன்னருக்கு நம்பிக்கையைத் தந்தது.
" ஹ்ஹா.. நல்லது.. நல்லது. அநிருத்தரே களவியூகம் பற்றி ஏதேனும் ஆலோசனை உள்ளதா??..
" தூதுவனைச் சிறைப்பிடித்தது பின் விளைவுகளை ஆராய்ந்து எடுத்த முடிவாகவே தோன்றுகிறது. அதனால் நம் நகர்வினைக் கண்காணிக்கவும், எதிர்க்கவும் மிகப்பெருந்திட்டத்துடனே, எதிரிகள் காத்திருப்பார்கள்"
" ஆம்.. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது."
அநிருத்தரின் யோசனையை மழபாடியாரும் வழிமொழிய, சிந்தனையுடன் அநிருத்தரைப் பார்த்தார் இராஜராஜர்.
" அதனால், அப்பெரும் படையைக் களத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்"
என்ற அநிருத்தர், போர்க்கள வியூகங்கள் பற்றி விரிவாக விவரித்தார்.
தனது செயல்திட்டங்களை முழுமையாக விளக்கிய அநிருத்தர்" இதோடு, களத்தில் எதிராளியின் அணுகுமுறைக்கு ஏற்ப நமது திட்டங்களில் மாற்றங்களைச் செய்து, அவர்களை வீழ்த்த வேண்டும் " என்று ஆலோசனையைத் தொடங்கினார்.
அநிருத்தரின் ஆலோசனைகளில் திருப்தியடைந்த மன்னர் இராஜராஜர் " போருக்கான ஆயத்தாங்களை விரைந்து செய்யுங்கள். " என்று ஆணையிட்டார்.
மன்னரின் ஆணைக்குப் பிறகு அனைவரும் வெளியேறினர். இளவரசரின் தோள்களில் கைகளை போட்டு, அவரை அழைத்துச் சென்றார் வந்தியத்தேவர். மன்னரின் ஆணைக்கு இணங்கினாலும், அரைமனதாய் ஆலோசனைக் கூடத்திலிருந்து வெளிவந்த அப்ரமேயரின் கண்கள் வானத்திலிந்த அந்த பிறைநிலைவைக் கண்டது. அவரது உள்ளத்தில் இளவரசரைப் பற்றிய சந்தேகங்கள் அந்த பிறைநிலைவைப் போல மனதிலும் குடிகொண்டிருந்தது. அதே வானில் இன்று முழுநிலவொன்று அவரை நோக்கிப் புன்னகைத்து ஒளி வீசியது.
ஆனால் அன்று பிறைநிலைவாய் தெரிந்த இளவரசர் இராஜேந்திரர் இன்று முழுநிலவாய் அப்ரமேயரின் மனதிற்குள் ஒளிர்ந்தார். ஆனால் இளவரசர் இராஜேந்திரர் மனதில் இவ்வளவு பெரிய மாற்றம் எப்படி ஏற்பட்டது என்ற வினா அலைகடலாய் மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அதற்கான பதில் அவரைத் தேடி வந்து கூடாரத்தின் திரையை நீக்கியது.
_ தொடரும்.