வேங்கை மகன்
பகுதி 13 : குழப்பத்தைத் தீர்த்த ஓலை
மலைக் காடுகளைப் பற்றி அறிந்த அந்த நம்பிக்கைக்குரிய நபர் யாராக இருக்குமென்று அவரவர் அளவுக்கு ஆழ்ந்து கணிக்க ஆரம்பித்தாலும், யாருக்கும் பதிலொன்றும் கிடைக்கவில்லை. அனுமானங்களைத் தூரம் வைத்து விட்டு, வந்தியரின் முகம் நோக்கி பார்வையைத் திருப்பினர்.
" யார் அந்த நபர்??.. ஒவ்வொரு கணமும் அதை அறந்திடும் ஆவல் உள்ளத்தில் காவிரி வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கிறது. எங்கள் மனதில் விடையொன்றும் கிடைக்கவில்லை. நீங்களே கூறுங்கள் "
இவ்வாறு கேட்ட பரமன் மழபாடியார், கண்களில் ஆர்வம் ஒளிர வந்தியரை நோக்கினார்.
"சொல்கிறேன்.. சொல்கிறேன்... புதிரை விடுவிக்க பதிலை உரைத்துத் தானே ஆகவேண்டும். அதைத் தவிர இந்த சிக்கலைத் தீர்க்க வேறு மார்க்கமில்லை."
" கூறுங்கள் வந்தியரே... நீங்கள் சொல்லும் பதிலால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது."
அநிருத்தரின் பதிலை மன்னர் இராஜராஜரும் ஆமோதித்து தலையாட்டினார். இளவரசர் இராஜேந்திரர் அமைதியாய் இருந்தாலும் அவரது உள்ளத்திலும் அதை அறியும் ஆவல் நிறைந்திருந்தது. இதை எல்லாம் உணர்ந்திருந்த வந்தியத்தேவர் அந்தப் பெரும் சவாலை சமாளிக்கக் கூடிய வீரனின் பெயரை அவையில் அறிவித்தார்.
" குட நாட்டு மன்னன் மீனிசா. அந்த மலையரசனின் உதவியைக் கோரினால் என்ன?? "
வந்தியத்தேவர் அந்தப் பெயரை உச்சரித்ததும் அநிருத்தர் மற்றும் இராராஜரின் முகங்களில் ஒரு நிம்மதி பளிச்சிட்டது.
" மிகச்சரியான யோசனை வந்தியத்தேவரே.. மிகச்சரியான யோசனை. அந்த மலை தேசத்தை மீனிசாவை விட அதிகம் அறிந்தவர் எவரும் இருக்க முடியாது." என்ற இராஜராஜரின் கண்களில், சற்று முன்னர் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது.
" எனக்கும் அதுவே சரியென்று தோன்றுகிறது. மீனிசா அந்தக் காடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதோடு, மிகச்சிறந்த வீரரும் கூட. அவரும் அவரது மலைப்படையும்
கடும் வனங்களைக் கடப்பதற்கு மட்டுமல்ல,போர்க்களத்திலும் நமக்கு பேருதவியாய் இருப்பார்கள்." என்று அநிருத்தர் மறுமொழி கூற, " அப்படியெனில், கலியூர் செல்லும் நம் படையுடன் வந்து இணைந்து கொள்ள வேண்டுமென்று உடனடியாக மீனிசாவிற்கு செய்தி அனுப்புங்கள்."
" செய்தி அனுப்புவதற்கு முன், நம்முடைய திட்டங்களைப் பற்றி, விவாதித்து முடிவெடுத்தால் நலம் என்று தோன்றுகிறது "
அநிருத்தர் பதிலை ஆமோதிப்பது போல பரமன் மழபாடியார் தலையசைக்க, மன்னரும் மற்றவர்களும் அநிருத்தரின் மறுமொழிக்காக காத்திருந்தனர்.
" களவியூகத்தை விட, இப்பொழுது முக்கியம் யார் நமது படைகளை வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதே"
அநிருத்தரின் இந்த பதில் அங்கிருந்தவர்களுக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது.
" ஏன்? அதிலென்ன சிக்கல்."
அநிருத்தர் உரைத்த வார்த்தைகளின் சூட்சுமத்தை உணராத இளவரசர் சந்தேகத்துடன் அநிருத்தரை நேக்கினார்.
"இந்த சீதோஷ்ண நிலையில் அக்காடுகளைக் கடந்து எதிரியை அடைவது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. இளவரசே. அதனால் நமது படையினைத் தேர்வு செய்யும் போது, ஒவ்வொருவரின் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்."
" சரியான யோசனை. அநிருத்தரே"
பரமன் மழபாடியார் அநிருத்திரின் யோசனையை ஏற்றுக்கொண்டு ஆமோதித்தார். மற்றவர்களுக்கும் அதுவே சரியென்று தோன்ற அனைவரும் அதனை ஒப்புக்கொண்டனர்.
"மன்னரின் உடல்நிலை இப்போது இந்தப் பயணத்திற்கு ஏற்றதாக இல்லை. வந்தியத்தேவரும் வடைதிசைப் பணிகளுக்காக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது... "
சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மன்னரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அநிருத்தர் பேச, மன்னரின் மனம் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தது.
" ஐயனே!!. என் ஆசானே.. குருவே, என்ன இது சோதனை. உங்கள் துணையின்றி இதை நான் எப்படிக் கடப்பேன். என் மீது விழுந்துள்ள இழுக்கை எவ்வாறு துடைத்தெறிவேன்."
குழப்பத்தில் இருந்து விடைபெற, மன்னர் தனது குருவான கருவூர்த்தேவரை மனதிற்குள் உளமாற வேண்டினார். கண்களை மூடிய மன்னருக்கு சிரித்த முகத்துடன் ஆசிகளை வழங்கினார் கருவூர்த்தேவர். அதைப் பெற்றுக்கொண்ட திருப்தியில் கண்களைத் திறந்து அவையை நோக்கினார். அமைதியுடன் ஒருவரையொருவர் பதிலின்றி பார்த்துக் கொண்டனர்.
" இப்போது யாரைக் களத்திற்கு அனுப்புவதாக உத்தேசம்"
மன்னரிடம் இருந்து வந்த வார்த்தைகள் அந்த அவையின் அமைதியை உடைத்தது
" அந்த சூழ்நிலையை தாங்குவற்கு உறுதியான உடல்நலமும், மனோதிடமும் அவசியம். "
" ஆம். அநிருத்தரே.. இப்போருக்கு, இளந்துடிப்பும் வேகமும் உள்ளவர்களே சரியாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. அதனால்..."
வந்தியத்தேவர் இவ்வாறு சொல்லிக்கொண்டே இளவரசரை நோக்கினார். அவர் வார்த்தைகளை முடிக்கும் முன்பே "ஆணையிடுங்கள். தந்தையே நான் சென்று, எதிரியை வென்று, தூதுவனை மீட்டு வருகிறேன்" என்று இளவரசர் இளந்துடிப்புடன் பதிலளித்தார்.
இளவரசரின் இவ்வார்த்தகளைக் கேட்ட பரமன் மழபாடியாரும், அப்ரமேயரும் அரைமனதாய் அநிருத்தரைப் பார்க்க, அநிருத்தரோ மன்னரின் பதில் என்னவென்று காத்திருப்பது போல அவரைப் பார்த்தார்.
நீண்ட நாட்களாக போர்க்களம் செல்லும் வாய்ப்பிற்காக இளவரசர் காத்திருப்பதை உணர்ந்திருந்த வந்தியத்தேவர், இதுவே அவரது திறமையை நிரூபிக்கும் சரியான களமாய் இருக்கும் என்று நம்பினார். அருகில் இருந்த இளவரசரின் கரங்களை நம்பிக்கையுடன் பற்றிய வந்தியத்தேவர், அவருக்கு உறுதியை அளித்தார். அந்த ஸ்பரிசம் இளவரசருக்கு பெரும் ஆற்றலை உள்ளத்தில் வழங்கியது.
மன்னருக்கு இளவரசரின் மேல் முழுநம்பிக்கை இருந்தாலும் மனதிற்குள் சிறு தயக்கம் இருந்ததால் யோசனையில் ஆழ்ந்தார்.
" உங்கள் யோசனை என்ன அநிருத்தரே " என்று சிறுயோசனைக்குப் பிறகு அநிருத்தரைப் பார்த்துக் கேட்டார் இராஜராஜர்
" நம்முடைய மற்ற தளபதிகள் எல்லாம் பணிநிமித்தமாக தொலைதூரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வரும் வரை காத்திருக்க முடியாது. அதனால் இளவரசரின் ஆலோசனையை முற்றிலுமாக புறந்தள்ளிவிட முடியாது, அரசே..."
" ஆம்.. இளவரசரின் வீரத்தின் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால்.."
" ஆனால்.. என்ன மழபாடியாரே.... சொல்லுங்கள்.."
இவ்வாறு விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், வீரன் ஒருவன் அவ்வறைக்குள் பிரவேசித்து வணங்கி நின்றான். அவனது வருகையால், விவாதத்தை விடுத்து அனைவரின் கவனமும் அவனை நோக்கித் திரும்பியது.
" மாமன்னர் அவர்களுக்கு என் வணக்கங்கள். முக்கியச் செய்தி ஒன்றை சுமந்து வந்துள்ளேன்."
முக்கிய செய்தி என்று வீரன் உரைத்ததும், அவையோருக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.
"யாரிடமிருந்து செய்தி.."
அமைதியுடன் கேட்ட அநிருத்தருக்கு " கருவூர்த் தேவர் மன்னருக்கு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்." என்றான் அந்த வீரன்.
வீரனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னரின் மனம் பிரமிப்பில் நிரம்பி, கண்ணீர்த்துளிகளாய் எட்டிப்பார்த்தது.
" ஐயனே!!!. ஐயனே !!!"
மனதில் குருவை வேண்டி நின்றார் மன்னர். அதுவரை உள்ளத்தில் இருந்த வலிகள் நொடியில் விலகியது போன்ற உணர்வு அவருக்குத் தோன்றியது.
" என்ன செய்தி " என்ற அநிருத்தரிடம், "இதில் முக்கிய செய்தி உள்ளது. இதற்காக மன்னர் காத்திருக்கிறார். விரைந்து சென்று மன்னரிடம் கொடு. இது ஐயனின் உத்தரவு " என்று வீரன் தான் கொண்டு வந்த ஓலையை அநிருத்தரிடம் வழங்கினான்.
ஓலையை வீரனிடம் இருந்து வாங்கியவர், அதை தன் இரு கண்களிலும் ஒத்திக் கொண்டார். பின்னர் அதைச் சுற்றியிருந்து நூலினை மெதுவாக அவிழ்த்து செய்தியை மனதிற்குள் வாசித்தார். அதை வாசித்த அநிருத்தர் பிரமிப்பில் உறைந்தார். அவரது முகம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த ஓர் உணர்வை வெளிப்படுத்தியது.
மற்றவர்களைப் போல, அந்த செய்தியை அறியும் ஆவலில் இருந்த மன்னருக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை.
" அநிருத்தரே.. குருநாதர் அனுப்பிய செய்தி என்ன??"
மன்னரின் கணீர் குரல், முதன் மந்திரி அநிருத்தரை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டு வந்தது.
" நல்ல செய்திதான் வந்திருக்கிறது. நம்முடைய குழப்பங்களுக்கான தீர்வொன்றை அனுப்பி உள்ளார். "
" அப்படியா??. என்ன தீர்வு... விரைந்து சொல்லுங்கள்.. "
அச்செய்தியை அறிந்து கொள்ளும் பெரும் ஆர்வத்தில் பரமன் மழபாடியார் அநிருத்தரிடம் வேண்டாத குறையாய்க் கேட்க, அவையினரின் முகங்களிலும் அச்செய்தி என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாய்க் காத்திருந்தது.
- தொடரும்