வேங்கை மகன்
பகுதி 12 : யார் அந்த ஒருவன்???...
நான்கு புறமும் இருளுக்குள் மூழ்கியிருந்தவனின் கண்களுக்கு திடீரெனப் புலப்பட்ட சிறு வெளிச்சமாய், வந்தியத்தேவரின் வார்த்தைகள் பெரும் நம்பிக்கையை விதைத்திருந்தது. குழப்பத்தில் தவித்த அவையோரின் மனதிலும், முகத்திலும் அவ்வார்த்தை துளிர்விட்ட நம்பிக்கையுடன் அடுத்த கட்ட நகர்விற்க்கு ஆயத்தமானார்கள்.
" என்ன தீர்வு...இதைப் பற்றி உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது."
" மன்னர் அவர்களே!!!. இதனை ஒரே பிரச்சனையாகப் பார்க்காமல், இச்சூழலை படிப்படியாக அணுகவேண்டுமென எனக்குத் தோன்றுகிறது."
வந்தியத்தேவரின் பதில் அநிருத்தருக்கு திருப்தியை உண்டாக்கியது. அதனை ஏற்றுக்கொள்வது போல் தலையாட்டினார். ஆனால் மற்றவர்களுக்கு அது புதிராகவே தோன்றியது.
" புரியவில்லை. வல்லவரையரே... சற்று தெளிவாக விளக்குங்கள்."
அவையோரின் சார்பாக பரமன் மழபாடியார் முன்மொழிந்தார். வழக்கம்போல் வந்தியத்தேவர் அவையில் பாராட்டுப் பெறுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இருப்பினும் எப்பொழுதும் போல், அதனை வெளிக்காட்டாமல் பேசினார். அந்தப் புதிருக்கான விளக்கத்தை வந்தியத்தேவர் அவர்களுக்கு விளக்கத் தொடங்கினார்.
" மலை போன்ற ஒரு பெரும் பாறை இருக்கிறது. அதை நமக்குத் தேவையான அளவில் உடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்"
வந்தியத்தேவர் ஏதோ மிகப்பெரிய திட்டத்தை விவரிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, தொடர்பில்லாத இப்படியொரு வினாவை அவர்கள் முன் வைத்தார். சிலருக்கு வேடிக்கையாகவும், சிலருக்கு குழப்பாகமாகவும் இருந்ததாலும், சூழ்நிலையைக் கருதியும், வந்தியத்தேவரின் செல்வாக்கு மற்றும் மதிநுட்பம் தெரிந்ததாலும் அமைதியாய் இருந்தனர்.
" இது என்ன புரியாத புதிரா???... முதலில் பாறையில் நமக்குத் தேவையான அளவில், உளியால் சிறு சிறு குழிகளை உண்டாக்க வேண்டும். அதில் மரச் சக்கைகளை இறுக்கி நீருற்ற வேண்டும். மரசக்கைகள் விரிய விரிய பாறை, நாம் குறித்த அளவில் பிளவுபடும். பின்னர் எளிதாக அதனை உடைத்து விடலாம்... சரிதானே வல்லவரையரே???"
இதுதான் சமயம் என்று காத்திருந்த பரமன் மழபாடியார் வார்த்தைகளால் அவரை பரிகாசம் செய்ய முயன்றார். அவர் வார்த்தையில் பரிகாசம் வெளிப்பட்டாலும், அமைதியாய் தனது பதிலைத் தொடர்ந்தார் வந்தியத்தேவர்
" மிகச்சரியாகச் சொன்னீர்கள் மழபாடியாரே. ஆனால் எனக்கு சிறு சந்தேகம் உள்ளது. அதனையும் தீர்த்து வைப்பீர்களா??"
இந்தக் கேள்வியால் உள்ளுக்குள் உண்டான பதற்றத்தை மறைத்து, வந்தியத்தேவரின் வார்த்தை வலையில் இருந்து தப்பிக்கும் வகையில் பதிலளித்தார் மழபாடியார்.
" வந்தியருக்கே சந்தேகமா.. கூறுங்கள்... எனக்குத் தெரியாவிட்டாலும், மற்றவர்கள் விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன்"
" நல்லது. நல்லது... எனது சந்தேகம் வேறொன்றுமில்லை. பாறையை உடைக்க குழி தோண்டி, சக்கை இறுக்கி, நீருற்றி காத்திருந்து உடைக்க வேண்டும். ஒரே அடியில் உடைக்க முடியாதா??"
" நீங்கள் அறியாத ஒன்றா வந்தியரே. எடுத்தவுடன் ஒரே அடியில் அதை உடைக்க நாம் என்ன மகாபாரத பீமனா, அனுமனா??. அப்படி செய்தால் நாம் நினைத்தபடி வடிவம் கிடைக்குமா என்ன??"
" இதைத்தான் நானும் சொல்கிறேன்.
பாறையை ஒரே மூச்சில் உடைத்துவிட முடியாது. அப்படி முயன்றால் நமக்கு வெற்றியும் கிடைக்காது. அதோடு, அச்செயல் நம்மை விரைவில் மலைப்படையச் செய்வதோடு, தோல்வியிலும் தள்ளிவிடும். அதனைப் படிப்படியாகச் செய்தால்தான், நாம் நினைக்கின்ற வடிவத்தில் முடிவினைப் பெற இயலும். "
" இதிலிருந்து தாங்கள் கூற வருவது,"
" நான் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை அப்ரமேயரே. நமது எண்ணமெல்லாம் தூதுவனை மீட்க வேண்டும் என்பதில் மட்டுமே இருக்கிறது. அந்த வேகத்தில், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க மறந்து விட்டோம்."
" நீங்கள் சொல்வது சரிதான் வந்தியரே.. ஆனால் இங்கு எப்படி அதை செயலாக்குவது?"
இப்பொழுது உள்ளிருந்த பொறாமை மறைந்து, பரமன் மழபாடியாருக்கு இலக்கை நோக்கி சிந்தனை மாறியது. அதனால் புரிந்தும் புரியாமலும் இருந்த தன் மனநிலையை வந்தியத்தேவரிடம் வினாவாய்த் தொடுத்தார்.
" சொல்கிறேன். மழபாடியாரே.. சொல்கிறேன். இப்பெரும் பணியை ஒரே செயலாய் நினைத்து யோசித்தால் மலைப்பாகத்தான் இருக்கும். தீர்வும் நமக்குத் தோன்றாது. அதனால்.."
"அதனால்... என்ன.."
ஆர்வத்தின் மிகுதியால் வெளிப்பட்ட அப்ரமேயரின் வார்த்தைகளைக் கேட்ட வந்தியர், புன்னகையுடன் தனது ஆலோசனையைத் தொடர்ந்தார்.
"முதலில் இதை ஒரே செயலாகக் கருதாமல், பாறையை உடைப்பது போன்று மூன்று நான்கு நிலைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் நமக்கு முதல் தடையாக இருப்பது எது?? "
" நிச்சயமாக.. அந்த வனங்கள்தான்.. அதைக் கடந்தால் தானே இலக்கினை அடைய முடியும்..."
" சரியாகச் சொன்னீர்கள்... அப்ரமேயரே..
அதனால் முதலில் நாம் அந்த வனங்களை எப்படிக் கடப்பது என்று யோசிக்க வேண்டும். பிறகு.."
"ம்ம்ம். அதற்கு என்ன செய்ய வேண்டும்"
" அரசே... அந்த வனத்தைக் கடக்க வேண்டுமெனில், அதற்குத் தகுதியான வீரர்களைக் கண்டறிய வேண்டும். பெரும் படை இல்லாவிட்டாலும், திறன் வாய்ந்த அந்த சூழலுக்குத் தாங்குகின்ற வீரர்களை தேர்வு செய்யவேண்டும்.. "
" நல்ல ஆலோசனை. மேலே தொடருங்கள் வந்தியரே!!"
" நன்றி அநிருத்தரே... அவ்வீரர்களை வழிநடத்தவும், அவர்களின் மனநிலையில் யோசிக்கவும் தகுந்த தலைமையை நியமித்து, அவர்களுக்கேற்பத் திட்டங்களை வகுத்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும். இப்பொழுதே போர் வியூகங்களைப் பற்றிப் பேசுவதால் பலன் ஏதும் கிடைக்காது. "
வந்தியத்தேவர் தனது உள்ளத்தில் தோன்றியவற்றை எடுத்துரைக்க, மற்றவர்களுக்கு அது ஆச்சர்யமாகத் தோன்றியது. தாக்குதலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, வந்தியத்தேவரின் ஆலோசனை அதற்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்தி எச்சரித்தது.
அவர்களின் மனதிற்குள் " பிரச்சனைகளை நாமெல்லாம் ஒரு வடிவில் பார்த்தால், இவர் வேறு கோணத்தில் யோசிக்கிறாரே " என்ற வியப்பு எல்லோர் மனதிலும் நிறைந்திருந்தது.
" நல்ல ஆலோசனை. நல்ல யோசனை... சேனாதிபதியாரே!!!!. வந்தியத்தேவரின் எண்ணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..."
குழப்பத்தில் இருந்த மன்னர் இராஜராஜரின் மனதில், வந்தியரின் ஆலோசனை ஒரு தெளிவைக் கொடுத்தது. அதனை முழுமையாய் ஏற்றுக்கொண்ட மன்னர், அதுபற்றி அநிருத்தரின் கருத்தை அறிந்து கொள்ள ஆர்வமுடன் அவரிடம் வினவினார்.
" சிறப்பான யோசனை. என் மனதிலும் இதுதான் தோன்றியது. வந்தியர், அதையே தெளிவாக நமக்கு விவரித்துள்ளார்"
"நல்லது. நல்லது. அப்படியெனில் முதல் நிலைக்கான தீர்வைப் பற்றி ஆலோசிப்போம். "
" ஆமாம். நமது வழியில் பெரும் தடையாக இருப்பது இந்த மலைக்காடுகள்தான்.
முதலில், கடுமையான அந்த 18 அடர் வனங்களை எப்படிக் கடந்து செல்வது என்று சிந்திக்க வேண்டும்"
" ஆம்.. மழபாடியாரே... அதைத்தான் நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். காலங்கடத்தாமல், ஒரே மூச்சில் அந்தக் காடுகளை விரைவாகக் கடந்து சென்றால் மட்டுமே, எதிரியை இலகுவாக வெல்ல முடியும். காட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு நாழிகையிலும், நமக்கு ஆபத்து நேர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.."
மதியூகி அநிருத்தர் சிந்தனையுடன் பதிலளிக்க, மற்றவர்கள் மனதும் அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது.
" தேவையற்ற ஆபத்துகளை எதிர்கொள்வதை விட, அதை தவிர்ப்பதே சிறந்த யோசனை "
" தவிர்க்க வேண்டுமா??... எதைத் தவிர்க்க வேண்டும் முதன் மந்திரியாரே"
"நிச்சயமாகப் போரை அல்ல இளவரசே. காட்டில் உள்ள ஆபத்தைப் பற்றித்தான் கூறினேன். இருள் சூழ்ந்த அந்த வனங்களுக்குள், உறைய வைக்கும் கடுங்குளிரோடு, ஆபத்தான காட்டு விலங்குகளையும் எதிர்கொள்வது நமக்கு பாதகமாக அமையும்.எவ்வளவு விரைவாக காடுகளைக் கடந்து இலக்கை அடைகிறோமோ, வெற்றியும் நமக்கு அவ்வளவு சாத்தியமாகும்"
" ஆபத்தின்றி அந்தக் காடுகளை வேறு எப்படி கடக்க முடியும்??
" ஆபத்தில்லாமல் கடக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கும் வழிமுறையை யோசிக்க வேண்டும்."
அநிருத்தரின் ஆலோசனைக்குப் பிறகு, அவர்களின் யோசனை ஒருமுகப்பட்டிருந்தது. அதில் வனத்தைப் கடக்கும் சிந்தனையை விட, எளிதில் விரைவாக எப்படிக் கடப்பது என்ற யோசனை மேலோங்கி இருந்தது.
" ஒரு இடத்தை விரைவாகக் கடக்க வேண்டுமெனில், அந்த இடத்தைப் பற்றி நமக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் விரைவாக அவ்விடத்தை கடக்க முடியும்."
" ஆமாம். மழபாடியாரே.. நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் "
" ஆனால்.. என்ன அப்ரமேயரே... வேறு ஏதும் வழி தோன்றுகிறதா??
" இருக்கிறது. அதைப் பற்றித்தான்..."
" சொல்லுங்கள்.. அப்ரமேயரே.. உங்களின் யோசனை என்ன??"
" மன்னரே.. எனது யோசனை என்னவென்றால்.. நம்மில் யாருக்கும் அந்த இடத்தைப் பற்றிய பெரிய புரிதல் இல்லை என்பதே உண்மை"
" உண்மைதான். அவ்விடத்தின் தன்மையைப் பற்றி மோலோட்டமாக தெரிந்ததை வைத்துக் கொண்டு, காரியத்தில் இறங்குவது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் செயலுக்கு ஒப்பானது என்பது என் எண்ணம். நமக்குத் தெரியாதபட்சத்தில் அந்த இடத்தை எளிதாய்க் கடக்க என்ன செய்ய வேண்டும்??"
அதைக் கேட்டு எழுந்து இளவரசர் தனது மனதில் தோன்றியதைத் தெரிவித்தார்.
"எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு ஒரு விடயம் தெரியவில்லை என்றால் என்ன செய்வோம்?. அதைப் பற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே."
இளவரசரின் பதில் திருப்தி அளித்தாலும், அநிருத்தருக்கு அதில் உடன்பாடு தோன்றவில்லை.
"ஆகச் சிறந்த ஆலோசனை இளவரசே. ஆனால் ஒருவரிடம் கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு, ஆபத்து நிறைந்த அந்த வனத்தை கடப்பது அவ்வளவு எளிதானது என்று தோன்றவில்லை."
" எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது "
சந்தேகத்துடன் பேசிய அநிருத்தரிடம் தயங்கியபடி தனது பதிலைத் தெரிவித்தார் அப்ரமேயர்.
" கூறுங்கள். அப்ரமேயரே. இதில் என்ன தயக்கம் உங்களுக்கு.."
" அவ்விடத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஒருவரை உதவிக்கு அழைத்து சென்றால், அவ்வனத்தைக் கடப்பது எளிதாகும் அல்லவா??? "
" நல்ல யோசனை. அப்ரமேயரே. அப்படி அந்த இடங்களை நன்கு அறிந்தவர் யார் இருக்கிறார்கள்" என்று அநிருத்தரின் வினாயெழுப்ப, அனைவரின் மனதும் அதற்கான விடையத் தேடியது.
" உதவிக்கு வருபவர் அவ்விடத்தை நன்கு அறிந்தவராக இருப்பதோடு, நமக்கு நம்பிக்கையானவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.."
" மழபாடியார் சொல்வதும் சரிதான். நிச்சயமாக, உதவிக்கு வருபவர் நம் நம்பிக்கைக்கும் உரியவராக இருக்க வேண்டும்.."
"மன்னர் அவர்களே!! தளபதிகள் சொல்லும் இரண்டு நிபந்தனைகளுக்கும் பொருந்தும் நபர் ஒருவர் இருக்கிறார்."
" அப்படியா... யார் அவர்???. கூறுங்கள் வந்தியரே.. யார் அந்த நபர்"
வந்தியரின் வார்த்தைகள் அந்த அவையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. "அப்படிப்பட்ட நபர் யாராக இருக்கும்??" என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உதித்து, அதற்கான பதிலை அறியும் ஆவல் அவர்களின் முகங்களில் ஒன்றுபோல் வெளிப்பட்டது.
- தொடரும்