புது வீடு - சிறுகதை
புதிதாய்க் குடி வந்த சில வாரங்களேயான வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சிவராமனுக்கு இரவெல்லாம் நித்திரை தேவி அடிக்கடி இடைவேளை விட்டுச் சென்றதால் காலையில் சற்றே கண்ணயர்ந்தான். அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டு வீடுகள் தாண்டி ஒலித்த
"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து
விநாயகனே... வினை தீர்ப்பவனே...
விநாயகனே... வினை தீர்ப்பவனே.... " என பக்தி பரவசமாய் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க் குரல் காதுகளுக்குள் நுழைந்து எழுப்பியது.
தூக்கம் கலைந்த கோபத்தில் " இவனுங்க பக்திக்கு எதுக்கு ஊர எழுப்புறாங்க" என்று புலம்பிக் கொண்டே குழாயைத் திறந்து மூஞ்சியைக் கழுவிவிட்டு நிமிர்ந்தான். அங்குப் பக்கத்து வீட்டுக்காரர் இவனைப் பார்த்துப் புன்னகைத்தார். " ஆத்தி இவன்கிட்டையா சிக்கினோம் காலங்காத்தால." என்று மனதிற்குள் மானாவாரியாகத் தோன்றினாலும், வேறு வழியின்றி இவனும் பதிலுக்கு பல்லிளித்துவிட்டு திரும்பினான்.
" என்ன தம்பி. காலையில சீக்கிரம் எழுந்திட்டிங்க போல " எனத் தனது முதல் அஸ்திரத்தைத் தொடுத்தவரிடம் " ஆமாண்ணே.." என்றவாரே தூக்கமிழந்த கண்களைத் தேய்த்தவன் கண்களைப் பார்த்தவர் இரண்டாவது கணையைத் தொடுத்தார்.
" என்ன தம்பி. கண்ணெல்லாம் இப்படி செவந்திருக்கு.. "
"ஆமாண்ணே.. நைட்டெல்லாம் தூக்கமே இல்ல. அதுதான்."
" ஏன் தம்பி.. கொசுக்கடி ரொம்பவா.."
" இல்லண்ணே... "
" அப்பொறம். வேற என்னாச்சு" என்று தனது ஆர்வத்திற்குத் தீனி போட ஆயத்தமானார்.
" சம்பந்தமே இல்லாம ஒரே கனவா இருக்கு. ஒழுங்காத் தூங்க முடியல" என எரிச்சலாய்க் கூறிய சிவராமனைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரின் கண்கள் பலிச்சிட தனது அன்றைய அலுவலை ஆரம்பித்தார்.
" அப்படி என்ன கனவு தம்பி. தூக்கம் கலையுற அளவுக்கு. ஏதாச்சும் கில்மா கனவா" என தனக்கு வராத வெட்கத்தை விலைக்கு வாங்கி வழிந்தவாறே கேட்க, உள்ளுக்குள் வந்த எரிச்சலை அப்படியே மறைத்துக் கொண்டு " அந்த மாதிரி இருந்தத்தான் நல்லா தூங்கியும் இல்லாமே" எனப் பதலளித்தான்.
"ஆமா. ஆமா.. வேற என்ன தம்பி "
" அது ஒன்னும் இல்லை.. நல்லா தூங்கிட்டு இருக்கும் போது "
" தூங்கிட்டு இருக்கும் போது"
"யாரோ வந்து தலைமாட்டுல உக்காந்து"
" ஆத்தி.. அப்புறம் என்ன"
" தலைமாட்டுல உக்காந்து இருமி எழுப்பி விடுறாங்க" என்ற சிவராமனின் பதிலில் ஏமாற்றமடைந்து " அவ்ளோதானா?. அதுக்கா எழுந்தா? அதுக்கப்புறம் ஏதாச்சும்" என்று இழுத்தவருக்கு " ம். ஆமா ணே" என்ற பதில் உற்சாகத்தை திரும்பக் கொண்டு வந்தது.
"அப்புறம்..என்னாச்சு"
" தலைமாட்டுல உக்காந்து, என்னைத் தள்ளி படுக்க சொன்னாரு "
" எதுக்கு"
" அவரு உக்காருனுமாம்."
" நீ தள்ளிப் படுத்தியா.."
" ம்.. எழுந்து உக்காந்தேன் "
" வேற என்ன நடந்துச்சு"
" பீடி இருக்கானு கேட்டாரு. எனக்குப் பழக்கம் இல்லை. ஈவ்னிங் வரும்போது வாங்கிட்டு வரேனு சொன்னேன்"
" அதுக்கு என்ன சொன்னாரு"
" நல்லது. சாயந்திரம் வரும்போது அப்படியே ஒரு குவார்ட்டரும் வாங்கிட்டு வாப்பானு சொன்னாரு.."
" என்னது சரக்கா"
" ஆமாண்ணே... "
" அட..இதுக்க நைட்டெலாம் தூங்காம கெடந்தா"
"அப்பொறம்.. இனி இங்க படுக்காத... இது இடம் சரியில்லைன்னு சொல்லிட்டு சிரிச்சாரு. அதுல தூக்கம் போயிடுச்சு. திரும்ப கண்ணமூடினா என்னென்னமோ வருது. அதுதான் தூங்க முடியல." என்று சிவராமன் கூறி முடித்தும் தீவிர யோசனையில் இருந்தார் அந்த பக்கத்து வீட்டு பெரும்புள்ளி.
" என்னண்ணே.. யோசனை பலமா இருக்கு"
" ஆமா.. ஓங் கனவுல வந்தவரு நல்லா உயரமா இருந்தாரா"
" ஆமா. ஏன்"
" கைலி கட்டிட்டு, சட்டைல ரெண்டு பட்டன் போடாமா, தோள்ல துண்டு போட்ருந்தாரா" என்று அவர் கேள்விகளைத் தொடர, சிவராமனின் மனதிற்குள் இலேசாய்ப் பதற்றம் வர ஆரம்பித்தது.
" ஆமா. பெரியமீசை வச்சிருந்தாரு. ஏன் ரா கேக்குறீங்க"
" அவருதான் அந்த வீட்டுக்காரராம். "
" இல்லையேனா.. வேற ஒருத்தர் தானே அட்வான்ஸ் வாடகை எல்லாம் வாங்கினாரு"
" அவங்க இப்போ வாங்கிருக்க ஓனர். நான் சொல்றது வீட்டக் கட்டுனவர" என்று புதிர்களுக்குப் பிள்ளையார் சுழி போட" ஏன் வீட்ட வித்தாரு.. ஏதும் பிரச்சனையா" என்ற தயக்கத்துடன் கேட்டான் சிவராமன்.
" அவரு ஆசைஆசையாய்க் கட்டுன வீடுதம்பி. இவங்க கிட்ட கொஞ்சம் வட்டிக்கு கடன் வாங்கிருந்தாரு.. அந்த வட்டி குட்டி போட, கட்ட முடியாமக் கடைசில வீட்ட எழுதி வாங்கிட்டாங்க " என்றவர் சொல்லியதைக் கேட்டதும் பதற்றம் அதிகமான சிவராமன் " இப்போ எங்க இருக்காங்க.. " என அவரிடம் கேட்டான்..
" வீடு போயிடுச்சேனு வருத்தத்துலேயே இறந்துட்டாரு தம்பி " என்பதைக் கேட்டு அதிர்ச்சியில்" என்னது இறந்துட்டாரா" என்றான் சிவராமன்.
" ஆமா தம்பி.. " என்று அவர் முடிக்க அவர் வீட்டிற்குள் இருந்த தொலைக்காட்சியில்
"கொடியவனின் கதைய முடிக்க,
கொரவலையத் தேடிக் கடிக்க
நாரு நாரா ஒடம்ப கிழிக்க
நடுத்தெருவில் செதற அடிக்க" என காஞ்சனா திரைப்படப் பாடல் சத்தமாய் ஒலிக்கத் தொடங்கியது..