யாக்கை சிறகினிலே
-விஜய நேத்ரன்
எறும்புகள் ஊர்வலம் போல் சாரைசாரையாய் அணிவகுத்து நின்ற வாகனங்களின் நெரிசலில் மொத்த சாலையும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. சாலையின் நெரிசலைப் போலவே ஜானகியின் மனதும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழப்பத்தில் சிக்கி பதிலுக்காகப் பரிதவித்தது.
வாகனங்களின் இரைச்சல் அங்கே அதிரடியாய் ஆனந்தக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க, காருக்கு உள்ளே அமைதி நிலவியது. தனது மனதின் புதிர்களுக்கு ஜானகி மௌனமாய் விடை தேட, அதைக் கலைக்க விரும்பாமல் ரகு காரை ஓட்டினான்.
அவளது மனவோட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போனாலும், ஒரு வழியாக கார் தனது இலக்கை எட்டியது. காரின் இயக்கத்தை நிறுத்தி விட்டு , ஆழ்ந்த யோசனையில் இருந்த ஜானகியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றான்.
"ஜானு, நீ சொன்ன இடத்துக்கு வந்தாச்சு " என்ற ரகுவின் குரலைக் கேட்டு தன் யோசனைக்கு விடை கொடுத்தாள் ஜானகி. தனது ஏழு வருடத் தேடலுக்கான பதில் இன்றாவது கிடைக்குமா என்ற அவள் மனதில் நிரம்பிய ஏக்கம் முகத்தில் பிரதிபலித்தது.
காரில் இருந்து இறங்கிய இருவரும் மெதுவாய் நடந்தனர். "காவ்யா மல்டி ஸ்பெஸாலிட்டி ஹாஸ்பிட்டல் " என்ற பெயர் அவர்களை வரவேற்றது. தன் கனவுகள் கலைந்து விடுமோ என்ற மனதின் பயத்தில் இதுவரை மதில் மேல் பூனையாய்க் காத்திருந்தாள். சுற்றத்தின் வார்த்தைகள் சுமைகளாய் மாறி இதயத்தின் ஓரத்தை ஈட்டியாய்த் தாக்க, வலிகளுடன் இறுதியாய் இங்கே அடியெடுத்து வைத்தாள்.
" சொல்லுங்க சார், நீங்க யாரைப் பாக்கணும்" என்ற ரிசப்னிஸ்ட்டின் கேள்விக்கு " டாக்டர் ஐஸ்வர்யாவைப் பாக்கணும் " என்று பதிலளித்தான் ரகு.
"உங்களப் பத்தி விவரத்த சொல்லி அங்க போய் பதிவு செய்யுங்க சார்." என்று ரிசப்சனிஸ்ட் கை காட்டிய திசையில் இருந்த பெண்ணிடம் சுயவிவரங்களை சொன்னான் ரகு.
" கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க சார். கூப்டுவாங்க " என்று அந்த பெண் சொல்ல அங்கிருந்து இருவரும் நகர்ந்து அங்கே இருந்த இருக்கையில் இருவரும் வந்தமர்ந்தனர். சிறிது நேர காத்திருத்தலுக்குப் பின் " இங்க ஜானகி யாரு?? உள்ள போங்க.." என்ற அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.
" வாங்க, உட்காருங்க" என்று புன்முறுவலுடன் வரவேற்றார் டாக்டர்.
" சொல்லுங்க??, உங்க ப்ராப்ளம் என்ன? உங்களப் பத்தி சொல்லுங்க" என்று மேலும் கேட்டுவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருந்தார் டாக்டர் ஐஸ்வர்யா.
சில வினாடிகள் நிசப்தமாய் கரைந்தது. மௌனமாய் வீற்றிருந்த ஜானகியை பார்த்தான் ரகு. ரகுவின் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ஜானகி மெதுவாக பேசத் தொடங்கினாள். ஜானகியின் பேச்சை இருவரும் கவனமாக கேட்டனர். இடையிடையே இருவிழிகளில் எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளிகளுக்கு ஜானகி இமைகளால் அணை போட்டாள்.
" ஒ. கே. ஜானகி. கவலைப்படாதிங்க. இதுல இருக்க டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க. ரிசல்ட் வந்ததும் பாக்கலாம்" என்று சொல்லி சரசரவென காகிதத்தில் கிறுக்கலாய் சில வரிகள் எழுதி கையில் கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்ட இருவரும் அரைமனதுடன் வெளியே வந்தனர்.
எழுதிக் கொடுத்த அனைத்தையும் ஒவ்வொன்றாய் எடுத்து முடித்துவிட்டு முடிவிற்காகக் காத்திருந்தனர். நொடிகள் கரைய கரைய ஜானகியின் மனதில் பதற்றம் குடியேற ஆரம்பித்தது.
ரகுவின் கை விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள். அவளது கைவிரல்களைப் பற்றியவாறே கண்களைப் பார்த்தான். தன் கண்களால் ஜானகிக்கு ஆறுதல் சொன்னான். அவன் விழிகள் பேசிய மொழிகள் ஜானகியின் மனதுக்கு ஆறுதல் தர சிறிது நிம்மதி அடைந்தாள். மீண்டும் டாக்டர் அழைக்க அவரது அறைக்கு சென்றனர்.
" உங்களோட டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் எல்லாம் வந்துடுச்சு. " என்று டாக்டர் சொல்ல ஜானகியின் பதற்றம் அதிகமாகியது. மேலும் அதைப் பற்றி விளக்கி சொல்ல இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
" கவலைப்படாதிங்க. நான் தர மெடிசின்ஸ தொடர்ந்து எடுத்துட்டு வாங்க. சரியாக வாய்ப்புகள் இருக்கு." என்ற டாக்டரின் வார்த்தைகள் சற்றே ஆறுதல் அளித்தாலும் ஜானகிக்கு மனம் மட்டும் ஏனோ அமைதி கொள்ளவில்லை. டாக்டரிடம் விடை பெற்று கிளம்பினர்.
" நான் ஓட்றேன்" என்று ஜானகி சொல்ல அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ரகு தலையசைத்தான். மௌனங்களின் ஆக்ரமிப்பு இப்போது சற்றே அதிகமாக இருந்தது. ஜானகியை எண்ணி அவன் மனம் வருந்தியது. அவன் நினைவில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் நிழலாடியது.இரவில் ஏதேச்சையாக கண்விழித்துப் பார்த்த ரகு அதிர்ந்தான். இருளின் துணையில் ஜானகி தன் கண்ணீரைத் தலையணைக்குப் பரிசளித்துக் கொண்டிருந்தாள்.
" என்னாச்சு ஜானு ?" என அதிர்ச்சியுடன் கேட்ட ரகுவுக்கு ஏதுமில்லை என்பது போல் தலையசைத்தாள். இருப்பினும் ஜானகியின் கண்ணீருக்கான காரணத்தை உணர்ந்த ரகுவின் கண்கள் கலங்கத் தொடங்கியது. கலங்கிய கண்ணீருக்கு இமைகளுக்குள்ளேயே தடை போட்டான்.
" ஏய். என்னாச்சுமா??. நீ எதுக்கு இப்ப அழுறா?"என்று அவள் தலையை வருடினான்.
_ தொடரும்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்