தேசிய நெடுஞ்சாலை
சுட்டெரித்த மே மாத வெயில் உண்டாக்கிய வியர்வைத் துளிகள் உடலை நனைக்கும் முயற்சியில் வெல்லும் நிலையிலிருக்க, நீண்ட அந்த நெடுஞ்சாலையில் செருப்பில்லாத வெறுங்கால்களுடன் கைகளில் ஒரு மஞ்சள் பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த அந்த பெரியவர்,கை விரல்களை மெதுவாக இமைகளின் மேல் வைத்து எதையோ தேடிப்பார்த்து ஏமாற்றத்துடன் தலைகுனிந்தார். .
நெடுந்தூரம் நடந்து வந்த பயணக்களைப்பில், இளைப்பாற சிறு நிழலைத் தேடியிருப்பார் போலும். கருஞ்சாயம் பூசி வெயிலில் தகதகத்த கானல் நீரைப்பார்த்து எச்சில் விழுங்கினாலும், உண்டான நாவறட்சி தீர்வதாயில்லை.பயணம் செல்லும் பலருக்கும் அறுந்துணையாய் வழிநெடுகிலும் இருந்த நிழல்தரும் மரங்கள் எல்லாம் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டி வீழ்த்தப்பட்டு, மரக்கட்டைகளாகக் கடைகளுக்கு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மருந்துக்கும் நிழலென்பது தென்படவே இல்லை.
வானத்தை அண்ணாந்து நேரம் என்னவென்று பார்த்தபடி " மணி ஆகிடுச்சு. சீக்கிரம் போகனும்." என்றபடி மீண்டும் தனது தளர்ந்த நடையைத் தொடர்ந்தார். வாழ்நாளில் பல மைல் தூரங்களை நடந்தே கடந்த அந்த கிராமத்து விரைவுவண்டிக்கு இன்று இந்த சிறு தூரம் என்னவோ மிக அதிகமாகத் தோன்றியது. அவரது வயதும், சுட்டெரிக்கும் நண்பகலும் இதற்கு காரணமென்றாலும், இயற்கையின் துணையின்றி விஸ்வரூபமெடுத்து நின்ற அந்த செயற்கை நெடுஞ்சாலையும் அவரைப் பார்த்து நக்கலயாய்ச் சிரித்தது.
" எங் காலத்துக்கு நா எவ்ளோ பாத்துருப்பேன் " என உள்ளுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், "இந்த வெயில்ல இன்னும் அவ்ளோ தூரம் நடக்கனுமே" என்று நினைக்கும் போதே இதயத்துடிப்பு அதிகமாகியது. சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் முதல் அதிவேக சொகுசு பேருந்து வரை நிமிட இடைவெளியில் அனல்காற்றை அவர் மேல் அள்ளித் தெளித்தபடி வேகமாய்ச் சென்று கொண்டிருந்தன. தனக்குத்தானே சமாதானம் பேசிக்கொண்டும், சிறு குழந்தை போல கடந்து செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடியும் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தார்.
தரையில் இருந்த சூட்டையும், உடலில் இருந்த சோர்வையும் மறக்க கடந்த கால நினைவுகளை அசை போட்டுக்கொண்டார். ஆனாலும் நிமிர்ந்து பார்த்த விழிகளுக்குச் பெருஞ்சாலை சற்று மங்கலாகத் தெரிந்தது. நா வறண்டு கண்கள் மெதுவாகச் சொருகிய நொடியில் அவரது மனம் ஒரு சிறு செடியாவது இருக்காதா என்று எண்ணியது. அந்த நினைப்பு முழுமையாவதற்குள் கால்கள் தள்ளாட அப்படியே ஓரமாய் உருண்டு விழுந்தார்.
தனக்கு ஏன் வம்பு என்று சிலரும், நின்று பார்த்தால் கௌரவக் குறைவு என்று சிலரும் கடந்து சென்று கொண்டே இருந்தனர். கடந்து சென்ற வாகனங்களுக்கு நின்று பார்க்க நேரமும் மனமும் இல்லாததால் கதைகள் பல எழுதி அடுத்தவர் காதுக்கு அனுப்பிக் கடமையை முடித்துக் கொண்டது.
காலத்தை மறந்து வெயிலின் போர்வையில் எவ்வளவு நேரம் இளைப்பாறுகிறோம் என்று தெரியாமல் கிடந்த அவரது முகத்தின் மேல் இதமாய்ச் சில துளிகள் பட இமைகளை மெதுவாகத் திறந்தவருக்கு மங்கலான பார்வைக்கு கடவுளின் முகமொன்று தெரிந்தது.
" ஒன்னுமில்லை. மெதுவா எந்திரிங்க" என்று அவரை கைத்தாங்கலாகப் பிடித்து உட்கார வைத்து தன்னிடம் இருந்த பாட்டிலில் இருந்த நீரில் சிறிதை அவரது முகத்தில் தெளித்தான் அந்த இளைஞர்.
" இந்தாங்க. இந்த தண்ணியக் கொஞ்சம் குடிங்க " என்று அந்த இளைஞன் கொடுத்த தண்ணீரைக் குடித்த பிறகுதான் பார்வையே முழுமையாய்த் தெரிந்தது அவருக்கு.
" ரொம்ப நன்றி தம்பி " என்று கையெடுத்த கும்பிட்ட பெரியவரை " என்னங்கய்யா... நீங்க போய் கும்பிட்டுக்கிட்டு " என்று அவரின் கைகளை சேர்த்துப் பிடித்து கொண்டான் அந்த இளைஞன்.
அப்படியே தன்னுடைய முகத்தையும் தண்ணீரால் கொஞ்சம் கழுவி புத்துணர்வு அடைந்தவன் " சரிங்க ஐயா... என்ன ஆச்சு.. எங்க போகனும் என்று கேட்டுக்கொண்டே தனது இருசக்கர வாகனத்திற்கு அருகில் அவரை அழைத்து வந்தான்.
" பக்கத்து ஊருதான் தம்பி. நடந்து வந்தேன். வெயிலுக்கு மயக்கம் வந்திடுச்சு." என்று சொல்லிய அந்த பெரியவரின் கண்கள் அங்கு எதையோ தேடிக்கொண்டிருந்ததைக் கவனித்தான்.
" ஓ... சரிங்க ஐயா.. ஆமா எத தேடுறீங்க. காசு எதுவும் விழுந்திடுச்சா இங்க." என்று கேட்டபடியே அந்தப் பெரியவர் விழுந்த இடத்தை ஆராய்ந்த அவனுக்கு மங்கலகரமாய் மஞ்சப்பை தென்பட பெரியவரைப் பார்த்தான். அவரும் அதையே கை காட்ட " இருங்க நான் எடுத்துட்டு வரேன்" என்று இறங்கிச் சென்று அதை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான்.
கையில் வாங்கிய பெரியவர் உள்ளே காகிதத்தில் சுற்றப்பட்ட ஒன்றைப் பார்த்துப் புன்னகைத்தார்.
" பைக்குள்ள எல்லாம் சரியா இருக்கா" என்ற கேட்டவனுக்கு "இருக்குப்பா" என்றார் பெரியவர்.
" சரி. வாங்க. எங்க போகனும் நான் கொண்டு போய் விடுறேன்." என்றவனிடம் " உனக்கு எதுக்கு ப்பா சிரமம். நானே மெதுவாப் போயிடுறேன்." என்றார் அந்த பெரியவர்.
" இதுல என்ன சிரமம் இருக்கு.. நான் அந்த வழியாத்தான் போறேன். ஏறுங்க கொண்டு போய் விடுறேன்." என்று அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான். அப்படியே பேச்சைத் தொடர்ந்தான்
"எங்க போயிட்டு வர்றீங்க "
" மவ வீட்டுக்குப்பா"
" அவங்க வீடு பக்கமா"
" இல்லப்பா. டவுன்ல இருக்காக. "
" அங்க இருந்து நடந்தா வர்றீங்க" என்று கேட்டவனின் குரலில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்தே வெளிப்பட்டது.
" இல்ல தம்பி. பஸ்ல தான் வந்தேன். எங்க ஊர்ல நிறுத்த மாட்டேனு இங்க இறக்கி விட்டுட்டாங்க. "
" ஏன். நிறுத்த மாட்டாங்களாம்"
" அது எச்ப்ரஸ் வண்டியாம். நிக்காதாம் அந்த ஸ்டாப்புல" என்று கோபத்துடன் சொன்னதைக் கேட்டு " ஓ... " என்றவனுக்கு கண்ணாடியில் அவரது முகத்தைக் கண்டவனுக்கு சட்டென மனதில் ஏதோ நினைவில் வந்தது
"ஆமா.. நீங்க சாப்டிங்களா.." என்றான்.
"இல்லை தம்பி.. வீட்டுக்குப் போயிதான் சாப்பிடனும்."
" வெயில்ல இவ்வளவு தூரம் போறீங்க. சாப்பிட்டு வந்திருக்கலாமே.. காசு இருக்கா ஐயா" என்று அன்பாய் வார்த்தைகளை உதித்தது அவனது இதயம்.
" அதெல்லாம் இருக்கு தம்பி... "
" அப்புறம் ஏன் சாப்டமா.ஏதாவது வாங்கித் தரவா"
" இல்லை தம்பி. பொரட்டா வாங்கி இருக்கேன். "
" ஓ.. அதுதான் அந்த மஞ்சப்பை ரகசியமா" என்று சிரிப்பாய்க் கேட்க பெரியவரின் முகத்தில் புன்னகை இரட்டிப்பாய் பெருக "ஆமா " என்று தலையசைத்தார்.
" அத அங்கேயே சாப்டுட்டு வந்திருக்கலாம்ல."
" மூலக்கடை பொரட்டா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்."என்று காதலுடன் சொன்னவரைக் கண்ணாடியில் பார்த்து இரசித்தபடி கேள்வியைத் தொடர்ந்தான்.
" ஓ.. அப்போ உங்களுக்கு"
" கூழோ, கஞ்சியோ அவ கையால சாப்பிட்டே பழகிடுச்சு தம்பி.. வெளில தனியா சாப்ட ஒருவாய் சோறு முழுசா உள்ள போகாது. அவளும் நான் வார வரை காத்துட்டு இருப்பா.." என்று சொல்லியவரிடம் " ஆயா ரொம்ப கொடுத்து வச்சவங்கய்யா" என்றவனிடம் " இல்ல தம்பி.. நான்தான் கொடுத்து வச்சவன். பொண்டாட்டி இருக்க வரைதான் ஆம்பளக்கு அதிகாரம் மரியாதை எல்லாமே. அவ போயிட்டா நாம எல்லாம் நடைபொணம் மாதிரிதான்." என்று மிகப்பெரிய வாழ்வியலை சாதாரணமாகப் பேசியவரின் விழிகளில் எதார்த்தம் வெளிப்பட்டது. அந்த வார்த்தைகள் அவனுக்குள் விதையாய் விழுந்து நொடியில் விருட்சமாய் வளர்ந்து நின்றது.
அந்த பிரமிப்பை விட்டு வெளியே வருவதற்கு அவனுக்கு சற்று நேரம் பிடித்தது. அதனால் அவர்களின் பயணத்தில் மௌனம் கொஞ்சம் இடம் பிடித்தது.அதை உடைத்திட எண்ணிய அவன் " ரெண்டு பேரும் ஒருத்தர விட்டு ஒருத்தர் இருக்க மாட்டிங்க போல " என்றான்
"ஆமா தம்பி. இனி எப்படி போகுதுனு தெரியல. அந்த சாமி போகும் போது ரெண்டு பேரையும் ஒன்னா கூட்டிட்டுப் போயிட்டா நல்லது" என்று கண்ணீருடன் அவர் உதித்த வார்த்தைக்குள் காதல் ஆழமாய் இருந்தது. கண்ணாடியில் பார்த்தவன் மனதிற்குள் பிம்பமாய் உறைந்தது அந்த கண்ணீர் துளி.
அவரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே" நுப்பாட்டு தம்பி.. இங்க இறக்கி விட்டீனா. போதும் " என்றவய் சொல்ல வண்டியை நிறுத்தினான்.
மெதுவாய் இறங்கிய அந்தப் பெரியவர் " ரொம்ப நன்றி தம்பி " என்றார்.
" நீங்க எல்லாம் ஆசிர்வாதம் தான் பண்ணனும். நன்றி எல்லாம் சொல்லக்கூடாது " என்று கண்சிமிட்டியபடி அவன் கூற " நீ பொண்டாட்டி புள்ளையோட மவராசனா இருப்ப" என்று வாழ்த்திவிட்டு மெல்ல நடந்தார்.
சிறிது நேரம் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் வண்டியை மீண்டும் எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான். அவனது மனதில் " அவளுக்கு என்ன பிடிக்கும். வீட்டுக்குப் போகும் போது என்ன வாங்கிட்டுப் போகலாம் "என்று எண்ணங்களில் அவன் மனைவியின் முகம் காதலாய் உலவத் தொடங்கியது.
வண்டியை விட்டு இறங்கிய அந்தப் பெரியவர், காதலின் புரிதலை அவன் இதயத்தில் ஏற்றி விட்டிருந்தார் . அந்தக் காதலின் நீட்சி அவனுடனே தொடர்ந்தது வழித்துணையாய் அந்த நெடுஞ்சாலையில்.
✍️ கவிஞர் விஜயநேத்ரன்