தட்டானுக்குச் சட்டை போடும் கெ(கோ)ட்டான்கள் : கொடுப்பதைப் கெடுக்கும் குணவான்கள்
கேட்டதையெல்லாம் கொடுக்கும்
தட்டான்கள் இருக்கிறார்கள்...
இன்றும் நல்மனதுடன்...
கொடுப்பதையெல்லாம் தடுக்கின்ற
கோட்டான்களுக்கு மத்தியில்..
எட்டாத உயரத்தில்...
அடுத்தவருக்குக் கொடுப்பதைக்
கிடைக்காமல் தடுப்பதில்,
அப்படியென்ன ஆனந்தமோ அவர்களுக்கு...
கொடுப்பவருக்கும் பெறுபவருக்குமிடையில்
கோட்டைச்சுவரெழுப்பி காவல் இருக்கிறார்கள்...
இரவு பகல் பாராது..
இமைகளை மூடாது....
கொடுப்பவர் யாரோ? பெறுபவர் யாரோ????....
தடுப்பதால் இலாபம் பெறுபவர் யாரோ??
பச்சோந்தியாய்ப் பன்முகம் காட்டி,
பரிதவிப்பதாய் முகமூடி பூட்டி,
தவிப்பவர் முன் முதலைக்கண்ணீர் விட்டு,
கொடுப்பவர் கரங்களைத் தட்டிவிட்டு,
ஆயிரம் நாடகங்களை அரங்கேற்றி,
அதில் சுகம் காண்கிறார்கள்...
அரிதாரம் பூசாத அற்பர்கள்...
கொடுப்பவருக்கு ஏதோ ஒன்று...
பெறுபவருக்கோ அதுவே ஒன்று...
தடுப்பவருக்கு அதுவா நன்று???
கடவுளே வரம் கொடுப்பதற்குத்
தயாராய் இருந்தாலும்,
பூசாரிகள் அனுமதிப்பதில்லை...
பக்தனுக்கு அருள்வதற்கு...
இருவருக்குமிடையில்
நிற்கிறார்கள்....
இடைத்தரகராய்...
இருபுறமும் பயன்தேடி...
ஒருபுறம் பயன்குறைந்தாலும்,
வரம்கிடைக்க வழிவிடாமல்,
தடுத்து மகிழ்கிறார்கள்...
தன்னலத்தைப் பேண...
பிச்சை அளிப்பதில் கூட
பேரங்கள் பேசுகிறார்கள்...
தனக்கான சதவீதம் தேடி...
மூன்று லோகங்களையும்
முழுதாய் கேட்கின்ற
வாமனர்களுமில்லை...
வந்து நிற்பவர்கள்....
முன்னால் நிற்பவருக்கு
முழுதாய்க் கொடுத்திடும்
மகாபலிகளும் இங்கில்லை...
வாரிக் கொடுப்பவர்கள்...
ஆனால்,
கொடுப்பவருக்கும்,
கிடைப்பவருக்கும்,
குறுக்கே நிற்கிறார்கள்....
சுக்ராச்சாரியார்கள்...
தங்கள் சுகங்களுக்காக...
ஏதோவோர் துயர் நீக்கவே
எங்கெங்கோ அலைந்து,
இறுதியாய் கையேந்துகிறார்கள்...
கொடுக்க மனமில்லை என்றாலும்,
தடுக்காமல் இருந்திடுங்கள்...
புண்ணியம் உங்களுக்கு சேரட்டும்..
அவர்களின் புதுவாழ்க்கையில்...
ஏனெனில்,
தட்டானுக்கு சட்டை போடுபவர்களை,
கட்டையால் அடிக்க வருவதில்லை..
குட்டைப் பையன்களும் இப்பொழுது..
✍️ கவிஞர் விஜயநேத்ரன்