சாபங்கள் வரமாய் மாறிய வரலாறு.
இரவும் பகலும் இரண்டறக் கலந்த அகிலத்தின் சுழற்சியில், மானிடர்களின் வாழ்க்கையும் அப்படியான ஒன்றே ஆகும். பௌர்ணமி மற்றும் அமாவாசைப் பொழுதுகளின் கால அளவு வேண்டுமானால் மாறலாம். ஆனால் அவை வருவதை தடுப்பதென்பது இயலாத காரியமாகும். அதுபோலவே மனிதவாழ்வில் இன்பமும் துன்பமும் இடமாறி, நிலைமாறி, ஆள்மாறி நகர்ந்து கொண்டே இருக்கும்.
நாம் சந்திக்கும் மனிதர்கள் நம்மால் மகிழ்வுறும் போது, வரங்களையும், வாழ்த்துகளையும் வழங்கி நம்மை இன்பக் கடலில் மூழ்கடிப்பார்கள். அதே மனிதர்கள் நம் செயல்களால் காயப்படும்போது சாபங்களாய் நம்மை நோக்கி வெளிப்படும். ஆனால் நம் எண்ணத்தில் நியாயம் இருந்தால் , சிந்தனையில் தர்மம் இருந்தால் அந்த சாபங்கள் கூட வரங்களாய் மாறி நம் வாழ்வை வளமாக்கும்.
நாம் அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடக்கும். அது சிந்தனைக்கு எட்டாமலே கூட நடக்கலாம். நமக்கு அதிகப் பயனளிப்பதாய் இருந்தாலும், பெருந்தன்மையுடன் மற்றவருக்கு ஒன்றை விட்டுக் கொடுத்து விட்டு நகரும் போது, அதைவிடப் பெரிதாய் நமக்கு கிடைக்கும் நிகழ்வைக் உதாரணமாக இங்கே சுட்டிக்காட்டலாம்.
காவியத்தில் சாபங்கள் வரமான கதை :
சாபங்கள் வரமாய் கதைகள் மகாபாரதத்திலும் இராமயணத்திலும் நடைபெற்று இருக்கிறது. இராமயணத்தில் நளன் நீலனுக்கும், மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கும் சாபங்களே வரங்களாய் மாறி, அதனால் நன்மை விளைந்தது அதனைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
நளன் நீலனின் கதை
சீதையை மீட்க கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டி இருந்தது. ஆனால் கடலில் போடும் அனைத்தும் மூழ்கியதால், அந்த முயற்சியில் களைப்படைந்தனர் வானரர்கள். அதைக் கண்ட இராமன், நளன் மற்றும் நீலனை அழைத்து அப்பணியைச் செய்யப் பணித்தார். அனைவரும் வியக்கும் வகையில் கல்லானது கடலில் மிதக்க, அதற்கான காரணத்தை இராமனிடம் வினவினர். இராமனும் அவர்களுக்கு காரணத்தை விளக்கினார்.
நளனும் நீலனும் விஸ்வகர்மா மற்றும் அக்னிதேவனின் அருளால் வானர குலத்தில் பிறந்தவர்கள். சிறு வானரங்களாக இருந்தபோது வனத்தில் இருந்த முனிவரின் பொருட்களை எடுத்து ஆற்று நீரில் மூழ்கடித்து விளையாடினர். கண்விழித்துப் பார்த்த முனிவர் தன் குடிலில் இருந்த பொருட்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்படுவதைக் கண்டு கோபத்துடன் சாபமிட, அதைச் செய்தவர்களைத் தேடினார். அங்கு சிறு வானரங்களைக் கண்டதால் கோபம் குறைந்து, அவர்கள் நீரில் இடும் பொருட்கள் மிதக்க சாபமிட்டார்.
இதுவே பிற்காலத்தில் சேதுபாலம் அமையக் காரணமாய் அமைந்தது.
அர்ச்சுனன் பெற்ற சாபம்
வில்லனுக்கு விஜயனென்ற பெயரெடுத்த அர்ச்சுனன் வாழ்வில் பல்வேறு வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் துரதிஷ்டவசமாகப் பெற்ற சாபமே, இக்கட்டான நேரத்தில் அர்ச்சுனனுக்கு உதவியாய் இருந்தது.
வனவாச காலத்தில் பல சாகசங்களைச் செய்த அர்ச்சுனனை, அவனது தெய்வீகத் தந்தையான இந்திரன் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஊர்வசியிடம் நாட்டியத்தால் கவரப்பட்ட அர்ச்சுனன் அவளிடம் நாட்டியம் பயில ஆசை கொண்டான். அதை அறிந்த இந்திரன் ஊர்வசியிடம் அர்ச்சுனனுக்கு நாட்டியத்தை கற்றுக்கொடுக்க ஆணையிட்டான். அர்ச்சுனனும் விரைவில் திறம்படக் கற்றுத் தேர்ந்தான்.
அப்படிக் கற்றுத் தரும் வேளையில், அர்ச்சுனனின் அழகையும், திறமையையும் கண்டு , அர்ச்சுனன் மேல் ஆசை கொண்டு அடைய முற்பட்டாள். அதைத் தடுத்த அர்ச்சுனன், ஊர்வசியைத் தாயாகவும் குருவாகவும் நினைப்பதாகக் கூறி வணங்கி நின்றான். மோகத்தில் இருந்த ஊர்வசிக்கு கோபம் தலைக்கேற பேடியாகுமாறு சாபமிட்டாள். இதைக் கேட்ட மனம் உடைந்து கலங்கி நின்ற அர்ச்சுனனைப் பார்த்த இந்திரன் சாபத்தினை மாற்ற வேண்டினான்.
மோகம் நீங்கிய ஊர்வசி, அர்ச்சுனன் சிந்தனையில் தவறில்லை என்பதை உணர்ந்து, அர்ச்சுனன் தான் நினைக்கும் ஓராண்டு காலம் மட்டும் அரவாணியாக இருக்கலாம் என்று மாற்றி அருளினார்.
இந்த சாபத்தை பயன்படுத்தியே, பிருஹன்னளையாக மாறி அஞ்ஞாதவாசத்தை நிறைவு செய்தார்.
இவ்விரண்டு கதையிலும் அவர்களின் மனதில் எந்தவொரு கெட்ட எண்ணங்களும் இல்லாததால், அவர்கள் பெற்ற சாபங்களே வரங்களாய் அமைந்தது. நாமும் நல்ல எண்ணங்களை நம் மனதில் சுமந்தால், இன்று சாபங்களாகத் தெரியும் பலவும், நாளை வாரங்களாக மாறி நம் வாழ்வை வளமாக்கும்..
வாழ்த்துக்களுடன்
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்