
காற்றின் திசையில் கரையும் கால் முளைத்த நினைவுகள்
சிறியதும் பெரியதுமாய்
கனவுகளைச் சுமந்து...
ஒய்வில்லா முட்களாய்ச்
நிற்காது சுழல்கிறேன்...
வாழ்க்கை கடிகாரத்தில்...
அரியும் கரியுமாய்
ஓடியும் துரத்தியும்,
திளைத்து மகிழ்கிறது..
ஒன்றையொன்று,
வேட்டையாடி...
கண்ணில்படும்போது மட்டும்
வள்ளல் ஆகிறார்கள்...
வெற்று வார்த்தைகளில்,
வெளிவரும் தனவான்கள்..
பார்வையில் மறைந்ததும்,
மறந்தும் போகிறார்கள்..
தொலைந்தும் போகிறார்கள்
வேற்றுகிரகவாசிகளாய்...
எங்கிருந்தோ வருகிறார்கள்..
எதையெதையோ பேசுகிறார்கள்..
அப்படியே மறைகிறார்கள்...
தீடீர் பெருமழையில் முளைத்த
அக்கரை(றை)க் காளான்கள்...
உருவான என் கனவுகள்
உருக்குலைந்து கிடக்கிறது...
காலத்தின் வேகத்தில்
கானலாகின்றன...
கண் முன்னே ஆசைகள்...
நிறைமாதக் கர்ப்பிணியாய்
தினம் போகும்
பேருந்துப் பயணத்திலும்
உணர்கிறேன் தனிமையை...
கூட்டத்திலும் எனைத் தேடி
கட்டியணைத்துக் கொள்(ல்)கிறது
தனிமை...
சுவற்றுப் பல்லிகள்
சுதந்திரம் போதிக்கின்றன
தினமும்..
கிணற்றுத் தவளைகள்
கீதம் பாடுகின்றன
இரவில்...
இலவச அறிவுரைகளை
இரைந்து குலைக்கிறது...
உருவில்...
கடலில் விழுந்த
கட்பாறையாய்
முற்றிலும் மூழ்கிப் போனது
இயந்திர வாழ்க்கையில்
இயங்காமல் என் மனம்..
நொடி முட்கள் மாறுகின்றன..
நிமிடங்களின் சுமைதாங்கி,
மணிமுட்களாய் நகராமல்...
நீண்ட நாட்களாய்த்
தொலைந்து போன
என் நிழல்களைக் கூட தேடினேன்..
காலவரையற்ற விடுமுறையில்
காணமல் போய்விட்டது போலும்
கண்ணிலேயே படவில்லை..
நிலவைப் பிடிக்கவில்லை...
நித்திரை பிடிக்கவில்லை..
நீள்கிறது என் இரவுகள்
தனிமைத் தீயின்
தாக்கத்தோடு...
உறக்கம் தொலைக்கிறேன்
உண்ண மறக்கிறேன்..
உறவுகள் உடனிருந்தும்
உணர்கிறேன்
தனிமையை..
நீண்ட இரவிலும்
நீர்த்துப் போன பகலிலும்
மௌனமே மொழியாய்
மாறிப் போகிறது...
மலர்செடிகள் கூட
முட்களாகப் பூக்கின்றன
என் மனத்தோட்டத்தில்...
காரமேகமும் கூட
காரிருளோடு நகர்கிறது...
என் கற்பனை வானில்...
கதிரவன் உதிக்காமல்,
விடியலின்றி கிடக்கிறது...
என் கனவுப் பயணம்...
சிறகடித்து பறக்கும் நொடியில்,
சிறைப்படுத்தி ரசிக்கிறான்...
விதியென்னும் கொடூரன்...
கற்பனை ஏட்டினை எரித்து,
கனவுப் படகினை உடைத்து,
நம்பிக்கைச் சிறகை சிதைத்து,
நலங்கெடப் புழுதியில் எரிந்து....
நம்பிக்கையோடு
நான் சுமந்த வார்த்தைகள்,
நம்ம மறுத்து,
நடுங்கிக் கிடக்கிறது...
எனக்குள்...
எண்ணங்களை
எழுதும் முன்னே
எரிந்து போகிறது
காகிதத் தாள்களும்
காலண்டர் நாட்களும்
தனிமைத் தனலின்
தாக்கத்தில்....
காற்றின் திசையில்
கரைய விடுகிறேன்
கால் முளைத்த நினைவுகளை...
என்னை மீட்டுச் செல்லும்
என்ற நம்பிக்கையில்....