Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

புரியாத புதிர் : மரணமென்னும் முற்றுப்புள்ளி

Copied!
Kavignar Vijayanethran

புரியாத புதிர் : மரணமென்னும் முற்றுப்புள்ளி

மரணம்... 
வெறும் நான்கே எழுத்துதான்...
மொத்த உலகமும் 
அடங்கி விடுகிறது அதற்குள்..

அதன் அர்த்தங்கள்தான்
எத்தனை‌... எத்தனை...
அது தரும் உணர்வுகள்தான்..
எத்தனை...எத்தனை...
அது உடைக்கும் இதயங்கள்தான்...
எத்தனை.... எத்தனை...
அது உதிர்க்கும் உயிர்கள்தான்...
எத்தனை... எத்தனை.. 

வீதியில் இருப்பவனும் - அடுக்கு 
வீடு கட்டி வாழ்பவனும்,
ஒன்றென்று உணர்த்தும், 
சமத்துவவாதி இந்த மரணம்...

கீழ்ச்சாதி இவனென்றும் - உயர்
மேல்ச்சாதி அவனென்றும்,
பிரித்து பார்த்திடாத,
பகுத்தறிவாதி இந்த மரணம்...

ஆத்திகம் பேசுபவனும் - மறுத்து 
நாத்திகம் பேசுபவனும், 
சமநிலையில்  பார்க்கும், 
நடுநிலைவாதி இந்த மரணம்...

ஆணாய் இருந்தாலும் - உருவில்
பெண்ணாய் இருந்தாலும் 
பேதமின்றி பறிக்கும், 
பெருஞ்சிந்தனைவாதி இந்த மரணம்...

குழந்தை என்றாலும் - வயதில் 
முதியவர் என்றாலும், 
கருணையதைக் காட்டாத,
காரியவாதி இந்த மரணம்...

ஆறறிவு மனிதனென்றாலும், 
அதில் குறைந்த உயிரென்றாலும், 
இணையாய் எண்ணிடும்,
சிந்தாந்தவாதி இந்த மரணம்..

காசு பணத்திற்கும், 
கடவுளென்ற பெயருக்கும், 
பேய் பிசாசுக்கும், 
பெயரில்லா மிரட்டலுக்கும்,
உலவும் மிருகத்திற்கும், 
உயர்கொல்லி நோய்க்கும், 
பழிச்சொற்களுக்கும், 
பாவ புண்ணியங்களுக்கும், 
அஞ்சாத மனிதன் கூட, 
அஞ்சி தவிப்பது, 
மரணம் அதுக்குத்தான்....

கருவறையே கல்லறையாய், 
கையில் ஏந்தும் சிறுகுழந்தையாய்,
விளையாட்டுப் பிள்ளையாய், 
பருவம் வந்த இளைஞராய், 
மணம் முடித்த மனிதராய், 
மக்களைப் பெற்ற தலைவராய், 
வாழ்ந்து முடிந்த வயோதிகராய், 
வாழ்க்கையை முடிக்கிறது..
இந்த மரணம்...

வயிற்றுப் பசியில் சிலரை,
வாழ வழியின்றி சிலரை, 
நோய் நொடியில் சிலரை,
தாய் வயிற்றில் சிலரை, 
விபத்தென்று சிலரை, 
விதியென்று சிலரை, 
தற்கொலையென்று சிலரை, 
பெருங்கொலையென்று சிலரை, 
வஞ்சகத்தில் வீழ்த்தி சிலரை, 
வீரத்தின் விளைவாய்ச் சிலரை,
தயவு தாட்சண்யமின்றி, 
நேரம் காலமின்றி, 
விருப்பு வெறுப்பின்றி, 
கண்ணும் கருத்துமாய், 
கடமையைச் செய்கிறது,
மரணம்...

மரணம்...
வெறும் செய்தியாய் இருக்கிறது...
எங்கோ யாருக்கோ நடக்கும் போது...
அச்சச்சோ என்று பதறுகிறது..
அருகில் தெரிந்தவருக்கு நடக்கும்போது...
உடைந்து நொறுங்கிப் போகிறது...
இதயம் வென்றவருக்கு நடக்கும்போது..
உயிரே பிரிந்து போகிறது..
இல்லத்தின் உறவிற்கு நடக்கும் போது...

மரணம் என்பது என்னவோ ஒன்றுதான்...
மரணிப்பவரைப் பொறுத்தே வேறுபடுகிறது..
மரணம் தரும் உணர்வுகள்...

மண்ணில் உதித்ததெல்லாம்,
மரணித்தேயாக வேண்டுமென்ற,
மாபெரும் உண்மையை உணர்ந்தாலும், 
மனதுக்குப் பிடித்தவர்களின், 
மரணத்தை மட்டுமேனோ,
மனமேற்க மறுக்கிறது...
முரணாய்...

அன்று முதல் இன்று வரை,
அகிலத்தில் நடக்கிறது...
மரணத்திற்கெதிரான யுத்தம்..
அதில் வெல்வதென்னவோ, 
மரணம் மட்டும்தான்...

வெற்றிபெற்ற மனிதரென்றாலும்,
வெட்டியாயக் கழிக்கும் மனிதனென்றாலும், 
அனைத்துமறிந்த சித்தனென்றாலும்,
ஆசையில்லாப் புத்தனென்றாலும், 
முடிவிலிருப்பது மரணம்தான்.

விடைதேடியழையும் வாழ்வில்,
விடையில்லா புதிராய், 
விடைபெற்று விடுகிறது,
மரணம்....

உணர்ந்தவர் இருப்பதில்லை..
இருப்பவர் உணர்வதில்லை..
அதுவே மரணம்...
அந்த ஒற்றை வார்த்தைதான்...
வெட்டி சாய்க்கிறது,
மொத்த உலகத்தையும்...

ஆம்...
மரணம்..
முடிவாய் இருக்கும், 
ஒரு புரியாத புதிர்தான்..

✍️ கவிஞர் விஜயநேத்ரன் 
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வானுலாப் போகும் வெண்ணிலா

காற்றின் திசையில் கரையும் கால்முளைத்த நினைவுகள்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

அன்பென்னும் ஆலமரம்

கவிஞர் விஜயநேத்ரன்

இதயம் : வெற்றுச் சதையா?? பற்றின் விதையா??

கவிஞர் விஜயநேத்ரன்

மகளென்னும் தேவதைகள் : தந்தைக்குத் தாயாகும் மகள்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

காற்றின் திசையில் கரையும் கால்முளைத்த நினைவுகள்

கவிஞர் விஜயநேத்ரன்

வானுலாப் போகும் வெண்ணிலா