
வானுலாப் போகும் வெண்ணிலா
திங்களுக்கு அதிபதி சோமனாய்
திருவமுது ஊட்டும் அம்புலியாய்
தண்மை அளிக்கும் தண்ணவனாய்
தேவரின் பெயரில் தானவனாய்
இரவிற்கு ஒளிதரும் சுகுபராக
இளம்மாதவள் அழகு நிலவாய்
வடிவத்தில் தேய்ந்து பிறையாய்
வடுதனைச் சுமந்து களங்கனாய்
ஆலோன் அலவன் நிசாகரனாய்
ஆணாய்ப் பெண்ணாய் அஃதாய்
அத்துனைப் பெயரினை ஏற்றாய்
அதற்கொரு வடிவமும் பெற்றாய்
காரிருளுக்குக் காவல் நின்றாய்
காதலுக்குத் தூது சென்றாய் - முக்
கண்ணன் சிகையில் ஒளிர்ந்தாய்
முழுமதியாய் வானில் மிதந்தாய்!!!
கலைஞனுக்குக் காதலியானாய்
உழவனுக்கு உறுதுணையானாய்
பகலவன் ஒளியதைப் பெற்று
பாரிதற்கு வெளிச்சம் தந்தாய்!!!
காதல் வானில் வீதி உலா
காலமெல்லாம் போகின்றாய்..
கருப்பு வெள்ளை ஆடைமாற்றி
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்...
ஊரையெல்லாம் உறங்க வைத்து
யாரையிங்கு தேடுகின்றாய்...
ஊமைபோலத் தினம் மிதந்து
மௌனராகம் பாடுகின்றாய்...
மோகங்கொண்டு வானதனில்
மேகப்போர்வைப் போர்த்துகிறாய்..
தாகம் தீர்ந்து முடிந்த பின்னே
சோகம் கொண்டேன் தேய்கின்றாய்..
வானில் உலா போன உன்னை
வயல்கிணற்றில் மறைத்து வைத்து
நான் மகிழ்ந்த காலம் உண்டு
நாணி முகிலில் ஒளியும் போது.
தேய்ந்து நீயும் போகையிலே
தேமி நானும் அழுததுண்டு
வளர்ந்து வரும் வேளையிலே
வாஞ்சையோடு சிரித்ததுண்டு
வாழ்வும் தாழ்வும் வாழ்வில்
வந்து போகுமென உணர்ந்தேன்
வளர்பிறைத் தேய்பிறையாய்
வளர்ந்து நீயும் தேயும் போது..
நிலாச்சோறு கிடப்பில் போய்
நிலாவில் சோறு நடப்பில் வந்தும்
உலா போகும் உன் அழகில்
விழாதவர் மண்ணில் உண்டோ???
✍️ கவிஞர் விஜயநேத்ரன்