வீரத்தாலாட்டு : போரில் வீர சொர்க்கம் எய்திய தன்மகனுக்காகத் தாய் பாடும் பாட்டு
தாலாட்டு நான் பாட
தவழ்ந்து நீ வருவாயே
தவமகனே!!!
தாய் இன்று பாடுகிறேன்
தவம் கலைவாய்
என் மகனே!!!
செவ்விதழ் முத்தமதால்
செங்கரும்பும் இனித்ததில்லை
தலைமகனே!!!
செங்குருதி உடல் நனைக்க
செருக்களத்தை முத்தமிட்டாய்
செல்வ மகனே!!!
அழகிய வீடு கட்டி
அம்புலியை நீ அழைப்பாய்
அன்பு மகனே!!!
களிறுகள் புடைசூழ
களத்தினை ஆண்டாயே
கண்ணின் மகனே!!!
சிறுபறை மெல்லிசைக்க
சிறுதேர் உலா வருவாய்
செல்ல மகனே!!!
தேர்ப்படையைச் சிதறவிட்டு
துரோகிகளின் சிரமறுத்தாய்
வீர மகனே!!!
பாதி விளையாட்டோடு
தேடிக் களம் கண்டாய்
தெய்வ மகனே!!!
தந்தையும் தாய்மாமனும்
செருக்களத்தில் உயிர் துறக்க
சென்றாயே என் மகனே!!!
வாளொன்றைக் கரத்திலேந்தி
வீரத்தை நெஞ்சிலேந்தி
போர்க்களம் புகுந்தாயே!!!
நகைமுகம் மாறாது
பகைமேகம் தானறுத்தாய்
பாச மகனே!!!
கூரீட்டி சுழற்றி மாற்றான்
குருதியைச் சிந்த வைத்தாய்
குல மகனே!!!
சிறுவனென நினைத்த சீர்கெட்டோரை
சிரம் அறுத்து முன்நின்றாய்
வேங்கை மகனே!!!
எதிரிகள் மிரண்டோட
எம் மண்ணை நீ காத்தாய்
எந்தன் மகனே!!!
வெற்றியைத் தொடும் வேளை
வீரத்தில் சொர்க்கம் சென்றாய்
வெற்றி மகனே!!!
பெருமையை நீ சுமந்து
பிரிவொன்றை எனக்கீந்தாய்
ஏன் மகனே!!!!
களம் வென்றக் களிப்பினிலே
கண்ணுறங்கும் என் மகனே
கண் திறடா !!!
ஒரு முறை பார்ப்பாயா
கருசுமந்த தாய்முகத்தை
இருவிழி திறந்து !!!!
தாய்ப்பால் உனக்கூட்ட
தவமன்ன செய்தேனோ
தமிழ்மகனே!!!
நெடுங்காலம் உன் புகழை
வருங்காலம் வாழ்த்துமடா
நீ உறங்கு என் மகனே!!!
✍️ கவிஞர் விஜயநேத்ரன்