
என் மனதின் குரல் : உன் குரலுக்கு நான் அடிமை
குயிலோசை கேட்டிங்கு மயங்காதோர் யாரு.....
குழல் சேரும் காற்றுக்கு ஏங்காதோர் யாரு.....
குயிலேங்கும்.....
பூங்குழலேங்கும்....
உன் குரல் கேட்க தினம் உயிரேங்கும்..
உயிர்க் குழலுக்கு நான் அடிமை....
உந்தன் குரலுக்கு நான் அடிமை.....
புதிதென்று பூவுலகில் ஆயிரங்கள் உண்டு...
இனிதென்று இவ்வுலகில் ஆயிரங்கள் உண்டு...
கனியென்று பாயிரங்கள் ஆயிரங்கள் உண்டு....
அரிதென்று சொல்கின்ற சில நூறும் உண்டு....
அதில் பெரிதென்று எண்ணுகின்ற ஒன்றிரண்டும் உண்டு.....
அழியாத காயங்கள் ஆயிரங்கள் உண்டு...
அது மனதிற்குள் உண்டாக்கும் வலியென்ற ஒன்று
அந்த தனிமைக்குள் நான் சேர்ந்த காலங்கள் உண்டு..
அதைப்போக்க நீ வந்தாய் எனக்காக அன்று....
உன் குரல் கேட்டு மகிழ்கின்றேன் உள்ளத்தால் இன்றும்... ....
உன் குரலால்...
உண்மையாய் சிரிக்க வைத்தாய்....
உயர்வாய் சிந்திக்க வைத்தாய்...
உலகினை ரசிக்க வைத்தாய்....
அன்பினைப் புரிய வைத்தாய்....
அதன் அழகினை உணர வைத்தாய்....
புத்தியை சிலிர்க்க வைத்தாய்...
புதுமையைப் படைக்க வைத்தாய்...
இழந்த பல உறவுகளுக்கு உயிர் தந்தாய்
மறந்த பல நினைவுகளைப் பயிர் செய்தாய்....
சிறந்த என்னை மீட்டெடுத்து
மீண்டும் எனக்கே பரிசளித்தாய்...
கற்கண்டு இனிப்பென்றும்
கழைச்சாறு இனிப்பென்றும்
கதைகதையாய் சொல்ல மாட்டேன்...
நம்பிக்கை தருகின்ற குரலொன்று போதும்..
என் வாழ்வை இனிதாக்க....
எந்நாளும் இனிப்பாக்க...
அது உன் குரல் தான் ......
அந்தக் குரலுக்கு நான் அடிமை...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்