
என் காதலே.....
தையல் நீ பார்த்த நொடியில்
மையல் கொண்ட காதல் புயல்
காதலழுத்தத் தாழ்வுநிலையாய்
கண்களுக்குள் நிலைகொண்டது
இருவிழிகள் நேர் பார்க்க
இமைக்கும் நேரத்திற்குள்
வேதியியல் மாற்றங்கள்
வேகமாய் நடக்க
இயற்பியல் மாற்றத்தில்
இதயம் இடம் மாற
உயிரியல் மாற்றத்தால்
உருவானது நம் காதல்.…
கண்ணில் சரம் தொடுத்தால்
கர்ணனும் வீழ்ந்திடுவான்
நாணேற்றி நீ பார்க்க
நான் மட்டும் என் செய்வேன்...
ஆடிக் காத்துலயும்
அசையாமல் நின்றேனே
அசைந்து நீ எதிர் வரவே
ஆடித் தான் போனேன் நான்
நரம்புக்குள் உன் நினைவு
நாளும் பெருகுதடி
நாளமில்லா சுரப்பிகூட
நாணத்தை சுரக்குதடி
நியுட்டன் விதி எல்லாம்
நித்தம் தோன்றுதடி
நீ போன வழித்தடத்தை
என் கால்கள் தேடுதடி
எலக்ட்ரானும் நியுட்ரானும்
என் உடம்பில் பாயுதடி
எல்லா திசைகளிலும்
உன் முகமே தெரியுதடி
பங்குனி வெயில் கூட
பனித்துளிகள் சிந்துதடி
சித்திரைப் பௌர்ணமியாய்
சிந்தைக்குள் தோன்றுதடி
பாதையில் நீ தெரிந்தால்
பகலிரவு மறக்குதடி
பார்வையில் நீ மறைந்தால்
பாவி மனம் துடிக்குதடி
கடல் போன்றக் கூட்டத்திலும்
கண்கள் உன்னைத் தேடுதடி
காற்றும் உன் வரவையென்
காதில் மட்டும் பாடுதடி
வாய்மொழியும் உன்னெதிரே
வாயடைத்து நிற்குதடி
தாய்மொழியும் சிலநேரம்
தடுமாறிப் போகுதடி
வார்த்தை "களை" எடுத்து
வண்ணத் தமிழ் சொல்லெடுத்தேன்
இதயத்தின் எண்ணங்களை
இருவிழியில் மறைத்து வைத்தேன்
இருவிழியில் உள்ளதெல்லாம்
இதழ்வழியே சொல்ல வந்தேன்
கனவுகளைச் சுமந்துகொண்டு
காதலுடன் பூத்திருந்தேன்
கதிரவள் உன் வரவையெண்ணி
கமலமெனக் காத்திருந்தேன்
காதலே உனைக் கண்டு
காதலைச் சொல்ல வந்தேன்….
✍ கவிஞர் விஜயநேத்ரன்