உழவுக்குத் துணைநிற்போம் உழவர்க்குத் தோள் கொடுப்போம் - தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
அன்னத்தை அகிலத்திற்கு
அள்ளித்தினம் தந்து
ஆக்கத்தை உண்டாக்கும்
அவனித் திருநாளாம்.!
இல்லத்தைக் களிப்பூட்டி
இருப்பதைப் பகிர்ந்தளித்து
ஈரத்தை மனதில் விதைத்து
ஈகைக்கு உகந்த நாளாம்.!
உள்ளத்தை விதையாக்கி
உருபசியில் நெல்லாக்கி
ஊக்கத்தை மனதிற்கொண்டு
உணவிடும் பெருநாளாம்.!
எண்ணத்தை சுமப்பதினால்
என்றும் உழைக்குமவன்
ஏற்றத்தைக் கண்டதில்லை
ஏக்கத்தைத் தொலைத்ததில்லை!
ஐயத்தை வாழ்வில் கொண்டும்
அவன் மட்டும் உண்ணாது
ஒழுக்கத்தை நெஞ்சில் வைத்து
ஊருக்கே உணவைக் கொடுத்து,
ஔவையின் மொழிப்படியே
அன்றாடம் நடக்கின்ற
ஒப்பற்ற வாழ்வுதனை
ஒவியமாய் வாழ்ந்தாலும்
காவியத்தில் நின்றதில்லை
கண்ணிருந்தும் கண்டதில்லை
கனியுழவன் வாழ்வதுவே!!!
இனிப்பான செங்கரும்பை
இவன்தான் விளைவித்தான்
இனிக்கவில்லை இவன்வாழ்வு
இருந்தாலும் உழைக்கின்றான்!
திங்கள் மூன்றிற்கும்
தினந்தோறும் நீர்விட்டு
மங்கல மஞ்சளையும்
மனதாரத் தருகின்றான்!
ஊருக்கு உணவிட்டு
தன் பசியை மறக்கின்ற
உழவன் அவன்கூட
ஒருவிதத்தில் அன்னைதான்...
உரக்கக் குரல் கொடுப்போம்
உழவுக்குத் துணை நிற்போம்.
உணவைத் தொடும்போது
உழவனுக்கு நன்றி சொல்வோம்
தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
வாழ்த்துகளுடன்,
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்