தெருவோரம் தேவதைதான் - வாயில்லா ஜீவனின் வாய்மொழி .....
அடை மழைக் காலத்தின்
அந்தி சாயும் நேரம்..
கரைபுரண்ட வெள்ளத்தில்
கடல் போன்ற மாயம்..
போகின்ற வழியெல்லாம்
புனல் நிறைந்து ஓடி,
தாழ்வான இடமெல்லாம்
தண்ணீர்தான் தஞ்சம்...
ஆறாகப் பெருக்கெடுத்து
அங்கங்கே பயணம்..
உருவானப் பள்ளத்தில்,
நிறைவான சயனம்...
காற்றோடு நீரையள்ளி
கடப்போரின் மீதடித்து,
ஊற்றெடுத்த தண்ணீரில்
ஊர்கின்ற வாகனங்கள்..
அடைமழை பெய்தாலும்
குடைபிடித்து ஊர்வலங்கள்,
நடைபாதை மறைந்தாலும்
நடக்கின்ற ஊர்வனங்கள்..
அங்கிருந்த மணல்திட்டில்
அன்னையில்லா மழலையென
விழுமழையில் உடல்நனைய
விழித்தபடி நின்றதந்த நாய்க்குட்டி...
கண்ணெதிரில் நீருயர,
கடுங்குளிரோ உடல்நடுக்க,
வயிற்றுக்குள் பசிபெருகி,
வார்த்தையின்றி விழிதுடிக்க,
கருணையதை எதிர்பார்த்து
கனமழையில் காத்திருந்த
அழத்தெரியா நாய்க்குட்டி
அழுதது உள்ளுக்குள்ளே..
கவனிக்க நேரமில்லை...
கடந்து சென்ற பலருக்கும்...
காவந்திட மனமில்லை...
கவனித்த சிலருக்கும்...
குடை வருமோ நிழல் தருமோ??
குழி தாண்டி நீர் வருமோவென
எண்ணத்தில் நினைத்தபடி
ஏக்கத்தில் துடித்தபடி...
நனைத்த துளிகளால்
நடுங்கிய நாய்க்குட்டி,
நினைத்தது என்னவோ
நினைவறியா மனதிற்குள்ளே...
கபடமில்லா வேண்டுதலில்
கடவுளும் செவிசாய்க்க,
விதியறியா நாயதற்கு
விடிவொன்று புலர்ந்தது...
கரம் ரெண்டு நீண்டது
கழுத்தோரம் பூண்டது..
அன்போடு அணைத்தது.
அதன் ஈரம் துடைத்தது..
தோளோடு சாய்ந்ததில்
துயரங்கள் பறந்தது..
நுதல் மீது முத்தமிட
புதுசொந்தம் பிறந்தது..
அழுக்கு உடைக்குள்ளே
அழகாய் ஒளிர்ந்தங்கு,
வெள்ளை உள்ளமது..
விழிமுன்பு தெரிந்தது
வீதியிலே தேவதைதான்....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்