கார்த்திகை திருநாள் : இறை தேடும் திருநாளின் இதிகாச வரலாறு
கார்மேகம் கருக்கூடிப் பொழிந்து
செங்காந்தள் மண்மீது மலர்ந்து
வரப்பெல்லாம் நீராகி நனைந்து
வயலெல்லாம் சேராகி நிறைந்து
கீழ்வானில் வீண்மீன்கள் தோன்ற
திருக்கார்த்திகை மாதமது ஒளிரும்..
வீட்டோடு தெருவெங்கும் விளக்கெரியும்..
விழாப்போல ஊரெங்கும் ஒளிபெருகும்..
வாழையோடு தென்னங்கீற்று தோரணங்கள்
வனப்புடனே ஆலயத்தை எழிலாக்கும்...
சொக்கப்பனை ஏற்றியதை வணங்கிடுவோம்!!
சொக்கனையே பிழம்பாக நினைந்திடுவோம்!!?
கந்தனுக்கு உகந்ததென்று போற்றிடுவோம்!!!!
கார்த்திகைச் செல்வன் பாதம் பணிந்திடுவோம்!!!......
இதிகாச கதையொன்று இதற்குமுண்டு,
இதையுணர்ந்தால் மறுமைக்கும் நன்மையுண்டு.
படைப்பவனோ பெரிதென்று பலம் காட்ட,
காப்பவனோ உயர்வென்று கரம் உயர்த்த,
இவ்வுலகை இருப்பதிலே யார் பெரிதென்று,
இருவருக்குள் பிணக்கொன்று பிறந்ததன்று..
படைப்பவனும் காப்பவனும் வாதிடவே
அழிப்பவனை அழைத்தனரே தீர்ப்பிடவே..
வாதிட வந்தவரின் செருக்குடைக்க,
சோதியாக வடிவெடுத்த ஈசனவன்,
அடியெது முடியெது அதைக்கண்டு,
விடையதை தருபவனே பெரியவனாய்
விளித்திடுவேன் நான் உமக்கு பதிலென்று
விடமுண்ட சடையனவன் உரைத்திடவே
விடைதேட முயன்றனர் இருவருமே!!!!
வையத்தைத் தோண்டியே புறப்பட்டான்,
வராகமாய் உருக்கொண்டு வாமனனும்...
வாழ்வினைப் படைக்கின்ற பிரம்மனவன்
வானுயர்ந்த முடிதேடிப் பயணிக்க,
அடிதேடிச் சென்றவனோ விடையின்றி
அகம்பாவம் அதனையங்கு விட்டொழித்து,
முக்கண்ணன் பாதமதைச் சரணடைந்தான்..
முக்தியதைக் கண்ட அந்த பக்தியோடு...
முடிதேடிச் சென்றவனோ முறைதவறி,
முடியதைக் கண்டதாய் பொய்யுரைத்து,
ஆழ்மனதில் அழுக்குடனே வாதிட்டான்,
கீழ்விழுந்த கமலமதைச் சாட்சியாக்கி..
சாட்சியான கமலம் சங்கரனும் வெறுத்தொதுக்க,
மாட்சியான பிரம்மனவன் மாண்பிழந்தான்,
மண்ணிதிலே ஆலயத்தை தானிழந்தான்..
சோதிவடிவானவனே ஆதியென்று
சோதனையால் உணர்ந்த அந்தயிருவருமே,
மாதவத்தின் பலனதனை எப்பொழுதும்,
மக்களுக்கும் அருளிடவே வேண்டிடவே,
வரமளித்தான் ஈசனவன் இருவருக்கும்
வாழ்வெல்லாம் சோதியென அருள்தரவே!!!
அருளளிக்கும் சோதி உருவெடுத்து,
அண்ணாமலை மீது வடிவெடுக்கும்,
பொன்னாளே இந்நாளில் அந்நாளாம்...
பெருவுடையான் ஈசனவன் திருநாளாம்...
கார்த்திகை விளக்கேற்றும் நன்னாளாம்..
திருவுடன் அலைமகளும் அருள்கின்ற பெருநாளில்
தீபத்தை ஏற்றிடுவோம் இல்லத்தில்....
உருத்திரன் அருளதனைப் பெற்றிடுவோம்...
உள்ளத்தில் மகிழ்வினால் நிரப்பிடுவோம்.....
இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள்...