
ஆடையின்றி திரிந்த போதும்
ஆசையின்றி திரிந்ததனால்
இயற்கையை ஆடையாக
இனிதே அணிந்திருந்தோம்
வீணாகும் குச்சிகளை
விறகாய் நாம் பொறுக்கி
தீஞ்சுவை உணவு சமைக்க
தீயதற்குப் பலியிட்டோம்
பட்டை இலைகளையே
பக்குவமாய்ப் பதப்படுத்தி
புதிய ஆடை செய்தோம்
புது வாழ்வு நாம் பெற்றோம்.
நிர்வாண வாழ்க்கையிலே
நின் மானம் காத்தவளை
விஞ்ஞானப் பெயரைச்சொல்லி
நிர்வாணம் ஆக்கிவிட்டோம்.
கண்ணில் பட்ட மரங்களை
கழுமரமாய் மாற்றிட்டோம்.
சாலை பல அமைத்திடவே
சோலை பல அழித்திட்டோம்.
காக்கை குருவி விலங்கினத்தை
காலி செய்து அனுப்பிவிட்டு
அலைபேசி கோபுரத்தை
அடிக்கொன்றாய் நட்டுவைத்தோம்
தாய் பூமி மானம் காத்த
தாவர இனத்தை எல்லாம்
தினம் ஒன்றாய் துகிலுரித்து
திறந்தவெளி ஆக்கிவிட்டோம்
மானத்துடன் நாம் வாழ
மரங்களையே அழித்திட்டோம்
மானபங்கம் தினம் செய்து
மரங்களாய் நிற்கின்றோம்
இயற்கையில் விளைந்து நின்ற
இதயமுள்ள வனம் சாய்த்து
மனிதமற்ற மரங்களாக நாம்
மறுவி நிற்கின்றோம் தனித்தனியாய்!!!!!
✍ கவிஞர் விஜயநேத்ரன்.