பேருந்துப்பயணம் : வாழ்க்கைத் தத்துவத்தை அள்ளித் தெளிக்கும் அமுதசுரபி
எதிர்பாரா திருப்பங்களையும்,
எதிர்பார்க்கும் மாற்றங்களையும்,
எதிர்கொள்வதென்னவோ,
பேருந்துப் பயணங்களில்தான்...
அறியாத ஞானமெல்லாம்
அங்கேதான் கற்றிடலாம்...
தெரியாத விடயமெல்லாம்,
திரைகடலாய்ப் பார்த்திடலாம்...
வேற்றுமையில் ஒற்றுமையை
வழிநெடுகில் கண்டிடலாம்...
வியப்பையும், வெறுப்பையும்
ஒன்றாக பெற்றிடலாம்...
இயற்கையில் அழகெல்லாம்
இருவிழியில் ரசித்திடலாம்...
இதயத்தின் ஓரங்களில்,
காட்சியாய்ப் பதித்திடலாம்...
அமரும் இடமதனால்,
அனுபவங்கள் மாறிடலாம்...
தொடரும் பயணத்தில்,
வினாவிடை தொடர்ந்திடலாம்...
ஏறி இறங்கும்போது,
மாற்றங்கள் அது தரலாம்...
இடையிடையே பயணத்தில்,
ஏமாற்றங்களும் துணை வரலாம்..
பயணங்கள் பலவகைதான்..
பயணிகளும் பலவகைதான்..
மனதில் நிற்கின்ற
மாபெரும் காவியம் தான்...
அடித்துப் பிடித்து இடம்பிடிப்போம்,
அவசரப் பயணங்களில்..
மனித மூட்டைகளாகப் பயணிப்போம்
மூச்சுத்திணறி நெரிசலில்...
படிகளில் நின்றே பயணிப்போம்,
இருக்கை காலியாக இருந்தும்....
முகநூல் பதிவுகளாய் மகிழ்வோம்,
ஜன்னலோர இருக்கையில்...
கால்கடுக்க நின்றிருந்து,
களைப்பில் அமரும் போது,
கண்ணால் இடம் கேட்பார்,
கர்ப்பிணி பெண்ணும்,
வயோதிக முதியவரும்...
மறுக்க முடியாமல்,
அமரவும் முடியாமல்,
ஆழ்மனது மறுதலிக்கும்...
அடுத்த நொடி இடம் கொடுக்கும்....
பருவமழை பொழுதொன்றில்,
பார்த்து இடம்பிடித்த,
ஜன்னலோர இருக்கையிலே,
சாய்ந்து அமரும்போது,
காதருகில் குரல் கேட்கும்...
" தம்பி கொஞ்சம் மாறி உட்கார முடியுமா"...
காதல் தோல்வியைப் போல்,
கனத்த மனதுடனே,
வேறொரு இருக்கைக்கு,
விருப்பமின்றி எழுந்திடுவோம்...
அந்தவொரு இருக்கையிலும்,
அரைபாதி இடம் தாண்டி,
தன்னுடம்பால் பட்டாப்போட்டு,
தனவந்தராய் அமர்ந்திருப்பார்...
குண்டான நபரொருவர்...
நம்மைக் கண்டதுமே,
நகர்வது போல் பாசாங்காய்,
நடிப்பினை வழங்கிவிட்டு,
அப்படியே இருக்குமவரைக் கண்டு,
உள்ளுக்குள் கோபம் எழும் உள்ளமெல்லாம் பொங்கி வரும்..
வேறு வழியின்றி,
வேதனையில் அமர்ந்திடுவோம்...
கால்பகுதி இருக்கையிலே,
கடுப்புடனே தொடர்ந்திடுவோம்...
தொலைதூரப் பயணத்தில்,
தோள்மீது சாய்ந்திடுவர்..
நம் தூக்கத்தைப் பறித்திடுவர்...
இதுபோல சம்பவங்கள்,
ஏராளம் இருந்தாலும்,
ஒரு சில பயணங்கள்,
நெஞ்சுக்குள் குடியிருக்கும்...
நினைவாக துளிர்த்திருக்கும்...
அழியாத கோலமென
ஆழ்மனதில் இடம் பிடிக்கும்...
காலங்கள் கடந்தாலும்,
கண்ணுள்ளே உயிர்த்திருக்கும்....
மண்ணில் உள்ளவரை,
மனதில் நின்றந்த,
பயணங்கள் முடிவதில்லை....
உங்கள்,
கவிஞர் விஜயநேத்ரன்