வண்ணத்துப் பூச்சியெனும் வாழ்க்கைக் கவிதை
வானவில்லின் நிறமெடுத்து
வண்ணப்பூவில் தேனெடுத்து
வான்வெளியில் வழியமைத்து
காற்றிற்கு விசிறி விட்டு
காட்சி தினம் தருகின்றாய்..
காண்போர் மனம் வெல்கிறாய்...
அறுவருக்கும் கம்பளிபூச்சியிலிருந்து
அழகான பட்டாம் பூச்சியாய்
முழுமை அடைந்தாய் நீ
முயற்சியைத் தினம்
முத்தமிட்டதால்...
உந்தன்
உண்ணும் நோன்பிற்காக
உறங்காமல் தவத்தில்
உன் ஸ்பரிசம் பட
புதிதாய்ப் பூத்தனர்
பூவையர் பலர் தினமும் ...
காதலன் கரம்பட்ட
காதலியாய்...
நாணி மலர்கிறது
பூக்களெல்லாம்..
உன் தொடுதலில்..
வண்ணவண்ணப் பூக்களிலுன்
எண்ணம் போல தேன்குடித்து
வானம் நோக்கி பறக்கின்றாய்
வானவில்லாய் நீ மாறி....
மலர் மது உண்ட மயக்கத்தில்
மயங்கி நீ கிடப்பதில்லை
பலர் உன்னை ரசித்தபோதும்
பாதை நீ மறப்பதில்லை.
மாதம் பல ஓடினாலும்
மலர்கள் பல மாறினாலும்
மையல் மட்டும் மாறவில்லை - உன்
மலர்மயக்கம் தீரவில்லை...
ரவிவர்மன் ஓவியமும் உன்னை
ரசிக்காமல் இருப்பதில்லை
பிகாசோ ஓவியமும் உனைப்
பார்க்க மறப்பதில்லை.
தன் பெருமை குறையுமென
உன்னருகில் வருவதில்லை.
உலகின் அழகியென்ற
தற்பெருமை உனக்குமில்லை.
வானம் அதில் பறந்து புது
வழிகள் பல நீ படைத்தாய்
சிறகை மெல்ல விரித்து
சிகரத்தை நீ அடைந்தாய்.
உன்னைப் பார்த்த ஓவியன்
வியந்து போகிறான்..
இப்படி ஓர் ஓவியத்தை
தன்னால் படைக்கமுடியாததால்..
கருப்புவெள்ளையில் தொடங்கி,
கவர்ந்திழுக்கும் வண்ணம் வரை,
எப்படி சேர்க்கிறாய் உன் சிறகுகளில்
வண்ணக்கலவைகளை...
கற்பனைக்கு எட்டாத
நிறத்தையெல்லாம்
விற்பனை செய்கிறாய்
இயற்கைக்கு..
இயற்கையின் படைப்பில்
நீ ஓர் அதிசயமாய்...
இயல்பான நிறத்தால்
நீ ஓர் அழகியமாய்...
உள்ளத்தால் யாருக்கும்
ஊறொன்று நினைக்காத,
நல்லெண்ணத்தின் சிறப்பாலே..
தோற்றத்தில் அழகானாய்...
மாற்றத்தால் அரிதானாய்...
எண்ணத்தின் மேன்மைதனை
எடுத்துச் சொல்லும் நீ கூட....
வண்ணத்துப்பூச்சியென்ற
வாழ்க்கைக் கவிதைதானே...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்