இல்லையென்று சொல்லாத இயற்கையென்னும் ஆசிரியன் - ஆசிரியர் தினக் கவிதை
இவ்வுலகில் ஏதுமில்லை...
இயற்கையை விட சிறந்த ஆசான்...
அறத்தோடு நாம் வாழ்ந்தால்,
அரவணைத்து அன்பு தரும்...
அறிநெறி தவறிநின்றால்,
சினங்கொண்டு சீறியெழும்...
தானுயர்ந்தோரென்றாலும்,
தன் நெறியில் மாறாது...
தாழ்ந்தவரென்றாலும்,
தன் தரத்தில் பிறழாது..
பாகுபாடு ஏதுமின்றி,
பாரதனைப் பார்த்திடும்...
நாடி வருவோர்க்கு,
நன்மைகளைப் பொழிந்திடும்..
ஓடி உழைப்போர்க்கு,
உயர்வினை நல்கிடும்...
பெற்றவளைப் போலெண்ணி,
போற்றிப் பாதுகாக்கும்...
கொடுஞ்செயல் தினம் செய்து,
புறந்தள்ளி செல்வோர்க்கு,
கொற்றவையாய்த் தண்டனையை,
கொடுத்திடவும் மறக்காது..
சிந்தனைக்கு ஒத்திங்கு,
சிகரங்களைக் காட்டிடுமே...
அமுதசுரபியது அள்ளிவழங்கிடுமே
அறிவதனைத் தேடுவோர்க்கு..
கற்றுக்கொள்ளும் மனமிருந்தால்,
பெற்றதெல்லாம் கற்றுத்தரும்...
கற்றிடவே மறுத்தாலும்,
கற்றுத்தரும் வாழ்வினையே..
பார்வையில் படுவதெல்லாம்
பாடங்கள் சொல்லிடுமே...
செவியினில் ஒலியெனவே,
செல்லும் வழி சொல்லிடுமே...
எடுத்து வைக்கும் அடிதோறும்,
ஏதோவொன்றை உணர்த்திடுமே...
சரியெது தவறெது
நெறியதை அறிந்து நாமும்,
நல்வழி சென்றாலே,
நலமதனைப் பெற்றிடலாம்...
ஆம்...
இவ்வுலகில் ஏதுமில்லை...
இயற்கையை விட சிறந்த ஆசான்...
இயற்கையைக் கற்றிடுங்கள்...
இதயத்தால் வாழ்ந்திடுங்கள்....
வாழ்த்துக்களுடன்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்.