மாவீரன் துரியோதனன் : கலிபுருஷனின் மறுபக்கம்
செஞ்சடை தரித்தவன் அருள் வழங்கிட
தன்விழி மறைத்தவள் கருவில் சுமந்திட -அவள்
சிறு உலக்கையில் உருக் கலைத்திட
உருவெடுத்தது வெறும் சதைப் பிண்டமே!!
விதியால் பிறப்பெடுத்த சதைப்பிண்டமதை,
வியாசன் பிரித்தெடுத்து விதைப்பித்தானதை;
நூறோடு ஒன்று சேர்த்து நூற்றி ஒன்றெனவே
நெய்யிட்டு அடைத்தான் நெடுங்குடுவைக்குள் அதை;
தனிக் குடுவைக்குள் உருவெடுத்தவன்;
கலி வடிவெனவே பெயரெடுத்தவன்;
ஈசன் அருளினால் பிறந்த புதல்வன்;
ஈரைம்பது பேரில் இவனே முதல்வன்;
கதையது சுழன்றிட கடும்போர் புரிந்திடும்
மின்னல் மேனியன் மிகப்பெரும் வீரன்
பலராமனின் சீடன் பலத்தில் சிறந்தவன்;
அரவக் கொடியோன் அம்புலி வம்சனவன்;
விரோதம் வளர்த்து வென்றிட முயன்றவன்;
கொள்கை மாறாக் கௌரவர்த் தலைவன்;
கொடையில் சிவந்த கர்ணனின் நண்பன் ;
கொண்ட நட்பதனால் உயர்ந்த சூயோதனனே!!!
பிறந்தவன் வளர்ந்தான் வளர்ந்தவன் சிறந்தான்;
தம்பியர் துணையோடு தனியதிகாரம் புரிந்தான்;
வஞ்சனைப் புத்தியுள்ள காந்தார சகுனியவன்;
பிஞ்சாய் இருந்தவனில் நஞ்சை ஏற்றிவிட்டான்;
பகடை உருட்டியவன் பகையை உருவாக்கி,
பசுத்தோல் போர்த்தியங்கு பாசாங்குதான் செய்தான்;
பாண்டவர் ஐவரையும் பரம வைரியென்றான்;
ஆண்டிடும் அரியணைக்கு நீயே வாரிசென்றான்;
மாமனின் மகுடியில் மதிமயங்கி நின்றான்
மற்றவர் மொழிதனை மதியாது எதிர்நின்றான்
அரியணை ஏறியே அரசனாய் அலங்கரித்தான்
மரியாதை இழந்ததால் பாண்டவரை அவமதித்தான்.
கந்தர்வ யுத்தத்தில் காத்து நின்றதால்
காண்டீபனுக்கோர் வரம் கொடுத்தவன்;
குந்தியின் புதல்வர் ஐவரை அழித்திடும்
கங்கை மைந்தர் சரத்தினை அளித்தவன்;
கர்ணன் நட்பால் காலத்தால் வாழ்பவன்
கண்ணன் மதியினால் களத்தில் வீழ்ந்தவன்
விரிகோதன் கதையினை வஞ்சத்தில் ஏற்றவன்
விதியென்ற பெயரிலே வாழ்க்கையை இழந்தவன்
மாதவன் கொடுத்த விருப்பத்திலும்
மாபெரும் பீமனொருவனையே பாண்டவருள்
களத்தினில் எதிர்த்திட தேர்ந்தெடுத்தவன்;
படைகள் சிதைந்து பலத்தை இழந்தாலும்,
தொடைகள் உடைந்து வீழ்ந்த போதும்,
தோல்வியை மனதால் ஏற்க மறுத்தவன்..
நன்மகனாய்த் தந்தையைக் காத்து நின்றவன்
தன்னிளவல் மனங்களை வென்று நிறைந்தவன்
நல்லரசன் என்றே நற்பெயரை எடுத்தவன்
நாளும் அதற்கெனவே புது உருவெடுத்தவன்
தனியனாய் யுத்தத்தில் துணிந்து நின்றவன்
தனக்கிது போதும் என்றங்கு உரைத்தவன்
கர்ணனை இழந்ததும் கலங்கி நின்றவன்
அக்கணமே நட்பில் உயர்ந்து நின்றவன்
அரசனாகும் ஆசையைத் துறந்து நின்றவன்
அனைத்தும் இங்கே மாயை என்றவன்
தமையனாய்த் தோழனாய் அவனைப்
தரணியிலவனை ஈன்றோர்க்கு நன்மகனாய்
போர்க்களத்தினில் வீழ்ந்திடா எதிரியாய்
வாழ்ந்து வீழ்ந்தவன் விரைந்தான் சொர்க்கத்திற்கே...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்