மகாபாரதம் : அம்பையின் சபதம்
கங்கை கரைபுரண்டோடும் - அதன்
கரையினிலெழுந்ததே காசி;
மங்கலம் சூழ்ந்திட ஆளும் - மன்னன்
மகள்கள் உடனவன் பேசி;
சுயம்வர மொன்றினை நடத்த- அவனே
சுபமாய் அனுப்பினான் ஓலை..
நங்கையர் மூவரும் உருவில் - நற்
சிலையாய் இருந்தனர் அழகில்;
கொங்கையர் அம்பா, அம்பிகா - அவருக்கு
இளவலாய் அம்பாலிகா வயதில்;
மங்கையர் மூவரும் வந்தனர் - மண
மாலைகள் சூடிடும் சபையில்...
அனுப்பிய ஓலையில் ஒன்று - உயர்
அஸ்தினாபுரம் வந்ததைத் கண்டு;
மனதினால் பீஷ்மத்தைக் கொன்று - மணம்
புரிந்திடா விடுமரை வேண்டும்;
விதியொன்று முளைத்தது புதிதாய் - அங்கு
சத்யவதி வடிவாய்ப் சதியாய்;
வீரியம் அற்றவன் தரித்திரமாய் - பெயரில்
விசித்திர வீரியன் தரித்திரமாய்;
அற்பமகன் அவனுக்காக ஆணையிட்டாள் - பெண்ணை
அபகரித்து வரச்சொல்லி ஏவிவிட்டாள்;
அரியணைக் காவலனும் புறப்பட்டான் - அது
அதர்மம் என்றறிந்தும் தலைப்பட்டான்.
வந்தவன் தொடுத்தான் சரம் - அதில்
கவிழ்ந்தது அங்கிருந்தோர் சிரம்;
வென்றவன் பிடிக்காது கரம் - அவரைத்
தம்பிக்கு செய்தான் மணம் - அதைக்
கண்டவள் எதிர்த்து நின்றாள் - நெஞ்சில்
சால்வனை நினைத்த அம்பை - தன்
காதலைச் சபையினில் சொன்னாள்- அந்தக்
காதலைத் தேடியே சென்றாள்.
கங்கையின் மகனிடம் தோற்றதால் - அந்தக்
கலக்கத்தை நெஞ்சனில் ஏற்றதால்,
அம்பையின் காதலை மறுத்தான் - சால்வன்
அவளையும் ஏற்கவே வெறுத்தான்;
காதலை இழந்தாள் உள்ளத்தில் - அவள்
கடுந்தீயினை உணர்ந்தாள் உள்ளுக்குள்;
கவர்ந்தனைக் காண விரைந்தாள் - பெரும்
நிபந்தனை அம்பையவள் விதித்தாள்;
மங்கையர் எவரையும் தீண்டா - அரும்
பீஷ்மனை மணந்திட வேண்ட - அவன்
சங்கல்பம் செய்ததை மொழிந்தான் - அந்த
சங்கடம் தீர்த்திடத் துடித்தான் - அவள்
தங்கையர் இருவரைப் போல - தன்
தம்பியை மணந்திட உரைத்தான்..
கங்கைமகனின் சொல்லை - மறுத்தாள்
காததனில் ஏற்றிட அம்பை ;
கடும்பகையினைச் சுமந்தவள் - மாற்றான் கூட்டத்தைச் அழைத்தாள் அம்பாய்;
துணிந்து எதிர்த்திடெவரும் இல்லை - என்ற
துயரொன்றையே அடைந்தாள் மனதில்;
வருந்தி வந்தாள் மீண்டும் - முடிவாய்
வழியொன்றைக் கேட்டுப் பதிலாய் ;
அரசர் பலரினைக் கொன்று - பெரும்
அதர்மம் அழித்த மாயோன்;
பரசினை ஏந்திடும் ராமரவர் - திருப்
பாதம் பணிந்திட பணித்து
தேவி அம்பை அவளுக்குயர் - வழியைத்
தேவவிரதன் அவனே மொழிந்தான்.
பகையை வென்றிட அலைந்து - அம்பை
பரசுராமரின் பாதத்தை அடைந்தாள்;
நிலையதை முழுதாய் உணர்ந்து - அவளை
மணந்திட விடுமனைப் பணித்தார்;
தவவாழ்வினை ஏற்றேன் இனிநான் - வாழ்வில்
மணவாழ்வினை மனதில் நினையேன்;
குரு சொல்லே பெரிது என்பேன் - செங்
குருதி சிந்தியும் மடிவேனென்றே
பாவையை ஏற்றிட மறுத்து - இராமர்
பரசினை எதிர்த்திடத் துணிந்தான் ;
தேரேறி வந்தான் விடுமன் - குருவை
தேரேற வேண்டியே பணிந்தான்;
பூமியேத் தேராய் வடிவில் - நான்கு
பொன்மறையும் இழுத்தது பரியாய்;
போற்றிடும் உபநிசக் கடிவாளம் - அதை
புயலாய் இயக்கினான் வாயுதேவன்;
துதித்திடும் தேவியர்க் கவசமாய் - அவரை
காத்திடும் காட்சியைக் காட்டினார்;
வணங்கிடும் காட்சியைக் கண்டவன் - குருவை
வணங்கியே எதிர்த்து நின்றனன்;
அஞ்சினர் அனைவரும் பாரினில் - யுத்தத்தில்
அந்த ராமரும் சீடனும் மோதவே;
நெஞ்சினில் வஞ்சத்தை ஏற்றவள் - அந்த
நெருப்பையே உள்ளுக்குள் சுமந்தவள்;
இலவினைக் காத்திடும் கிளியென - பீஷ்மன்
முடிவினைக் காணவே காத்திருந்தாள்;
விடைபெறாது தொடர்ந்தது யுத்தம் - அங்கு
இடையிறாது இருபத்தி மூன்றாம் நாளும்;
முடிவுறாமல் நடந்த யுத்தமதை - மனதில்
முடித்திடும் எண்ணங் கொண்டான்;
தூங்கு கணையதை எடுத்து - அவர்மேல்
தொடுத்திட பீஷ்மனும் முயன்றான்;
அக்கணை அவர்மேல் தொடுப்பின் - குருமேல்
அக்கறைப் படிந்து அவமானம் சூழும் - என
அக்கரையாய் அசரிரீயாய் பலருரைக்க - இருவரும்
அக்கணமே முடித்தனர் யுத்தத்தை.
சமத்கனி முனிவனின் அருள் பெற்றது - அந்த
அடைமழை யுத்தமும் முடிவுற்றது;
குருமகன் வீரம் புகழ் பெற்றது - வானவர்
அருள்மழையோடு விடைபெற்றது;
ஒருவழியாய் யுத்தமங்கு முடிந்தாலும் -நெஞ்சில்
புதுவழியாய் தொடர்ந்தது வஞ்சம்;
கங்கைமகன் அழிவிற்காகத் தவமிருந்தாள் - ஒரு
காலூன்றி சங்கரனை வேண்டிநின்றாள்;
மங்கையவள் தவத்திற்கு மனமிறங்கி - அவளாசை
மறுபிறவியிலே நிறைவேறும் வரமளித்தான்;
சங்கடங்கள் சூழ்ந்து நின்ற வாழ்க்கையிதை - விடுத்து
சங்கமித்தாள் நெருப்புக்குள் ஒன்றெனவே!!!
✍️ கவிஞர் விஜயநேத்ரன்