கர்ணனும் காண்டீபனும் : கண்ணன் எழுதிய கதை
அன்னை ஒருத்தியைச் சுமக்க வைத்தாய்
அவனியில் இருவராய்ப் பிறக்க வைத்தாய்
அருகருகே அவர்களை இருக்க வைத்தாய்
அந்த உண்மையை ஏனோ மறைத்து வைத்தாய்
ஆற்றினில் ஒருவனை மிதக்க வைத்தாய்
அதிரதன் கரங்களில் சேர்க்க வைத்தாய்
சுதமகன் என்றொருப் பெயரை வைத்தாய்
சுகங்களை வென்றிடத் தடையை வைத்தாய்
காட்டினில் ஒருவனைப் பிறக்க வைத்தாய்
போட்டியில் அவனையே வெல்ல வைத்தாய்
காண்டவ வனமதை அழிக்க வைத்தாய்
காண்டீபன் என்றொரு பெயரளித்தாய்
வில்லில் இருவரை இணைத்து வைத்தாய்
வீரத்தால் அவருக்குள் பிணக்கு வைத்தாய்
பகையை இடையினில் வளர வைத்தாய்
பாவம் அவர்களைத் தவிக்க வைத்தாய்..
எதிரெதிர் அணியில் நிற்க வைத்தாய்
எதிரியாய் அவர்களை நினைக்க வைத்தாய்
எல்லைகள் அதனை உடைத்து வைத்தாய்
எல்லாம் உன் செயலென உணர வைத்தாய்
சாபத்தில் கர்ணனை மூழ்க வைத்தாய் - பெருஞ்
சபையின் நடுவினில் தலைகுனிய வைத்தாய்
அரவக் கொடியோன் அவனது நட்பளித்தாய்
அதற்காகக் கர்ணனின் உயிர் எடுத்தாய்..
அர்ச்சுனன் வென்றதைப் பகிர்ந்தளித்தாய்
அய்வருக்கும் ஒருத்தியைப் பரிசளித்தாய்
பகடையைச் சகுனியால் உருள வைத்தாய்
பாஞ்சாலிக்கு அங்கு துகில் கொடுத்தாய்
வார்த்தையில் நீயொரு சொல்லை வைத்தாய் - அதைத்
தீர்த்திடக் களத்தினில் மோத வைத்தாய்
பார்த்தனை அன்பினில் உருக வைத்தாய்
பாரதப் போரினிலவரை வெல்ல வைத்தாய்
பெற்றவளை மகனிடம் அனுப்பி வைத்தாய்
மற்றவரிடம் அதை நீ மறைத்து வைத்தாய்
கற்ற வித்தையை (களத்தில்) மறக்க வைத்தாய்
தக்க சமயத்தில் அவனைத் தவிக்க விட்டாய்
தமையன் அவனிடம் மெய் மொழிந்தாய்
தலைமகனைத் தர்மத்தை உணர வைத்தாய்
தம்பியின் சரத்தினால் உயிர் பறித்தாய்
தனஞ்செயன் மனமதைக் கலங்க வைத்தாய்
அண்ணனைத் தம்பியை எதிர்க்க வைத்தாய்
அவரவர் மகன்களை இழக்க வைத்தாய்
கண்ணனாய் அனைத்தையும் நடத்தி வைத்தாய்
கர்மத்தின் பலனென்று முடித்து வைத்தாய்.
✍️ கவிஞர் விஜயநேத்ரன்
பின்குறிப்பு : கர்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையிலான உறவுக்கும் பகைக்கும் "தாய்" தான் முதற்காரணம். அதிலிருந்தே அனைத்தும் தொடங்கியதால் அனைத்துக்கும் காரணமான "தாய்"யில் முடித்து எழுதியுள்ளேன்..