கர்ணனின் வாழ்க்கை : வரமா? சாபமா??
கருவில் என்னைச் சுமந்தவள்
கண்ணெதிரே நிற்கின்றாள்..
வரமொன்று கிட்டவில்லை ..
வரமாய்ப் பெற்றவனை
வாஞ்சையுடன் கொஞ்சிடவே...
கரம் நீட்டி அணைத்தென்னை
கண்ணீரைத் துடைப்பதற்கு..
நெஞ்சோடு சேர்த்தணைத்து
நெற்றியினில் முத்தம் பெற..
வாய்ப்பொன்று அமையவில்லை..
வாழ்விதிலே நிறைவுமில்லை..
அம்மா என்றவளை அன்பாய்
அழைக்கும் உரிமையில்லை
மகனென்ற ஆசையினிலவள்
மடி சாய்ந்து உறங்கவில்லை...
தாய்ப்பாலது கிட்டவில்லை - அவள்
தலைகோதும் வாய்ப்புமில்லை..
தாயன்பில் வாழ்ந்திடவே - என்
தலையெழுத்தில் வாய்க்கவில்லை..
அன்னையவள் கைபிசைந்து
அமுதூட்டி உண்டதில்லை..
அவளுடையக் கரம்பற்றி
அரங்கத்தில் சென்றதில்லை..
நாடாளும் குலத்தில் நான் பிறந்தும்
தேரோட்டும் குடியினனாய் வாழ்கிறேன்..
அரசானாய் முடிசூட வேண்டியவன்
அவமானங்களையே சூடுகிறேன்...
என்னுடன் பிறந்தோர் ஐவருண்டு
எனக்காய் யாரும் இல்லை...
உறவுகள் பல இருந்தும்
உரிமைதான் எனக்கு இல்லை....
தம்பியரைக் காத்திடாமல்
தலைகுனிந்து நிற்கின்றேன்..
அண்ணனென்று தெரியாமல்
அஸ்திரத்தை உயர்த்துகிறேன்...
விரோதிகளாய் வில்லேந்தி
குரோதமதை சுமக்கின்றோம்..
விதியாடும் விளையாட்டில்
கதியின்றி தவிக்கின்றோம்...
வாழ்வென்ற பயணத்தில்
சிறகின்றி பறக்கின்றேன்..
வரத்தினால் பிறந்தாலும்
சாபங்களில் வாழ்கின்றேன்...
தர்மத்தில் நடந்தாலும்
தடுமாறிப் போகின்றேன்...
கர்மத்தின் விளைவாலே
தடம் மாறி கரைகின்றேன்...
எல்லாம் எனக்கிருந்தும்
ஏதுமின்றி நிற்கின்றேன்
தனியாக...
தன்கையிலேந்தும் தலைமகனைக்
கங்கையில் அனுப்பி வைத்தாள்..
கன்னித்தாயவள் பழியெண்ணி..
கதிரவன் மகனாய்ப் பிறக்க - எதிர்
காலமறிந்து வரமளித்தான்..
சினத்திலுயர்ந்த துர்வாசன்..
அதிரதன் மகனென்று - கற்ற
அஸ்திரத்தைப் பறித்தெனக்கு
சாபமிட்டான் பரசுராமன்...
நட்பாய் எனையேற்று
நாடாள வாய்ப்பளித்தான்..
அதர்மி என்றகிலம் சொல்லும்
அரவக்கொடியோன் அன்பினால்..
கடவுளே கையேந்தி நின்றான்..
கவசத்தைத் தானமாய்க் கேட்டு..
இந்திரன் அவன் மகனுக்காக...
எதையும் தாங்கும் பூமியவள்
என்கரப்பிடியது தாங்காமல்,
சக்கரம் பிடிப்பேனென்று
சத்தியம் செய்தாள் சாபமாய்....
அதிமகரதனென்னை ,
அர்த்தரதனென்றுரைத்து...
களத்திலிருந்து அகற்றினார்..
கங்கை மைந்தர் அவரும்..
அன்னையும் வந்தெந்தன்,
அறியா பிறப்பைச் சொல்ல,
கலங்கி நிற்கின்றேன்..
நான் கொண்ட நட்பிற்கும்,
அவள் தந்த பிறப்பிற்கும்,
இடையில் யுத்தம் செய்து,
இதயத்தில் இரத்தம் சிந்தி..
இருளகற்றும் ஆதவனின் அருளாலே பிறந்திருந்தும்,
இருளென்னை சூழ்கிறதே
இது என்ன புது விந்தை...
கங்கையில் மிதந்து வந்து
கரையேறிப் பிழைத்துவிட்டேன்..
கண்ணீரில் நனைந்திங்கு
கரைதேடி தவிக்கின்றேன்...
இதயத்தில் உதிக்கிறது...
என் வாழ்க்கை யாதென?..
இதற்கோர் பதிலென்ன?
இருந்தால் சொல்லுங்கள்..
வரமா? சாபமா??
நான் பிறந்த கதை...
புதிரா?? புனிதமா???
நானுயர்ந்த நிலை....
விடையதைத் தேடுகிறேன்..
விதியதன் வழியினில்....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்