அகிலம் போற்றும் அர்ஜுனன்
இந்திரனவன் இனியதோர்ப் பிரதியெனச்
சந்திர குலமதின் சரித்திரத் தோன்றலாய்,
மந்திரமதை உச்சரித்த பெரும் மகிமையால்,
குந்தியவள் பெற்றெடுத்தாள் குலஞ்செழிக்க,
குருவம்சப் புத்திரனாய்ப் பார்த்தனையே...
தனமதை நிரம்பப் பெற்றதால் தனஞ்செயனாய்
தன்னெதிரிகளை வென்றே திரும்புவதால் விஜயனாய்
தலையிலிந்திரன் கிரீடத்தைச் சூடிக் கிரீடியாய்
தங்கக்கவசம் பூண்டப் பரித்தேரால் சுவேதவாஹனானாய்..
களத்தி லறனுடன் சமர்செய்து பீபத்சுவாய் -
களங்கமற்ற செயல்களதனால் அர்ச்சுனனாய் - இரு
கரத்திலும் வில்லேந்தும் ஆற்றலினால் சவ்யசச்சியாய்
காண்டீபமதைப் பெற்றதனால் காண்டீபனானாய்...
பிரிதை ஈன்றெடுத்து பிறந்ததனால் பார்த்தனானாய்
பங்குனியில் உதித்ததால் பல்குனன் ஆனாய்
பகனைக் கொன்றவனின் புத்திரனாய் ஜிஷ்ணுவானாய்
பாண்டுவின் அன்பதனால் கிருஷ்ணன் ஆனாய்.
அமரவேந்தனவன் தன்னருள் அளித்தான்
அகிலத்தில் வாழ ஆருயிர்க் கொடுத்தான்
அவன் ஆற்றல்தனைப் பகிர்ந்தளித்தான்
அம்புலி குலமதைத் தழைக்க வைத்தான்
துர்வாசன் உயிர்க்கொடுத்தான் சொல்லினால்
துரோணன் உருக்கொடுத்தான்
வில்லினால்
பரமனவன் சரம் கொடுத்தான் தவத்தினால்
பாலினம் மாறி நின்றாய் வரத்தினால்...
குரு துரோணன் பழிதீர்க்கப் பாஞ்சாலம் சென்றாய்
துருபதனவன் கர்வமழித்துத் தட்சணையாய் ஈந்தாய்
காண்டவ வனமதையழித்துக் காண்டீபம் வென்றாய்
பாண்டவர் வாழ்வதற்கோர் தேசத்தை அமைத்தாய்..
வில்லேந்தும் போட்டியிலே முதன்மை என்றாய்
விதிநடத்தும் நாடகத்தில் பெருமை கொண்டாய்
கர்ணனவன் உயிரதனைக் களத்தில் கொன்றாய்
கடைசியிலே சோதரனாய்க் கலங்கி நின்றாய்
கந்தர்வர் கலைமுழுதாய்க் கசடறக் கற்றாய்
கங்கைமகன் அன்பை நிறைவாய்ப் பெற்றாய்
வேங்கையாய் இலக்கினில் வில்லதனைத் தொடுத்தாய்
வேல்விழியாள் மனமதிலே பெருங்காதல் விதைத்தாய்..
நாகக்கன்னி உலுப்பியுன்மேல் மோகம் கொண்டாள்
நாடிச் சென்றுச் சித்ரங்கதை மனதில் நின்றாய்
வாடி நின்ற சுபத்திரையின் வாழ்வில் இணைந்தாய்
வாசுதேவ கிருஷ்ணனோடு வரமாய் இருந்தாய்
அபிமன்யூவைப் பெற்றதனால் பெரும்பேறைப் பெற்றாய்
அரவானின் தந்தையென நற்பெயரைச் பெற்றாய்
அன்புமகன் பப்ருவாஹனால் மறுவாழ்வைப் பெற்றாய்
அவரோடு ஸ்ருதகர்மாவை மகனாய்ப் பெற்றாய்
ஊர்வசியின் சாபத்தினால் நொறுங்கி உடைந்தாய்
உள்ளத்தின் தூய்மையினால் வரமாய் அடைந்தாய்
சங்கரனின் அருளதனால் அருஞ்சரத்தைப் பெற்றாய்
சங்கடங்கள் தீர்க்கும் பலவரங்கள் பெற்றாய்
பாஞ்சாலி துயரதைத் துடைக்கச் சூளுரைத்தாய்
பாரதப் போரதனில் முதன்மை பெற்றாய்
பாரந்தாமன் சொல்லதனை முழுதாய்க் கேட்டாய்
பாரினில் தர்மம் வாழத் துணையாய் நின்றாய்
விடுமரை வீழ்த்தியதால் பெரும்பழியை ஏற்றாய் - வசுக்கள்
விடுத்திட்ட சாபத்தால் கடும்விதியில் வீழ்ந்தாய்
பப்ருவஹன் கரங்களினால் மரணம் கொண்டாய்
பழி நீங்கி உலுப்பியினால் உயிரைப் பெற்றாய்..
கண்ணனின் நட்பதனைத் துணையாய்ப் பெற்றாய்
காண்டீப வில்லதனை வரமாய்ப் பெற்றாய்
மாதவன் மொழிந்த கீதையதைக் காதில் கேட்டாய்
மா தவத்தின் பலனையெல்லாம் வாழ்வில் பெற்றாய்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்