கண்ணன் மொழிந்த கீதை - விஜயனின் வரியில் பகுதி -3
சகலமும் தானென சய்வசச்சிக்கு உணர்த்துதல்:
அகங்காரத்தின் துணையான குரோதத்துடன்
ஆசையென்ற தீயை விட்டெழிந்து
ஆண்டவன்பாதம் சரணடைவாய்!!
தூண் துரும்பு யாவிலுமிருப்பேன்
என்னில் உள்ளதை உணருமுன்
உன்னில் என்னையே கண்டிடின்
சத்யமறிந்திடுவாய் சய்வசச்சியே!!
சமர்ப்பணமதற்கிணை இறைவன் திருவடி
சரணடைவாய் நீ சகலமும் துறந்தே!!
சந்திர சூரியன் சகலமும் நானே,
செடியும் கொடியும் தளிரும் நானே!
சொர்க்கம் நரகம் மொத்தமும் நானே!!
காந்தாரி புதல்வனும் நானே,
காண்டீபதாரியும் நானோயென்ற
கார்மேகன் மொழிதனைக் கேட்டு
இங்கிருக்கும் நீரவனியில்
எங்கெங்கும் எவ்வாறிரூப்பீர்
எனவிழித்தான் பல்குனியவனே!!
அற்ப உடலதைக்காணாதே அர்ச்சுனாநீ
ஆத்மா அதைமட்டும் கண்டிடுவாய்!!
ஆடைபலவற்றைப் பூட்டிச் சரீரமதையே
அவனியில் புதைத்தவன் நானே!!
தர்மமதுதன் பலமிழந்து வீழும்போது
தான் வருவேன் அதை நிலைநாட்டிடவே,
அதர்மம் பெருகுவதை அழித்திடவே
அவதாரம் பல எடுப்பவனானே!
மறை காக்க வந்த மச்சவதாரம் நானே- துர்
மன்னர்களை அழித்திட்ட பரசுராமனும் நானே!
உலகை அளந்திட்ட வாமனன் நானே
உத்தமபுத்திரன் ராமனும் நானே!!
மும்மூர்த்தியும் நானே அவர்கொண்ட
முத்தேவியரும் நான் ஒருவனேயாவேன்!!
ஆணும் நானே பெண்ணும் நானே
அதற்கிடைவாழும் அர்த்தநாரியும் நானே!!
ஒப்பற்ற சகலமும் நானே- அதில்
ஒன்றுமில்லாத சூன்யமும் நானே
பிறப்பு இறப்பின்றி சிறப்புற்றவன்
இவ்வகிலமாளும் இறைவன் நானேயென
திருவாய் திறந்தனன் திருமாலவனே!..
பரமாத்மா யாதென்று உரைத்திட்ட
பரந்தாமன் மொழிகேட்டப் பார்த்தனவன்
பரவச நிலைதனையேக் கொண்டான்
பாற்கடல் வாசனவன் பார்வையினாலே!!
சங்கல்பமதை தியாகம் செய்திட்டு
சமர்ப்பணம் அளித்திடுவாய் நீ எனக்கே!!
இறைவன் இட்ட ஆணையொன்றினையே
இறுதிவரை செய்வதுடன் - அவனிடம்
சகலத்தையும் அளிக்கும் ஒன்றே
சமர்ப்பணம் என்று சொல்வேன்
உன்னை தனிமனிதனில் சமர்பித்தால்
நீயும் பெறுவாய் அவர்குணமே!!
கர்ணனவன் மித்திரன்பால் சமர்ப்பணமே
கர்மவினையாய் அமைந்தது அவனுக்கே!
இதயங் கொண்ட சமர்ப்பணமதையே
இறைவன் ஒருவனுக்கே அளித்திடுவாய்!.
சிந்தைகொண்ட சந்தேகம் விடுத்து
விந்தையானவனிடம் சமர்ப்பிபாயுனையே!
இறைபக்தி அதுஒன்றையே நான்
இவ்வுலகில் மிகப் பெரியதென்பேன்.
வேதாந்த யோகமதை விவேகமாயுணர்ந்து
சுயதர்மயோகம்தனைச் சுகமாய் பெற்றால்
கர்மயோகம்தனில் கடமையை நீயுணர்ந்தால்
பக்தியோகமதில் பரமனைக் காண்பாய்!
ஞாலத்திற் பெரியது யாதெனின்
ஞானயோகமே! - அதன்வழியே
கடவுளை உணர்ந்தி்டலாம் நீயென்ற
கண்ணன் திருவாய் மொழிகேட்டு
களிப்புற்று மகிழ்ந்த காண்டீபன்
சரீரமது கொண்ட பலனெதுவோவென
சாரங்கனிடம் வினவினான் வியப்போடே!!
கீதையின் பாதை தொடரும்.
✍️ கவிஞர் விஜயநேத்ரன்