சிரஞ்சீவி அஸ்வத்தாமன் : நிகரில்லா மாவீரன்
வெண்பிறைதனைச் சடையில் தரித்த சதுரனை
சிந்தையில் நினைந்து துரோணன் வேண்டிட
சந்திர மணியினை நுதலினில் பொறித்த
மந்திர மகனினை வரமாய்ப் பெற்றனன்.
பதினொரு ருத்ரரில் இவனொரு அம்சன்
மதிகொண்ட கல்வியில் மகரதி வீரன்
விதியினை வென்ற சிரஞ்சீவியில் ஒருவன்
குதிரையின் குரலொலிக்கும் அஸ்வத்தாமன்
அருந்திடப் பாலின்றி அழுத மகனுக்காக
விருந்திட விரைந்தனன் பாதியைத் தந்திடும்
குருகுல நட்பளித்த வாக்கினை நினைவிலேந்தி
துருபதன் தேசத்திற்குத் துரோணன் அவனே..
தோழமையில் சென்றவனை யாசகனாய் இகழ்ந்துரைந்து
ஏளனங்கள் செய்தவனை எச்சரித்த ஆச்சார்யன்
ஆளுமையில் தோற்றுவித்தான் அகிலத்தில் சிறந்தவனாய்
அர்ச்சுனன் என்னும் அஸ்தினாபுரத்தவனை.
காண்டீபன் ஏந்தி நிற்கும் தனஞ்செயன் - குருவின்
காலடியில் சமர்ப்பித்தான் சமர்ப்பணமாய் எண்ணி
பெற்று வந்த வெற்றியினால் பாஞ்சால தேசமதை
கற்றுத்தந்த வித்தைக்கெல்லாம் காணிக்கையாக..
உருவான குரோதமது உள்ளத்தில் குடிகொள்ள
கருவான வேள்வியில் பெற்றெடுத்த மக்களாலே
குருவம்சமதத்தோடு துரோணனையும் அழித்திட -
குருசேத்ரம் சேர்ந்தனன் துருபதன் மகனோடு..
அஸ்வத்தாமன் இறந்ததாய் அழகாய்க் கதைகட்ட
அதுக்கொரு சாட்சியாய்த் தர்மனும் விதைபோட
அஸ்திரங்கள் தியாகித்து ஆழ்மனதில் தியானித்து
அமர்ந்த துரோணனனைத் த்யூமனன் கொன்றிட
தந்தையை இழந்து தன்விழியது நீர்சிந்த விந்தையை அறியா விதியினைப் பழித்து சிந்தையில் குரோதம் மனக்கண் மறைத்திட
சினமது தோன்றிட ஆடிடும் ருத்ரனாய் புறப்பட்டு
பாண்டவர் இடமதில் தனியனாய் உட்புகுந்து
படுக்கையில் உறங்கிய தளிர்களைக் கழுத்தறுத்து,
பாஞ்சால குலத்தவனின் உயிரினைப் பறித்தெடுத்து
அஞ்சாமல் வெளிவந்தான் அவ்விடம் விட்டே.
தொடுத்த சரத்தினால் கருவினைக் கொன்று - கண்ணன்
கொடுத்த சாபத்தில் சந்திர மணியதையிழந்து
துடித்தான் வலியினில் ரணமதின் விளைவால்
துரோணன் பெற்ற சிரஞ்சீவி அஸ்வத்தாமனே.
தான் கொண்ட நட்பிற்காகத் தடுமாறித் தலையறுத்தான்
தந்தையைக் கொன்றதற்காக அறமாறி கருவறுத்தான்
வித்தைகளில் தெளிவிருந்தும் விதியினால் அறிவிழந்தான்
ருத்ரனின் அருளிலிருந்தும் கதியின்றி
சாபம் பெற்றான்.
வரத்திலே பெற்றெடுத்தும் வறுமையில் வாழ்ந்திட்டான்
கரத்திலே வில்லிருந்தும் கடுங்கோபத்தால் வீழ்ந்திட்டான்
ரணத்திலே கானகத்தில் தனியனாய் வாழ்ந்துவரும்
சிரத்திலே மணியிழந்த சிரஞ்சீவி கதையிதுவே..
✍️ கவிஞர் விஜயநேத்ரன்