கண்ணன் மொழிந்த கீதை : விஜயனின் வரிகளில்
பகுதி-2 : ஏற்ற கர்மத்தை செய்ய வேண்டிய அவசியத்தை தனஞ்செயனுக்குப் போதித்தல்
தர்மயுத்தமதன் முடிவினில்
தம்மில் பெறுவது சுகதுக்கம்
இவ்விரண்டில் யாதென இறைவன் வினவிட
இருதயமதிலே இன்பமும் துன்பமும்
இரண்டறக் கலந்தே இருக்குமென இந்திரன்
தவப்பிரதியவன் தன் வாய் மொழிந்தான்....
வெல்லும் போரினில் மகிழ்ச்சியடையின்
வென்றிடுமே அகங்காரம் - உனையது
அவனியாளத் தூண்டிடும் - என்றும்
அதர்ம வழிதனில் அழைத்துச் சென்றிடும்!!!
மகாயுத்தமதில் மாள்பவன் நீயெனில்
மறுபிறவி எடுத்திடுவாய் நீயிங்கே
மனதில் மலையாய்க் குரோதங்கொண்டே!!!
பெற்றிடும் முடிவதனில் நீயென்றும்
பற்றின்றி யுத்தமதை செய்திடில்
மட்டற்ற மகிழ்ச்சியும் நீ பெறாய்,
திக்கற்ற துக்கமதையும் தொடாய்!!!
கூட்டுனில் குடிகொண்ட ஆத்மாவதனையே
குறையின்றி உணர்ந்திட்டால் வாழ்வின்
கர்மயோகி ஆகிடுவாய் நீயென
கனிவாய் மலர்ந்தான் கண்ணனவனே!'
கர்மயோகி ஆகிடவே களிநீங்கி
கானகத்தே துறவறம் பூண்டாலென்ன
காண்டீபம் ஏந்தியவன் கேட்டிடவே
தர்மமதை உணர்ந்தோரெல்லாம் கர்மம்நீங்கி
தவவாழ்வதனை வேண்டி சென்றிடின்
அதர்மமது வென்றிடுமே, அழகு
அவனியதை ஆளுமதர்ம வழிதனிலே!!!
பிதாமகன் ஏற்றிட்ட தியாகமதனால்
பிறந்திட்ட யுத்தமிது என்பேனான்
பாண்டுமன்னன் சென்றிட்ட துறவறத்தால்
ஆண்டுவிட்டது அதர்மம் இங்கே!!!
சாதிக்க சத்வமது தொடங்கிவிடின்
சாய்ந்திடும் அதர்மமது அகிலத்திலே!!!
பலனைப் பார்த்திடாதே என்றென்றும்
பார்த்தனே செய்திடுவாய்; நீகொண்ட
கடமையினை சிரமேற்கொண்டே அதன்
கர்மப்பலனிற் இச்சை கொண்டாயின்
தர்மமது நீங்கிடுமே கர்மம்விட்டு..
அன்பு நிறைந்திட்ட தர்மமதனையே
அவன் கொண்ட சந்ததிக்கு வழங்கிடின்
அவனியிலே செழித்திடுமே சத்தியமே!!!
சிருஷ்டியே பரமாத்மா அதனுள்ளே
சிறு அங்கமே மனிதனென்பேன்,
முக்குணத்தை நீ தியாகம் செய்து
நிர்க்குணமதை பெற்றுட்டால் அரிய
பரமாத்மாவைக் கண்டிடலாம் பார்த்தனே நீ!!!
பெற்ற பிராப்தமதை பேணிட முயன்றால்
பெறுவாயே பெருந்துயரொன்றை நீயே!!
அதிகாரக் கர்மமேற்று
அதனை நீ நிறைவேற்று! !
அதன் பலன் சேர்ந்திடுமென்றும்
ஆண்டவன் அடிதனிலே!!
அன்பின் வழிதனை அடிபற்றி
ஆண்டவனை அறிந்திடலாம்- ஆசையின்றி
ஆற்றும் பணியொன்றே பூரணமமாம்
ஆணவமதையே நீக்கிவிடின்...
பலனதனை நோக்கிடின் விருப்பந்தோன்றுமது
பறித்திடுமே உனதானந்தமதை...
குரோதம் தோன்றிடும் உள்ளத்திலங்கு
குடிகொண்டிடும் மோகம் அதனால்
ஞானத்தை இழந்திடுவாய் என்றும்
ஞாலத்திற்கு எதிரியாவாயதனால்...
பார்த்தனே நம்பிக்கை கொள்வாய்
பரமாத்மா மீது மட்டும் - அதனால்
சமர்ப்பனமதை அளித்திடுவாய் அவனுக்கே!!
ஞாலத்தின் மிகப்பெரிது யாதெனின்
ஞானம் கொண்டு பார்ப்பதுவே!!!!
தாமே பரமாத்மாவாவென வினவிட்டான்
தனுசேந்திய தனஞ்செயன் அவனே!!!!
- கீதையின் பாதை தொடரும்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்