கங்கை மைந்தர் பீஷ்மர்
வேட்டைக்குச் சென்ற குருமகன் - தாக
வேட்கையில் கங்கையுடன் மயங்கிட
மங்கையவள் விதித்த கட்டளையேற்று
மணம்புரிந்து பெற்றெடுத்தான் எழுவரை..
பெற்றெடுத்த குழந்தையெல்லாம் ஒவ்வொன்றாய்
பெருக்கெடுத்த ஆற்று நீரில் மூழ்கடிக்க
தத்தளித்துத் தவித்து நின்றான் மன்னனவன்
தான்பெற்ற எட்டாம் மகனைக் காப்பாற்ற.
எப்படியும் காப்பாற்ற வேண்டுமென்ற
எண்ணத்திலவள் செயல் தடுத்து
காப்பாற்றத் தவறினான் வாக்கினையே
கங்கை அவளிடம் கடுந்துரைத்து.
கரத்தினில் பெற்றவனைச் சுமந்தெடுத்து
வரநதியாள் தியாகித்து வான்சென்றாள்
வாக்குறுதி மீறி நின்ற மன்னனவனிடம்
வருவேன் மீண்டுமென்று வாக்களித்து..
தெய்வீகப் புதல்வனவன் பூமி வந்தான்
தேவவிரதனென்று திரும்பி வந்தான்.
வந்தவன் தியாகித்தான் அரியணையை
தந்தையின் மகிழ்வுக்காக பீஷ்மனாய்..
தம்பியரை அரியணையில் அமரவைத்து
தமையனாயவருக்குத் துணை நின்று,
தவவாழ்வு ஏற்று நின்று காவலனாய்..
சந்திர வம்சமது தளைத்து வாழ
சாபங்கள் தன்வாழ்விலவன் ஏற்றான்.
குருவம்சம் குறைவின்றி ஒளிர்ந்திடவே - தன்
குருதியினை ஊற்றி ஒளி தந்தான்!
தர்மத்தைக் காத்து நிற்கத் தடைகளோடு
கர்மத்தால் நாளெல்லாம் சண்டையிட்டான்.
தண்ணீர்த் தாயவளுக்கு பிறந்ததினால்
கண்ணீரில் தினமவன் கரைந்திட்டான்.!
சங்கல்பம் நெஞ்சினில் கொண்டதினால்
சங்கடங்கள் வாழ்க்கையிலவன் அடைந்தான்!
அஸ்திரமதைத் துரியனுக்காக எடுத்து
ஆசியை தர்மனுக்கவன் கொடுத்து..
குருவம்ச குலமதைக் காத்திடவே
குருசேத்திரம் வந்திட்டான் தலைமையேற்று.!
மன்னவனைக் காத்து நின்றான் முழுதாய்
கண்ணனவன் வேண்டும்வரை அரமாய்..
மண்ணிலவன் நின்றவரை குலமதிலே
மாளவில்லை யாருமங்கு களமதிலே..
ஈரைந்தாம் நாளதிலே இதயத்தை
இருபுறமும் கலங்க வைத்தான்.
ஆயுதத்தை துறந்தான் தேரினிலே
அம்பையவள் எதிர்வந்து நின்றிடவே..
சிகண்டியைக் கேடயமாய் முன்நிறுத்தி
சிங்கத்தை சாய்த்திட்டான் காண்டீபன்
குருதிக்கடல் பெருக வீழ்ந்தமர்ந்தான்
அங்கத்தில் துளைத்த அம்புப் படுக்கையிலே..
அம்பெய்த அர்ச்சுனன் அகம் அலறிட
அவனுடன் பிறந்தோர் கண்ணீர் சிந்திட
துரியனவன் மீளாத் துயரில் நீந்த
அரியும் அவ்விடம் கலங்கிநின்றான் ..
கணையாயிரம் உடல் துளைத்தும்
கண்மூடக் காத்திருந்தான் - மண்ணில்
காலன்மகன் அரியணை ஏறித் தர்மம்
காத்திடுவான் என்றெண்ணி
கடமையுணர்வோடு!
தர்மனுக்கு நெறியதனைப் போதித்து
கர்மவினையதன் பலனை நிறைவேற்றி
கங்கை மகனென்னும் தேவவிரதனவன்
கண்மூடி விண் சென்றான் பிரபாஸனாய்...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்