கர்ணனின் பிறப்பு
தவக்கோலம் தந்த உயர்பலனால்
முக்காலம் உணர்ந்திட்ட முனிவனவன்
எதிர்காலப் பலனதை மனதிலெண்ணி
எடுத்துரைத்தான் மந்திரத்தை குந்திக்கே
தான் விரும்பும் கடவுளரை மனதிலெண்ணி
தான் சொன்ன மந்திரத்தை சொன்னாலே
வந்திடுவர் கடவுளவள் முன்னாலே
தந்திடுவர் அவர்பிரதி தன்னாலென
சினத்திற்குப் பெயர்பெற்ற துர்வாசன் -பிரிதை
குணத்திற்கு உள்ளுக்குள் மனமகிழ்ந்தவள்
நலத்திற்கு உரைத்தந்த மந்திரத்தை
நம்பாமல் அழைத்து நின்றாள் பரிதியினை..
அறியாப் பேதையிவள் அறியாமல் தவறிழைத்தாள்
அரிய மந்திரத்தை ஆர்வத்துடன் மொழிந்தாள்
ஆதவனை தன்மனமதில் நினைத்து
அன்புடனே வேண்டி அழைத்திட்டாள்.
கன்னியவள் அழைப்பில் மகிழ்ந்து
கதிரவனும் வந்து நின்றான்
தன்னுடையப் பிரதியாய் அவளுக்கு
தவப் புதல்வனை தந்து சென்றான்.
மலர்முகம் தன்னில் தாமரைப் பூக்க
மார்பில் கவசம் மாவொளி பரப்ப
காதில் குண்டலம் கதிரொளி வீச
கதிரவன் சாயலில் உதித்தான் கர்ணன்.
கன்னித்தாயவள் கண்ணீர் கடல்பெருக
தன்னிலை எண்ணி தனக்குள் குமுறினாள்
உலகின் பழிச்சொல்லை உள்ளுக்குள் எண்ணி
உண்மையை மறைக்க உறுதி வேண்டினாள்.
தாய் மடி சேராத தவப்புதல்வனை
தண்ணீரில் அனுப்பிட மனதிலெண்ணி
தன்கையில் ஏந்திய தன் மகனை
கங்கையின் மடியிலே மிதக்க விட்டாள்.
கண்ணீர் சிந்தியே விடை கொடுத்தாள்..
✍️ கவிஞர் விஜயநேத்ரன்