
மரமல்ல நான்.... மரத்துப் போக....
ஏன் இந்த மாற்றம்???
உன்னில் தடுமாற்றமா?
என்னில் ஏமாற்றமா??
ஏன் இந்த மாற்றம்??
அலைமகள் நானென்றாய்
கலைமகள் நானென்றாய்
செல்வத் திருமகளும் நானென்றாய்.,
விலைமகள் நானென்று
வீணாய்க் கதைபேசி
வீதியில் விற்றதேனோ??
விதியின் சதியா?
இல்லை இல்லையுன்
மதியின் சதியா?
கண்ணே மணியே என்றாய்
பொன்னே நிலவே என்றாய்
நேசித்தேன் என்றாய்
சுவாசித்தேன் என்றாய்
விவாகம் எனும்போது வியாபாரம் செய்கிறாய்??
இருமனம் இணைந்தது என்றாய் திருமணச் சந்தையில்
தினமொரு விலைகேட்கிறாய்??
ஏன் இந்த மாற்றம்???
உன்னில் தடுமாற்றமா?
என்னில் ஏமாற்றமா??
ஏன் இந்த மாற்றம்??
வட்ட நிலவென்றாய்
ஒளியிழந்தேன்...
வண்ணத்துப் பூச்சியென்றாய்
நிறமிழந்தேன்...
கலைத்து விடுகிறேன் என் கனவை...
அதனுள் புதைத்து விடுகிறேன்
என்னை...
என் மனதை...
தினம் நீ வாழ
உள்ளுக்குள்
இரணமாகிறேன் ....
உள்ளத்தால்
பிணமாகிறேன்...
என் இதயமும் துடிக்கிறது
நீ தரும் வலிகளால்...
உடலும் உதிரமும்
மட்டுமில்லை....
உணர்வுமுண்டு அதற்கு..
உன்னைப் போல....
உயிர் வேண்டும் அதற்கும்....
நீ
ஏட்டில் எழுதிய சுதந்திரம்
எனக்கும் தேவை கொஞ்சம்...
கொடுக்க நீ மறுத்தால்
எடுத்துக் கொள்கிறேன்....
மரமல்ல நான்....
மரத்து போக....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்