
தத்தளிக்கும் அன்றில் : காதலில் கசிந்துருகிக் காத்திருக்கும் பேதை
ஆதவனின் முகம் தேடும்
ஆம்பல் மலராய் - எந்தன்
நாயகனின் முகம் பார்க்க
நானும் காத்திருந்தேன்...
மதில் மேல் பூனையென
மனம் ஏங்கி நானிருந்தேன்...
பதிலில்லா விடையறிய
பார்வையில் நாணி நின்றேன்
உள்ளுக்குள் பூட்டி வைத்த
உணர்வுகளைத் தாழ்திறந்தேன்...
உத்தமன் வதனம் காண
உள்ளத்தால் பூத்திருந்தேன்...
வேட்கையில் என் நெஞ்சம்கூட
வேடிக்கைதான் பார்த்தது...
நாட்கள் தினந்தோறும்
நாழிகையாய் கரைந்தோட...
கடைசியில் கண்டுகொண்டேன்
கண்ணாளன் முகமதனை...
காட்சியில் கண்டநொடி
காதலில் உறைந்துவிட்டேன்..
உன் கண் பார்த்தபோது தானே
பெண் என்று நான் உணர்ந்தேன்.
மையிட்ட எந்தன் கண்ணுள்
மையல் வந்த சேர்ந்ததப்போ...
வெள்ளை இதயத்திற்குள்
மயிலிறகாய் நீயும் வந்தாய்.
இதய வாசல் திறந்து வந்து
வண்ணக்கோலங்கள் இட்டாய்...
ஊன் உறக்கம் தொலைத்துவிட்டு
உன்நினைவில் மூழ்கிவிட்டேன்..
வான் நிலா உலாச்சென்று
கனவுக்குள் தொலைந்துவிட்டேன்
சுற்றம் எதிர் வந்தும்
பற்றின்றி கடந்துவந்தேன்..
சுற்றிப் பலர் இருந்தும்
சூன்யமாக நானிருந்தேன்.
பெற்றோர் சொல்லெல்லாம்
பேதையிவள் கேட்கவில்லை
உற்றோர் உரைத்ததன்
உண்மையை உணரவில்லை.
சுந்தரன் உன்சொல் மட்டும்
மந்திரம் ஆன மாயமென்ன??
சிந்தைக்குள் நிறைந்தென்னை
சித்ரவதை செய்வதென்ன??
அச்சம் மடம் நாணமெல்லாம்
துச்சமாகப் போனதென்ன?
அருகில் உன்னைக் கண்டால்
குதூகலித்து நிற்பதென்ன??
தொலைதூரம் நீ செல்ல
துவண்டு போவதென்ன??
நிலையாக உன்வரவு
நித்தம் நிலைப்பதெப்போ??
வீட்டிற்கும் விடியலுக்கும்
மாட்டித் துடிக்கின்றேன்..
காதலுக்கும் காவலுக்கும்
கண்ணீர் வடிக்கின்றேன்..
தையல் நெஞ்சமதில்
உன்னைச் சுமக்கின்றேன்..
தத்தளிக்கும் அன்றிலென
தவித்தின்று கிடக்கின்றேன்...
விரைந்து நீ வருவாயா
விரல் பிடித்து செல்வாயா??
மணமாலை அதை சூடி
மாங்கல்யம் தருவாயா??
நான் கண்ட கனவெல்லாம்
நினைவாக்கிக் கொடுப்பாயா??
நாளும் உன் மூச்சில்
எனை சுமந்து வாழ்வாயா??
காதல் மன்னவனே
காலத்தோடு வந்துவிடு...
காதலுடன் காத்திருக்கேன்..
கன்னியவள் உனக்காக...