வெள்ளை அம்புலியாய் உள்ளம் தேய்கிறது
கள்ளமிட்டக் கோயிலென உள்ளுக்குள் மாய்கிறது
வற்றிய நதித்தடத்தில் வற்றலாய்க் காய்கிறது
சுற்றிடுமுன் நினைவால் சுற்றத்தை மறக்கிறது
நார் சேர்ந்த பூப்போல நாளும் மணக்கிறது
தேர்மீது உற்சவராய்த் தேனுலாப் போகிறது
கார்கோள்த் தீவாக உன்னினைவு சூழ்கிறது
கார் கால முகிலாகக் கனவுமழைப் பொழிகிறது
காட்டாற்று வெள்ளமெனக் கரையுடைந்து வழிகிறது
ஏட்டுச் சுரைக்காயாய்ப் பயனின்றி கிடக்கிறது
கூட்டத்தில் இருந்தாலும் தனிமையில் தவிக்கிறது
மேய்ப்பானாய் நீயின்றி எங்கேயோ தொலைகிறது
மலை சிந்தும் அருவியென மனதுக்குள் வீழ்கிறது
அலைமோதும் கற்றளியாய் அனுதினமும் சிதைகிறது.
இமை முட்கள் வருடலில் இதயம் வலிக்கிறது
சுமையாகத் தெரிந்தாலும் சுகமென்றே இரசிக்கிறது.
நடைபாதைக் கடைப்பலகை உன்பெயராய்ச் சிரிக்கிறது
கடக்கின்ற பொழுதெல்லாம் கைதட்டி அழைக்கிறது
விடைபெற நினைத்தாலே யுத்தங்கள் பிறக்கிறது
வெல்கின்ற முயற்சியெல்லாம் தோல்வியிலே முடிகிறது
நினைவுகளும் கல்லெறிந்து நித்திரை கலைக்கிறது
கனவுகளில் கனவாக உன்னுடனே வாழ்கிறது
உடைந்த இதயத்தில் உள்ளுக்குள் நீ இன்றும்
உடையாத நீர்க்குமிழியாய் உள்ளத்தில் நீ என்றும்...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்