
கண்ணீர் விடு தூது : தொலைதூரக் காதலின் காத்திருப்பு
அன்னக்கிளியிவள் உன்னினைவதனை,
சின்னச்சின்னதாய்ச் சேர்த்து வைத்தேன்...
சேர்த்து வைத்தத் துளிகளெல்லாம்,
கோர்த்து நிற்கிறது கண்களுக்குள்....
தன்னந் தனிமையில் என்துணையாய்,
கன்னக் கதுக்கத்தில் நீரணைக்க....
உறவுகள் ஆயிரம் ஊர்முழுதும் இருந்தாலும்,
உள்ளத்தில் உன்நினைவு ஊற்றாய்ப் பெருக்கெடுக்க,
நினைவென்னும் நீர்ப்பறவை நீந்துகிறது
மனமென்னும் ஆழ்கடலில் மகிழ்வாய்...
கனவென்னும் கற்பனையிலும் கூட
கால்பதித்துச் சிரிக்கிறது கனிவாய்...
மனதுக்குள் நுழைந்து மயிலிறகாய் வருடி,
மருந்திட்ட உன் நினைவுகளெல்லாம்
மாற்றம் பெற்று நிற்கின்றன,
கரையில்லா காட்டாற்று வெள்ளமாய்....
பிரிவென்ற போர்வாளால் உள்ளத்தை இரணமாக்கி,
திரியிட்டு எரிக்கிறது என்னை...
பிறிதொன்றைத் தேடாமல் கண்ணதனைக் குளமாக்கி,
கரையிட்டுத் தடுக்கிறது பெண்மை....
மையல் கொண்ட மனதுக்குள் மையமிட்டு,
காதலழுத்த தாழ்வு மண்டலமாய்....
ஆழ் மனதின் சிறை உடைத்து
ஆழிப் பேரலையாய்ப் பறை எழுப்பி...
கண்களில் தெரிவதெல்லாம் உன்முகமாய்..
காதினில் ஒலிப்பதெல்லாம் உன் குரலாய்..
கானல் நீரெனக் கைகொட்டிச் சிரிக்கிறது..
காதலும் சாதலும் ஒன்றுதானென்று
கவிஞன் எவனோ சொன்னானென்று....
நந்தலாலாப் பாடலென தீயினுள் துடிக்கிறது..
நாளுமுந்தன் உறவையெண்ணி இராப்பகலாய் தவிக்கிறது...
தொலைவுகளில் நீ இருப்பதைக் கூட தாங்கிகொள்கிறேன்..
உன்னைத்
தொலைத்திடுவேனோ என்ற பயத்தினில்தான்
தினம் மரித்துப்போகிறேன் மனதால்...
இதயத்தில் சுமக்கும் உன் நினைவே துணையாய்..
இருவிழியில் வடிக்கும் கண்ணீரேப் பெருந்துணையாய்..
நானும் இருக்கிறேன்... நாளும் கடக்கிறேன்...
துணை நிற்கத் தோழியில்லை..
தூதனுப்ப யாருமில்லை...
என்னதான் செய்யமுடியும்???
எங்கோ இருக்கும் உன்னையெண்ணி,
ஏங்கித் தவிக்குமிந்த பேதையினால்..
எதை அனுப்பி வைப்பேன் உனக்கு...
என் காதலை முழுதாய்ச் சொல்லிட..
பூங்காற்றும் திசை மாறிவிட்டது...
புதுமலரும் இதழ் வாடிவிட்டது..
வான்மதியும் தேய்ந்து விட்டது...
வசந்த பறவை சிறகொடிந்துவிட்டது...
இறுதியில் கண்டறிந்தேன்..
எனக்கென்று ஒன்று இருக்கிறது
இவ்வகிலத்தில்..
எனக்காக தூது செல்ல..
என் காதலை உன்னிடம் சேர்ப்பதற்கு..
யாரால் சொல்ல முடியும்??
என் காதலை முழுமையாய்..
உன்னை நினைத்து
நான் வடிக்கும் கண்ணீரை விட..
ஆதலால்..
கரையிட்டுத் தடுத்த கண்ணீரையே,
காதலுக்குத் தூதாக்கி அனுப்புகிறேன்...
கண்களில் ஊற்றெடுத்து, நதியெனப் பெருக்கெடுத்து,
கடலென வந்துசேருமென் காதல்....
கால்வருடும் அலையாக உன்னைத்தேடி...
துரிதமாய் வந்து சேர்வாய்,
தூதுவன் சேதி கேட்டு...
காதலுடன் காத்திருக்கிறேன்...
கண்ணெதிரே நீ வருவாயென....
கரம்பிடித்தெனை மணப்பாயென....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்